×

ஊட்டி பார்சன்ஸ்வேலி 3-வது குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு: ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணானது

ஊட்டி: ஊட்டி நகராட்சிக்கு குடிநீர் வழங்கும் பார்சன்ஸ்வேலி அணை 3-வது  குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணானது.ஊட்டி  நகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பார்சன்ஸ்வேலி அணை  உள்ளது.  இந்த  அணையில் இருந்து ஊட்டி நகருக்கு குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு  விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 3-வது குடிநீர் திட்டம்  நிறைவேற்றப்பட்டு கடந்த ஓராண்டிற்கு முன்பு பயன்பாட்டிற்கு கொண்டு  வரப்பட்டது. ஊட்டி நகரில் 3க்கும் மேற்பட்ட இடங்களில் பெரிய  அளவிலான தொட்டிகள் அமைத்து அதன் மூலம் குடியிருப்புகளுக்கு தண்ணீர்  விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், ஊட்டி - குன்னூர் சாலையில்  சவுத் வீக் பகுதியில் நீரேற்று நிலையம் மற்றும் குடிநீர் தொட்டி உள்ளது. நேற்று காலை இந்த தொட்டியின் மீதுள்ள ராட்சத குழாயில் சேதம் ஏற்பட்டு  தண்ணீர் பல அடி உயரத்திற்கு பீய்ச்சியடித்தது. சாலையிலும்  பீய்ச்சியடித்ததால் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டது. குறிப்பாக,  இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் பாதிப்படைந்தனர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் வெளியேறிய நிலையில் பல ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் சாலையில்  ஓடி வீணானது. இது  குறித்து தகவலறிந்த நகராட்சி ஊழியர்கள் தொட்டிக்கு வரும் தண்ணீரை  நிறுத்தினர். தொடர்ந்து தொட்டி மீது  உள்ள வால்வுகளை சரி செய்தனர்.


Tags : Ooty Parsons Valley , Ooty Parsons Valley 3rd Breakage in drinking water project pipe: Thousands of liters of water were wasted
× RELATED ஊட்டி பார்சன்ஸ்வேலி 3-வது குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு