×

கூடலூர் அருகே சேற்றில் சிக்கி குட்டி யானை பலி: தாய் யானை பாசப்போராட்டம்

கூடலூர்: கூடலூர் அருகே சேற்றில் சிக்கி குட்டி யானை பலியானது. நீலகிரி மாவட்டம் கூடலூர் செம்பாலை பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தின் பின்புறம்ள ஒரு பள்ளத்தாக்கில் யானை குட்டி ஒன்று இறந்து கிடந்தது.  தகவலறிந்த வனத்துறையினர் வனச்சரகர் கணேசன் தலைமையில் சம்பவ இடத்துக்கு வந்தனர். இறந்த குட்டி யானையின் தாய் யானையும், மற்றொரு யானையும் அங்கு நின்றன. இறந்து கிடந்த குட்டி யானைக்கு அருகில் வனத்துறையினர் செல்ல முயன்றனர். ஆனால் மற்ற 2 காட்டு யானைகளும் இறந்த குட்டி யானையின் அருகே வர முடியாதவாறு தடுத்தன. வெகுநேரம் முயன்றும் முயற்சி பலனளிக்கவில்லை.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘‘ இந்த பகுதியில் உள்ள வாழைத்தோட்டத்துக்கு உணவு தேடி யானைகள் வந்துள்ளன. திரும்பிச்செல்லும்போது குட்டி யானை சேற்றில் சிக்கி இறந்திருக்கலாம்.  2 யானைகளும் அங்கிருந்து சென்றால்தான் இறந்த குட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய முடியும்,’’ என்றனர்.  இறந்த குட்டி யானையின் அருகே வனத்துறையினரை செல்ல விடாமல் தாய் யானை பாசப்போராட்டம் நடத்தி வருவது நெஞ்சை உருக்குவதாக உள்ளது. தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Güdalur , Baby elephant killed in mud near Kudalur: Mother elephant fight
× RELATED கூடலூர் வனக்கோட்டத்தில் ஒரு வயது மதிக்கத்தக்க யானை குட்டி மீட்பு