மதுரை: தமிழகத்திலேயே நீண்ட சூப்பர் பறக்கும் பாலம் மதுரையில் 7.5 கி.மீ. தூரம் அமைக்கப்படுகிறது. பாலத்தில் இருந்து அழகர்கோவில் சாலை வழியாக மாட்டுத்தாவணிக்கு பாதை அமைக்கும் பணி துவங்கியுள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் பாலத்தை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து நத்தம் வரை 35 கி.மீ. சாலையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஏற்று ரூ. 1028 கோடியில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் திட்ட பணி 2018 செப்டம்பரில் துவங்கியது. இதில் மதுரை சொக்கிகுளம் முதல் ஊமச்சிகுளம் வரை 7.5 கி.மீ. தூரம் ரூ.612 கோடியில் பறக்கும் பாலம் கட்டப்படுகிறது. ரூ.416 கோடியில் ஊமச்சிகுளம் முதல் நத்தம் வரை 28 கி.மீ. தூரம் நான்குவழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது. சாலை விரிவாக்க பணி பெரும் பகுதி முடிந்துள்ளது.
பறக்கும் பாலத்திற்காக மொத்தம் 225 தூண்கள் அமைக்கும் பணி 80 சதவீதம் முடிந்துள்ளது. கட்டுமான பணியில் நவீன தொழில் நுட்பம் கடைபிடிக்கப்பட்டுள்ளது. சாலை நெடுகிலும் ஒற்றை தூண்கள் கட்டி, ரெடிமேடு கான்கிரீட் தளம் மூலம் இணைக்கப்பட்டு வருகின்றன. நாராயணபுரத்தில் பாலத்தின் மீது வாகனங்கள் ஏறி இறங்கும் வகையில் இரட்டை தூண்கள் அமைகின்றன. 2021 சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால், அதற்குள் பாலத்தை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே விரைவாக கட்டி முடிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எனவே சொக்கிகுளத்தில் இருந்து அழகர்கோவில் சாலை வழியாக மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் செல்லும் வகையில் பாலத்தில் பாதை அமைக்கப்படுகிறது.
இந்த பாதை அமைக்கும் பணியில் தற்போது மாநகராட்சி அலுவலகம் முன் தூண்கள் எழுப்ப குழி தோண்டும் பணி துவங்கி உள்ளது. இதற்காக அங்குள்ள பெரியார், அம்பேத்கர், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரது சிலைகளை அகற்றாமல், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டுமான பணி நடைபெறுகிறது. அழகர்கோவில் சாலையில் ஏறி இறங்க வசதியாக தல்லாகுளம் பெருமாள் கோயில் வரை பாதை அமைக்கப்பட உள்ளது. தூண்கள் இணைக்கும் பணி ஒரே நேரத்தில் 3 இடங்களில் நடைபெற்று வருகிறது. சொக்கிகுளத்தில் ஆரம்பித்த இணைப்பு பணி ஆயுதப்படை மாரியம்மன் கோயில் வரை பிரமாண்ட தோற்றத்துடன் காட்சி அளிக்கிறது. இதே போல் நாராணபுரம், ஊமச்சிகுளத்திலும் இணைப்பு பணிகள் நடைபெறுகின்றன. நாராயணபுரத்திலுள்ள கோயில் ஏற்கனவே நவீன தொழில்நுட்பம் மூலம் நகர்த்தி வைக்கப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 225 தூண்களில் 100க்கும் மேற்பட்ட தூண்கள் இணைந்துள்ளன. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொறியாளர் ஒருவர் கூறுகையில், ‘இன்னும் 10 மாதங்களில் பாலம் கட்டும் பணி முடிவடையும் என எதிர்பார்க்கிறோம். இதுவே தமிழகத்தின் நீண்ட பறக்கும் பாலமாகும். ஊமச்சிகுளத்தில் பறக்கும் பாலத்தில் இருந்து இறங்கியதும், புதிதாக அமைக்கப்படும் நான்குவழிச்சாலை வழியாக கொட்டாம்பட்டி சென்று திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இணைகிறது. எனவே பறக்கும் பாலம் வழியாக செல்லும்போது மதுரையில் இருந்து திருச்சிக்கு 23 கி.மீ. பயண தூரம் குறையும். மதுரை ரிங்ரோட்டில் இருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்தை குறைக்க வாய்ப்பு ஏற்படும். மதுரையில் இருந்து திருச்சிக்கு இந்த பாலத்தின் மூலம் 100 நிமிடங்களில் பயணிக்க முடியும்’ என்றார்.
