திண்டிவனம் : திண்டிவனத்தில் அரசு விரைவு பேருந்து நிலையம் இல்லாததால் பேருந்தை நடுரோட்டில் நிறுத்தி பயணிகளை ஏற்றும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது திண்டிவனம் அரசு விரைவு பேருந்து நிலையம். விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை விழுப்புரம் பேருந்து நிலையத்தில் விரைவு பேருந்துகளுக்கென்று ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் திண்டிவனத்தில் மட்டுமே அரசு விரைவு பேருந்துகளுக்கென்று தனியாக பேருந்து நிலையம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது கடந்த 1965ம் ஆண்டில் திறக்கப்பட்டதாகும். இதில் உணவகம் உட்பட 20-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் ஆண், பெண்களுக்கென தனித்தனியே கழிப்பறை ஆகியவை இருந்தது. இதனால் சென்னையிலிருந்து திருச்சி, கன்னியாகுமரி மார்க்கமாக செல்லும் விரைவு பேருந்துகளும் திருச்சி மார்க்கமாக இருந்து சென்னைக்கு செல்லும் சுமார் 500க்கும் மேற்பட்ட பேருந்துகளும் இங்கு நின்று சென்றதால் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இங்கு இறங்கி தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டனர்.
மேலும் இதன் உள்ளே இருக்கும் பெட்ரோல் பங்க்கில் பேருந்துகளுக்கு டீசலும் நிரப்பி செல்வதுடன் பழுதாகும் வாகனங்களையும் பழுது பார்க்க மெக்கானிக்குகளும் இங்கு இருந்தனர். இந்நிலையில் இந்த பேருந்து நிலையமானது கடந்த சில ஆண்டுகளாக கட்டிடங்கள் சரியான முறையில் பராமரிக்கப் படாமல் கட்டிடங்கள் விரிசல் விட்டு ஜன்னல்கள் உடைந்த நிலையில் காணப்பட்டது. இதனை சரிசெய்ய இங்கு கடைகளை வாடகைக்கு எடுத்து வியாபாரம் செய்து வந்தவர்கள் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லையென கூறப்படுகின்றது. இருப்பினும் வாடகையை மட்டும் சரியாக வசூலிப்பதில் மட்டுமே குறியாக இருந்ததாக தெரிகின்றது.
இதனால் இங்கிருந்த கடைகள் மற்றும் உணவகம் ஆகியவை ஒன்றன் பின் ஒன்றாக காலி செய்யப்பட்டது. இதனால் பேருந்துகள் இங்கு நின்று செல்வதை தவிர்த்து சாலையோர உணவகங்களில் நின்று சென்றது. இதனால் பேருந்து நிலையத்தில்இருந்த பெட்ரோல் பங்க் உட்பட அனைத்தும் செயலிழந்தது. மேலும் நாளடைவில் பேருந்து நிலைய கட்டிடமும் அதிகமாக சிதிலமடைந்து உடைந்து விழும் நிலைக்கு வந்தது. இதனால் இந்த கட்டிடத்தை தரைமட்டமாக்க வேண்டும் என பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து, சம்பந்தப்பட்ட நிர்வாகம் இதனை இடித்து தரைமட்டமாக்கியது.
இந்நிலையில் இந்த பேருந்து நிலையத்தை தினமும் கடந்து செல்லும் 500-க்கும் மேற்பட்ட அரசு விரைவு பேருந்துகள் திண்டிவனத்தின் மேம்பாலம் கீழே நடுரோட்டிலேயே பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது போன்ற நேரங்களில் இந்த சாலை திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை என்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதோடு, விபத்து சம்பவங்களும் நடந்து வருகிறது. சமீபத்தில் கோடிக்கணக்கில் செலவு செய்து புதிய விரைவு பேருந்துகளை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ள தமிழக அரசு திண்டிவனம் விரைவு பேருந்து நிலையத்தை விரைவில் கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

