தண்டையார்பேட்டை, மே 26: ராயபுரம் ஆர்எஸ்ஆர்எம் அரசு மருத்துவமனையில் இருந்து குழந்தையை கடத்திய இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். போரூர் அடுத்த முகலிவாக்கத்தை சேர்ந்தவர் தேவராஜ். இவருடைய மனைவி கீதா (29). நிறைமாத கர்ப்பிணியான இவர், பிரசவத்திற்காக கடந்த 13ம் தேதி ராயபுரம் சிமென்ட்ரி சாலையில் உள்ள ஆர்எஸ்ஆர்எம் மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 15ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. கணவர், ஸ்டீல் பட்டறையில் வேலை பார்ப்பதால் கீதாவிற்கு உதவியாக வர முடியவில்லை.
இந்நிலையில், அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், கீதாவிற்கு உதவுவதாக கூறி, உடன் இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சிகிச்சை முடிந்து கீதாவை மருத்துவர்கள் வீட்டிற்கு செல்ல அனுமதித்தனர். குழந்தையுடன் கீதா முகலிவாக்கத்திற்கு செல்ல இருந்த நிலையில், உடன் இருந்த பெண், நானும் வீட்டுக்கு செல்கிறேன். ஆட்டோவில் செல்லலாம். போகும் வழியில் கொடுங்கையூரில் நான் இறங்கிக் கொள்கிறேன் என்று கீதாவிடம் கூறியுள்ளார். இதை நம்பிய கீதா, அவரிடம் குழந்தையை கொடுத்துள்ளார்.
மருத்துவமனைக்கு வெளியே உள்ள டீக்கடையில் கீதாவை நிறுத்திவிட்டு, ஆட்டோவை அழைத்து வருகிறேன் என்று எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு குழந்தையுடன் சென்று உள்ளார். அப்போது ஆட்டோவை அழைத்து வருவார் என்று கீதா காத்திருந்த நிலையில், அங்கு வந்த பேருந்தில் ஏறி அந்த பெண் குழந்தையுடன் தப்பி சென்று விட்டார். கீதா நீண்டநேரமாக காத்திருந்தும் குழந்தையுடன் அந்த பெண் வராததால் கடும் அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தில் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கீதா கொடுத்த புகாரின்படி, ராயபுரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
ராயபுரம் உதவி ஆணையர் பிரம்மானந்தன் மேற்பார்வையில், காசிமேடு ஆய்வாளர் மைனர்சாமி தலைமையிலான தனிப்படையினர் மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்தனர். அதில், கொடுங்கையூர் தென்றல் நகர் 4வது தெருவை சேர்ந்த ரோஸ்மேரி (29) என்பவர் குழந்தையை கடத்தியது தெரியவந்தது. அவரை பிடித்து, குழந்தையை மீட்டனர். விசாரணையில், இந்த கடத்தலுக்கு ரேஸ்மேரியின் கணவர் தாமஸ் (32). அவரது தாய் முருகேஸ்வரி (58) ஆகியோரும் உதவியது தெரிந்தது. மீட்கப்பட்ட குழந்தையை ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர்.
இதனிடையே ரோஸ்மேரி, ‘இது தனது குழந்தை என்று உரிமை கூறியதாக கூறப்படுகிறது. எனவே, குழந்தை யாருக்கு சொந்தமானது என்பது பற்றி அறிய டிஎன்ஏ சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவு வந்த பிறகு குழந்தை யாருக்கு சொந்தமானது என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
