சென்னை, மே 23: பெருங்குடி குப்பை கிடங்கில் உள்ள 225 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலப்பரப்பில், 6 சிப்பங்களாக பிரிக்கப்பட்டு, தூய்மை இந்தியா 1.0 திட்ட நிதியின் கீழ் ரூ.350.065 கோடி மதிப்பில், தரைமட்டத்திற்கு மேலாக குவிக்கப்பட்டிருந்த சுமார் 29.28 லட்சம் கனமீட்டர் மரபுவழி கழிவுகளை சுற்றுச்சூழலுக்கு உகந்த பயோமைனிங் முறையில் அகற்றி நிலத்தை மீட்டெடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மொத்தம் உள்ள 6 சிப்பங்களில், சிப்பம் 3, 4 மற்றும் 5 ஆகியவற்றில் பணிகள் முழுமையாக நிறைவு பெற்று 94 ஏக்கர் நிலப்பரப்பு மீட்டெடுக்கப்பட்டுள்ளது. பெருங்குடியில் நிறைவு செய்யப்பட்ட பயோமைனிங் திட்டத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் நேற்று ஆய்வு செய்தார்.
இத்திட்டத்தின் முதல் கட்டத்தில், பயோமைனிங் தொழில்நுட்பத்தின் மூலம் 29,283.98 கனமீட்டர் பழைய திடக்கழிவுகள் அறிவியல் முறையில் அகற்றப்பட்டுள்ளன. மேலும், இந்த பயோமைனிங் திட்டத்தின் மூலம் மீட்கப்பட்ட 94 ஏக்கர் நிலப்பரப்பையும் ஆணையர் சமீரன் பார்வையிட்டார். தொடர்ந்து, பெருங்குடி குப்பைக்கிடங்கில் 2ம் கட்டமாக ரூ.53.60 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் 5.50 லட்சம் மெட்ரிக் டன் பழைய திடக்கழிவுகளின் பயோமைனிங் முறையில் அகழ்ந்தெடுக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையர் சமீரன் பார்வையிட்டு, இப்பணிகளை திட்டக் காலத்திற்குள் முடித்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், பெருங்குடி குப்பைக் கிடங்கில் மீட்கப்பட்ட 94 ஏக்கர் நிலப்பரப்பின் ஒரு பகுதியில் அமைக்கப்படவுள்ள 100 மெட்ரிக் டன் திறன் கொண்ட உரமயமாக்கும் நிலையத்தின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, அப்பணிகளை விரைந்து முடித்து 30 ஜூன் 2026க்கு முன்னர் நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தினார். பெருங்குடியில் அமைந்துள்ள 400 மெட்ரிக் டன் திறன் கொண்ட கட்டுமான மற்றும் இடிபாட்டுக் கழிவு மறுசுழற்சி மற்றும் செயலாக்க நிலையத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, அதன் செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்தார். அங்கு தினசரி 500 முதல் 600 மெட்ரிக் டன் வரை கட்டுமான மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் செயலாக்கப்படுகிறது.
மேலும், பெருங்குடியில் அமைந்துள்ள 80 மெட்ரிக் டன் திறன் கொண்ட இளநீர் ஓடு மற்றும் தாவரக் கழிவுகளை செயலாக்கும் நிலையத்தை ஆய்வு செய்து, அதன் செயல்பாடுகளை மதிப்பீடு செய்தார். நிலையத்தின் செயல்திறனை மேலும் மேம்படுத்தி, உலகத்தரத்திலான இயந்திரங்களை பயன்படுத்திட வேண்டும் எனவும், குப்பை கொட்டும் வளாகத்தில் குப்பையை கொண்டு வரும் வாகனங்களை குப்பை மற்றும் தோட்டக் கழிவுகளை கொட்டிய பிறகு, அந்த வாகனங்களை நீரினால் சுத்தம் செய்திட வேண்டும். மறுசுழற்சி செய்யப்பட்ட கட்டுமான மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை மீண்டும் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
மேலும், மாநகராட்சிப் பகுதிகளில் உடனுக்குடன் குப்பையை அகற்றுதல் மற்றும் கட்டிட கழிவுகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை அலுவலர்கள் களஆய்வு மேற்கொண்டு, விதிமீறல்கள் மூலம் கொட்டப்படும் கட்டிட கழிவுகளை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆணையர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
