கரூர்:கரூர் புதிய பேருந்துநிலையம் கட்ட கோர்ட்டு உத்தரவிட்டும் இழுத்தடிக்கப்படுகிறது. திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் நெரிசலில் மக்கள் சிக்கி தவிக்கின்றனர். கரூரில் தற்போது செயல்பட்டு வரும் முத்துக்குமாரசாமி பேருந்து நிலையத்தில் இடநெரிசலாக இருப்பதால் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை நீண்டகாலமாக உள்ளது. கடந்த 1996ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் திட்டத்திற்கு உரு கொடுக்கப்பட்டு தோரணக்கல்பட்டியில் இடம்தேர்வு நடைபெற்ற நிலையில் 2011ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து ஏற்கனவே தேர்வான இடம் கைவிடப்பட்டு புதிதாக இடம் தேர்வு செய்யப்பட்டது. கடந்த 2012ம் ஆண்டு புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்ய நகராட்சியில் முன்மொழிவு வைக்கப்பட்டது.
அதில், நகராட்சி நிர்வாக ஆணையர் கடிதப்படி புதிய பேருந்து நிலையம் அமைக்க தீர்மானம் கோரியதன் அடிப்படையில், இடம் தானமாக வழங்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இடத்தை தானமாக வழங்க தொழிலதிபர் அட்லஸ் நாச்சிமுத்துவுக்கு சொந்தமான இடம் 12.14ஏக்கர் கருப்பம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூரில் உள்ளதையும், சதீஸ்ராஜா என்பவர் மற்றும் 9 நபர்கள் 10 ஏக்கர் கரூர் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட தோரணக்கல்பட்டி கிராமத்தில் உள்ளதையும் அளிக்க முன்வந்துள்ளனர். இரண்டு விண்ணப்பங்களையும் நிபந்தனைகளையும் பார்வையிட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
அதன் அடிப்படையில் திருமாநிலையூர் இடத்தை தேர்வு செய்து நகராட்சியிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பதை தவிர்க்கும் வகையில் புதிய இடத்தில் நகருக்கு வெளியே, தற்போதைய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2கிமீக்குள் இந்த இடம் அமைந்திருப்பதால் திருமாநிலையூர் இடம் தேர்வு செய்யப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்கு தமிழகஅரசும் ஒப்புதல் அளித்தது. 2013ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது.
இதுதொடர்பாக வழக்குகளும் தொடரப்பட்டன. இந்நிலையில் 2014 நாடாளுமன்ற தேர்தலின்போது ஜெயலலிதா மேற்கண்ட இடத்தில் பிரசாரம் செய்தார்.
அதன்பிறகு இந்த இடத்தில் தான் பஸ்நிலையம் என்பது உறுதியானது. அதற்கான நடவடிக்கைகளை அப்போதைய போக்குவரத்து அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி மேற்கொண்டு வந்தார். திருமாநிலையூர் இடத்தில் பேருந்துநிலையம் அமைக்கக்கூடாது என அதிமுக கவுன்சிலர் ஏகாம்பரம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். கட்சி மேலிடத்தில் புகார் அளித்தும் கண்டு கொள்ளாததால் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். தனியாருக்கு சொந்தமான இடத்தில் பேருந்து நிலையம் அமைக்கக்கூடாது. நகராட்சி இடத்திலேயோ அல்லது அரசுக்கு சொந்தமான இடத்திலேயோ தான் அமைக்க வேண்டும். திருமாநிலையூர் இடம் கொடுத்தவர்கள் பல நிபந்தனைகளை விதித்துள்ளனர். வரும் காலத்தில் விரிவாக்கப்பணிகளுக்கான போதுமான இடம் கிடைக்காது.
