×

நாமக்கல்லில் கனமழை: திருமணிமுத்தாற்றில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தற்காலிக தரைப்பாலத்தால் பொதுமக்கள் அவதி

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மதியம்பட்டி அருகே திருமணிமுத்தாற்றில் கட்டப்பட்ட தற்காலிக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஏற்காடு மலையடிவாரத்தில் உற்பத்தியாகும் திருமணிமுத்தாரானது சேலம் மாவட்டத்தில் பல்வேறு வழியாக பாய்ந்து நாமக்கல் மாவட்டத்தின் வழியே செல்லும் காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்த திருமணிமுத்தாற்றில் நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு குடிநீருக்கும் ஏதுவாக உள்ளது. இந்நிலையில் நேற்றிரவு சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக திருமணிமுத்தாற்றில் தற்போது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதை தொடர்ந்து ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மதியம்பட்டி மற்றும் செழிப்பாளையம் இடையிலான தரைப்பாலமானது தொடர்ந்து சேதப்பட்டு வந்தது.

இதனால் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி கடந்த 15 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதனையொட்டி மதியம்பட்டிக்கு தற்காலிகமாக மண் தரைவழிப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த கனமழையினால் ஆற்றின் வெள்ளப்பெருக்கு அதிகமாக ஏற்பட்டு மண்ணால் செய்யப்பட்ட தற்காலிக தரைப்பாலம் கரைந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் மதியம்பட்டி, செழிப்பாளையம், கல்கட்டனுர், கோரத்தபாளையம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் பொதுமக்கள் செல்ல முடியாமல் சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


Tags : Namakkal ,Namakkal Heavy ,floods ,Thirumani Mutt , Namakkal, Heavy Rain, Thirumani Muttur, Flood, Ground Bridge
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...