சென்னை: தமிழகம் முழுவதும் ஊராட்சி மன்றங்களின் ஒப்புதல் இல்லாமல் அறிவிக்கப்பட்ட 2,369.86 கோடி மதிப்பிலான ஊராட்சி மன்றங்களின் சாலை மேம்பாட்டு டெண்டர் அறிவிப்பாணையை சென்னை நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் 14வது நிதிக் குழுவின் பரிந்துரையின் பேரில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த நிதி ஒவ்வொரு ஊராட்சிக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது. ஊராட்சியில் வசிக்கும் மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற அந்தந்த ஊராட்சி மன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் தமிழகத்திற்கு 2015 முதல் 2019 வரை 3,269.99 கோடியும் 2019-20ம் ஆண்டிற்கு 2,369.86 கோடியும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.இந்த சாலைகளை அமைக்க ஊராட்சி மன்றங்களின் ஒப்புதல் தேவை. ஆனால் ஊராட்சி மன்ற தீர்மானங்கள் இல்லாமலேயே தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அலுவலர் மூலமாக தன்னிச்சையாக திட்டங்களை தேர்ந்தெடுக்கின்றனர்.
ஊராட்சி மன்ற ஒப்புதல் இல்லாமலும் கிராம சபையின் ஒப்புதல் இல்லாமலும் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக தமிழக அரசு அதிகாரிகள் மூலமாகவே திட்டங்களை தேர்ந்தெடுத்து செயல்படுத்த உள்ளது. ₹2,369.86 கோடி மதிப்பிலான இந்த திட்டங்களை தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே சட்டவிரோதமான இந்த டெண்டர் அறிவிப்பாணையை ரத்து செய்ய கோரி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஜோதிமணி குமரேசன், திருவண்ணாமலை மாவட்டம் தேவநத்தம் ஊராட்சி தலைவர் ரமேஷ், தர்மபுரி மாவட்டம் பொன்னேரி ஊராட்சி மன்ற தலைவர் அழகுராஜா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு நடந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல்கள் பி.வில்சன், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள். அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அர்விந்த் பாண்டியன் ஆஜராகி வாதிட்டார்.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் பி.வில்சன், என்.ஆர்.இளங்கோ வாதிடும்போது, அரசியலமைப்பு பிரிவில் கொண்டுவந்த திருத்தத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தரப்பட்டுள்ள அதிகாரத்தில் மாநில நிர்வாகம் தலையிட முடியாது. ஆனால், இந்த சட்ட விதிகளுக்கு முரணாக உள்ளாட்சி அமைப்புகளான ஊராட்சி, பஞ்சாயத்துகளின் அனுமதியோ, ஒப்புதலோ பெறாமல் தன்னிச்சையாக தனி அதிகாரிகளை நியமித்து சாலைகள் அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. எனவே, விதிகளுக்கு முரணான இந்த டெண்டர் அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டனர்.அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அர்விந்த் பாண்டியன் ஆஜராகி, டெண்டர் கோரும்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை. அதனால், உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரம் என்ற கேள்வி இந்த வழக்கில் எழாது என்றார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: மத்திய அரசு 14ம் நிதிக்கமிஷனின் பரிந்துரையின்படி தமிழக அரசுக்கு 2015-20 நிதியாண்டுகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி வழங்கியுள்ளது. உள்ளாட்சிகளில் சாலைகள் பராமரித்தல், பாலங்கள் பராமரித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு இந்த நிதி செலவிடப்படும். உள்ளாட்சி அமைப்புகளின் ஒப்புதலுடன் இந்த பணிகள் நடைபெற வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் கண்காணிப்பில் பணிகள் நடைபெற வேண்டும். நிதியும் பஞ்சாயத்துகளுக்குத்தான் வழங்கப்பட வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. கடந்த 2019 நவம்பர் 5ம் தேதி இந்த பணிகளுக்கான டெண்டர் குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டபோது உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப்படவில்லை. ஆனால், 2019 டிசம்பரில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு 2020 ஜனவரியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பதவியேற்றனர்.
இந்நிலையில் 2020 ஆகஸ்ட் 18ம் தேதி ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் இயக்குநர் மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் டெண்டர் பணிகளுக்கான நடைமுறைகளை இறுதி செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. எனவே, அதுவரை சாலை பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்று தெரியவருகிறது. அதுமட்டுமல்லாமல் 2020 பிப்ரவரி 14ல் சட்டப் பேரவையில் பட்ஜெட்டில்தான் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கு முன்பே இந்த டெண்டர் பணிகள் தொடங்கப்பட்டது என்ற கேள்வி எழவில்லை. பட்ஜெட் ஒதுக்கீடுக்கு முன்பே உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பதவியேற்றுள்ளனர். எனவே, பணி ஒப்பந்ததாரர்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சியின் முடிவின் பிறகே நியமிக்கப்பட வேண்டும்.
இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒட்டுமொத்த ஆவணங்களை பார்க்கும்போது டெண்டர் விஷயத்தில் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் ஓரங்கட்டப்பட்டு நிதிக்கான காசோலையில் (கவுன்டர் சைன்) கையொப்பம் இடும்போது மட்டும் அவர்களுக்கு விவரம் தெரிவிக்கப்படுகிறது. இது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான திட்டங்களுக்கு எதிரானது என்பது புலனாகிறது. ஊராட்சிகள் சுதந்திரமான முறையில் முடிவெடுத்து அவற்றை அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் பஞ்சாயத்துராஜ் முறை அங்கீகாரம் பெறும். மாநில அரசும் அதிகாரிகளும் பஞ்சாயத்துகள் தங்களின் கீழ் உள்ளவர்கள் என்ற எண்ணமும் செயல்பாடும் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுக்களின் மூலம் தெரியவருகிறது. இந்த எண்ணம் அகற்றப்பட்டு அரசியலமைப்பில் பஞ்சாயத்துகளுக்கு தரப்பட்டுள்ள அதிகாரம் மூலம் நிதிக்குழுவின் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்.
எனவே, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் இயக்குநர் அறிவித்த டெண்டர்கள் அனைத்தையும் ரத்து செய்வதில் நீதிமன்றத்திற்கு எந்த தயக்கமும் இல்லை. எனவே, இந்த டெண்டர் நடவடிக்கை அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. அதேநேரத்தில் எங்கெல்லாம் பணிகளுக்கான உத்தரவு வழங்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றதோ அங்கு பணிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். அந்தந்த ஊராட்சிகளில் நடைபெற வேண்டிய பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட கிராம சபைகள் கூடி முடிவெடுத்து பஞ்சாயத்துகளுக்கான நிதியை பயன்படுத்த வேண்டும். நிதியை சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துகளுக்கு வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும். பணிகளுக்கான புதிய டெண்டர்களை சட்ட விதிகளுக்கு உட்பட்டு வெளியிட வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார். ஊராட்சி மன்றங்கள் அனுமதியில்லாமல் அதிகாரிகள் வாயிலாக செயல்படுத்த திட்டமிட்டிருந்தது அரசியலமைப்புக்கு எதிரானது - நீதிபதி
