×

நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் அடுத்தாண்டு முதல் 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிய உணவு: மத்திய அரசு திட்டம்

புதுடெல்லி: நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் பயிலும் 9ம் மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் அடுத்தாண்டு முதல் மதிய உணவு திட்டத்தை விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக ரமேஷ் பொக்ரியால் சமீபத்தில் பதவியேற்றார். அவருடைய தலைமையில் இத்துறையின் முதல் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவு திட்டம் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த மதிய உணவு திட்டம் 1995ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதலில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. 2007ம் ஆண்டு இத்திட்டம் 8ம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது நாடு முழுவதம் 12.5 லட்சம் அரசு பள்ளிகளில் 12 கோடி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. இதற்கான உணவு தானியத்தை மத்திய அரசு வழங்குகிறது. உணவு சமைக்கும் செலவை மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து கொள்கின்றன. இந்த மதிய உணவு திட்டத்தை 10ம் வகுப்பு வரை நீட்டிப்பது குறித்து நேற்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மதிய உணவு திட்டத்தை 10ம் வகுப்பு வரை நீட்டித்தால் கூடுதலாக ரூ.4 ஆயிரம் கோடி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டு உள்ளது என பள்ளி கல்வித்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்த திட்டத்தை மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பும் முன், செலவின நிதிக்குழுவுக்கு அனுப்பி கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை அடுத்த நிதியாண்டு முதல் அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என மனிதவள மேம்பாட்டுத் துறை நம்புகிறது.

22ல் மாநில கல்வி அமைச்சர்கள் கூட்டம்

தேசிய கல்வி கொள்கை குறித்து ஆலோசிக்க, மாநில கல்வி அமைச்சர்கள் கூட்டத்தை வரும் 22ம் தேதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில், மதிய உணவு திட்டத்தை 10ம் வகுப்பு வரை விரிவுபடுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. தேசிய கல்வி கொள்கை வரைவு திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன், காலை உணவையும் வழங்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : government schools ,lunch ,country ,Central Government Scheme , Government School, Lunch, Central Government Scheme
× RELATED சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்...