- தம்பரம் நகராட்சி காவல் துறை
- சோஷிங்கநல்லூர்
- வீட்டு வசதி வாரியம் அபார்ட்
- தாராய்பக்கம்
- தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்
- சோசிங்காநல்லூர்
- தாம்பரம் போலீஸ் கமிஷன்
துரைப்பாக்கம், மே 23: தாம்பரம் காவல் ஆணையரகத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களின் வாழ்வாதாரம், மனநிறைவு மற்றும் பணித்திறனை மேம்படுத்தும் ஒரு முக்கிய நலத்திட்டமாக, சோழிங்கநல்லூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்ய தாம்பரம் போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் நேற்று உத்தரவு பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து தமிழக டிஜிபி ஒப்புதலின் கீழ், சோழிங்கநல்லூர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வளாகத்தில் உள்ள புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், தாம்பரம் காவல் ஆணையரகத்தின் கீழ் பணிபுரியும் காவலர்களுக்கு பிரத்யேக குடியிருப்புகளாக மாற்றப்பட்டுள்ளன.
அதன்படி, உயர் வருவாய் பிரிவில் 1 உதவி கமிஷனர் மற்றும் 3 காவல் ஆய்வாளர்களுக்கும், மத்திய வருவாய் பிரிவில் 14 காவல் உதவி ஆய்வாளர்கள், 2 சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 10 தலைமை காவலர்களுக்கும் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 67 குடியிருப்புகள் அனைத்தும் காவலர்களின் பயன்பாட்டிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இது காவலர்கள் தங்களது பணியிடங்களுக்கு எளிதில் சென்று வரவும், களப்பணியை தடையின்றி மேற்கொள்ளவும் பெரிதும் உதவியாக இருக்கும்.
தாம்பரம் ஆணையரகத்தில் பணிபுரியும் காவல் துறையினருக்கு சிறந்த வீட்டு வசதி, மேம்பட்ட வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை உறுதி செய்வதோடு, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில், அவர்கள் கூடுதல் அர்ப்பணிப்புடன் செயல்பட வழிவகுக்கும் நோக்கில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.
