×

கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் பார் ஏலம் தாமதம்

கோவை:கோவை மாவட்டத்தில் 292 டாஸ்மாக் பார் ஏலம் அறிவிக்கப்பட்டது. கடந்த மாதம் அனைத்து பார்களும் ஏலம் விடப்பட்டிருக்கவேண்டும். ஆனால் நிர்வாக காரணம் எனக்கூறி பார் ஏலம் விடாமல் நிறுத்தப்பட்டது. வரும் 11ம் தேதியுடன் பார் நடத்துவதற்கான அனுமதி காலம் முடியும் நிலையிருக்கிறது. இந்நிலையில், பார் ஏலத்திற்கான தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. மறு டெண்டர் அறிவிப்பு இல்லாத நிலையில், ஏற்கனவே ஏலம் எடுத்தவர்கள், தொடர்ந்து பார் நடத்த கால நீடிப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. கோவை மாவட்டத்தில், 2.25 கோடி ரூபாய்க்கு பார் ஏலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தெற்கு, வடக்கு மாவட்ட பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானம் அதிகளவு விற்பனையாகிறது. தெற்கு மாவட்டத்தில் குனியமுத்தூர் டாஸ்மாக் கடையில் மாதந்தோறும் 2.5 கோடி ரூபாய் மதுபானம் விற்பனையாகிறது.

அன்னூர் ஓதிமலை ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில்  மாதம் 2 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையாகிறது. பேரூராட்சி, ஊராட்சி பகுதியை காட்டிலும் மாநகராட்சி எல்லைக்குள் அதிக டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் விற்பனையில் மாநகராட்சி பகுதிக்கு இணையாக ஊராட்சி, பேரூராட்சி பகுதி டாஸ்மாக் கடைகளில் விற்பனை அதிகமாகி வருகிறது. கடந்த சில ஆண்டாக 30 முதல் 40 டாஸ்மாக் கடைகளுக்கான பார் ஏலம் இறுதி செய்யாமல் முடக்கப்படுவது வாடிக்கையாக இருக்கிறது. சிலர் டாஸ்மாக் கடை அருகே முறைகேடாக, அனுமதியின்றி பார் நடத்தி வருவதாக தெரிகிறது. பார் ஏலம் விதிமுறைப்படி நடக்கவேண்டும். பார் ஏலம் போகாத கடைகளின் முன், பார் இல்லை என டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வைக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Coimbatore, Task, Bar Auction, Delay
× RELATED உ.பியில் இதுவரை 8 பாஜ எம்எல்ஏக்கள்...