×

பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் 3% பேர் மட்டுமே: ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருக்கும் பரிதாபம்

மதுரை: பெண்கள் வன்கொடுமை தொடர்பாக பதிவு செய்யப்படும் வழக்குகளில் சராசரியாக 3 சதவீதம் பேருக்கே தண்டனை கிடைத்துள்ளது. ஆயிரக்கணக்கான வழக்குகள் நீதிமன்ற நிலுவையில் கிடப்பது எவிடன்ஸ் அமைப்பினர் திரட்டிய ஆர்டிஐ தகவலில் அம்பலமாகியுள்ளது. மதுரையில் உள்ள எவிடன்ஸ் அமைப்பு, 2017 ஜன. 1 முதல் 2019 செப். 30 வரை தமிழகத்தில் பெண் குழந்தைகள் மீதும் பெண்கள் மீது நடைபெற்ற பாலியல்ரீதியான வன்கொடுமைகள் குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் தகவல் திரட்டியிருக்கிறது. இதில் தமிழகத்தில் தேனி தவிர 31 மாவட்டங்களில் பெறப்பட்ட தகவல்களின்பேரில், இவ்வமைப்பு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் வருமாறு:

2019ல் அதிகம்

சிறுமிகள், பெண்கள் மீது பாலியல்ரீதியான வன்முறைகள் 2017ல் 1,627 சம்பவங்களும், 2018ல் 2,069 சம்பவங்களும், 2019 செப்டம்பர் வரை 1,855 சம்பவங்களும் நடந்திருக்கின்றன. 2017ஐ விட 2018ல் வன்முறை சம்பவங்கள் 26.7 சதவீதமும், 2019ல் 51.9 சதவீதமும் அதிகரித்திருக்கிறது.
இதுதவிர, தமிழகத்தில் 2019ஐ கணக்கிட்டால், பெண்கள் மீதான பாலியல் வன்முறை அதிகம் நடந்த மாவட்ட வரிசையில் முதலிடத்தை கிருஷ்ணகிரி (124), இரண்டாம் இடத்தை திருநெல்வேலி (123), மூன்றாம் இடத்தை மதுரை (117), நான்காம் இடத்தை விழுப்புரம் (97), ஐந்தாம் இடத்தை வேலூர் (96) பெறுகிறது.

இப்பட்டியலில் 2018ல் முதலிடத்தில் திருநெல்வேலி (152), இரண்டாம் இடத்தில் மதுரை (139), மூன்றாம் இடத்தில் விழுப்புரம் (119), நான்காம் இடத்தில் சேலம் (113), ஐந்தாம் இடத்தில் திருவண்ணாமலை (110) இடம் பெற்றிருக்கிறது. 2017ல் முதலிடத்தில் விழுப்புரம் (133), இரண்டாம் இடத்தில் சேலம் (118), மூன்றாம் இடத்தில் திருநெல்வேலி (115), நான்காம் இடத்தில் மதுரை (109), ஐந்தாம் இடத்தில் கிருஷ்ணகிரி (82) இடம் பெற்றிருக்கிறது. பதிவான வழக்குகளில் எத்தனை வழக்குகள் காவல்நிலைய, நீதிமன்ற நிலுவையில், விசாரணையிலும் உள்ளன என்பதும் ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது.

வழக்குகள் நிலுவை:

2017ல் பதிவான 1,627 சம்பவங்கள் முந்தைய வழக்குகளையும் கணக்கிட்டு பார்க்கும்போது நீதிமன்ற விசாரணையில் 961, நீதிமன்ற நிலுவையில் 599, காவல்நிலைய நிலுவையில் 212 வழக்குகள் உள்ளன. 2018ல் பதிவான 2,069 வழக்குகளில் நீதிமன்ற விசாரணையில் 1010, நீதிமன்ற நிலுவையில் 658, காவல்நிலைய நிலுவையில் 271 வழக்குகள் உள்ளன. 2019 ஜனவரி முதல் செப்டம்பர் வரை பதிவான மொத்த வழக்குகள் 1,855. இவற்றில் நீதிமன்ற விசாரணையில் 805, நீதிமன்ற நிலுவையில் 526, காவல்நிலைய நிலுவையில் 572 வழக்குகள் உள்ளன. இதில் காவல்நிலைய வழக்குகளில் 572 வழக்குகள் இடம் பெற்றிருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

வர்மா கமிட்டி பரிந்துரை:

2012ல் நிர்பயா சம்பவத்திற்கு பிறகு நீதிபதி வர்மா தலைமையில் 3 பேர் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த வர்மா கமிட்டி கொண்டு வந்த சில முக்கிய பரிந்துரைகளை அரசு நிராகரித்தது. இதில் முக்கிய பரிந்துரைகளாக, பாலியல் குற்றங்களில் ஈடுபடுகிற அரசியல்வாதிகள் தேர்தலில் நிற்க தடை விதிக்கவேண்டும். காவல் மற்றும் உயரதிகாரிகள் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால், அவற்றிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய மேல்மட்ட உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், அவர்களையும் குற்றவாளிகளாக சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்டவைகளாகும். எனினும் சில முக்கிய பரிந்துரைகளை அரசு ஏற்றது.

3 ஆண்டுகளில் 2 தண்டனை

இவ்வகையில், நீதிமன்றத்தை உருவாக்கி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த இரு மாதத்தில் தீர்ப்பு அளிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் ஆய்வு செய்து பார்த்த போது ஆயிரக்கணக்கான வழக்குகள் விசாரணையிலும் இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 165 வழக்குகளுக்குதான், அதாவது, வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களில் 3 சதவீதம் பேருக்கு மட்டுமே தண்டனை கிடைத்திருக்கிறது. மதுரை மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 2 வழக்குகளுக்கு மட்டுமே தண்டனை கிடைத்திருக்கிறது.

இதுகுறித்து எவிடன்ஸ் அமைப்பின் செயல் இயக்குனர் கதிர் கூறும்போது, ‘‘உச்சநீதிமன்றம் வர்மா கமிட்டி பரிந்துரையை நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை தாமாக முன்வந்து ஒவ்வொரு மாநிலத்திடமும் நிலைய அறிக்கையை பெற்று, அதனடிப்படையில் சிறப்பு உத்தரவினை வெளியிட வேண்டும். தேசிய பெண்கள் ஆணையம் ஒவ்வொரு மாநிலத்திலும் பெண்கள் மீது நடைபெறக்கூடிய பாலியல் வன்கொடுமை குறித்து பொது விசாரணை நடத்த வேண்டும். இதன்மூலமே பெண்கள் மீதான வன்கொடுமை வழக்குகளுக்கு விரைவில் தண்டனை வழங்க முடியும்’’ என்றார்.

Tags : women , Sexual Harassment, Case, Punishment, Pending
× RELATED தாயுடன் தூங்கிய 6 மாத பெண் குழந்தை கடத்தல்: 24 மணி நேரத்தில் 2 பெண்கள் கைது