மழைக்காலங்களில் அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பாதிப்பு ஏற்படும் என்றெல்லாம் ஆட்சேப கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. எனினும் இவை அரசால் நிராகிக்கப்பட்டன. எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானதும் மாவட்டம் தோறும் நடத்திய எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவும் இந்த இடத்தில் நடைபெற்றது. எனினும் பேருந்து நிலைய திட்டம் கண்டு கொள்ளப்படவில்லை. 2015ம் ஆண்டு மதுரை ஐகோர்ட் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 2016ம் ஆண்டு பேருந்து நிலையம் கட்ட உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவையும் அரசு கண்டுகொள்ளாததால் 2018ம் ஆண்டு கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. 2019மார்ச் மாதம் வழக்கில் நகராட்சி நிர்வாக துறை செயலாளர், ஆணையர் ஆகியோருக்கு கண்டனம் தெரிவித்தது.
22 மாதத்தில் புதிய பேருந்துநிலையம் அமைப்பதாக அரசு தரப்பில் உறுதிஅளிக்கப்படடது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் இடம் கொடுத்தவர் இடத்தைக்கேட்டு வழக்குதொடர்ந்துவிட்டார், இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கரூர் மாவட்டத்தில் எங்குபார்த்தாலும் இதே பேச்சாக இருந்தது. மாவட்ட தலைநகராக இருப்பதாலும், தொழில்நகரமாக இருப்பதாலும் கரூர் பேருந்து நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வருகிறது. நாள்தோறும் வேலைக்காக வரும் ஆயிரக்கணக்கானோர் பொதுமக்கள் நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர். மழைவெயிலில் ஒதுங்க இடம் இல்லை.
பொருட்கள் வைக்கும் அறை, கழிவறை, குளியலறை உட்கார போதுமானஇடம் இல்லை. ஒருமாவட்ட தலைநகரில்உள்ள பேருந்துநிலையம் போலவே இல்லை. சுகாதாரகேடு உச்சத்தில்உள்ளது. காலை நேரங்கள் வந்தால் மூக்கைப்பிடித்துக்கொண்டுதான் செல்ல வேண்டிய அவலநிலை தொடர்கிறது. மேற்கூரை காரைகள் பெயர்ந்து விழுந்து கொண்டிருக்கின்றன. டூவீலர் பார்க்கிங் இடம் பழுதாகி மூடப்பட்டுவிட்டது. கடைகளில் இருந்து வரவேண்டிய வாடகை பாக்கி கோடிக்கணக்கில் உள்ளது. சோமனூரில் பேருந்துநிலைய மேற்கூரை இடிந்துவிழுந்து உயிர் பலி ஏற்பட்டதைப்போல கரூரிலும் ஏற்படும் முன் பேருந்துநிலையத்தை மாற்றவேண்டும். மக்களுக்கும் தொல்லை, நகராட்சிக்கும் வருமானமும் இல்லாத பேருந்துநிலையத்தை மாற்றுவதில் ஏன் மெத்தனம் என்பதே அனைத்து தரப்பினராலும் எழுப்பப்படுகிற கண்டனமாக இருக்கிறது.
அடிப்படை வசதிகள் கிடையாது:
சமூக ஆர்வலர் மேலைபழனியப்பன் கூறுகையில், வாகனப்பெருக்கம், மக்கள்தொகை பெருக்கம் காரணமாக கரூர் பேருந்துநிலையம் நெருக்கடியான ஒருபேருந்துநிலையாமாகிவிட்டது. வெளியூர் பேருந்துகள் உள்ளேவந்துசெல்ல 15நிமிடம் ஆகிறது. தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் மணிக்கணக்கில் ஆகிவிடுகிறது. நெரிசலில் சிக்குவதோடு காலவிரயமும் ஆகிக்கொண்டிருக்கிறது. பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப அடிப்படை வசதிகள் கிடையாது. பல்வேறு மாவட்டங்களில் புதிய பேருந்து நிலையம் அமைத்து அனைத்து வசதிகளோடும் சிறப்பாக செயல்படுகிறது. பயணிகள் சிரமத்தைபோக்கும் வகையிலும், நிம்மதியாக வந்துசெல்கின்ற வகையிலும் புதிய பேருந்து நிலையத்தை உடனே அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
