கரூர்: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் அரவிந்த் (30). இவரது மனைவி ஜனனி (28). இவர்களுக்கு துவிதா (3) என்ற பெண் குழந்தை உள்ளது. ஜனனி மீண்டும் 8 மாதம் கர்ப்பமாக இருந்தார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு நேற்றுமுன்தினம் இரவு இவர்கள் காரில் புறப்பட்டனர். காரை உசிலம்பட்டியை சேர்ந்த வீரா (40) என்பவர் ஓட்டினார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த ஈசநத்தம் பிரிவுரோடு அருகே நேற்று காலை 6.30 மணிக்கு கார் வந்தபோது, அரவக்குறிச்சி கலைவாணர் தெருவை சேர்ந்த பாண்டிதுரை (32) என்பவர் பைக்கில் திடீரென பிரிவு ரோட்டில் இருந்து சாலையை கடக்க முயன்றார். பைக் மீது மோதாமல் இருக்க திருப்பியபோதும் அதன்மீது மோதி சாலையோரம் நின்றிருந்த லாரி மீதும் கார் மோதியது. இதில், லாரியின் அடியில் கார் சிக்கி உருக்குலைந்து அரவிந்த், ஜனனி, டிரைவர் வீரா ஆகியோர் உயிரிழந்தனர். சிறுமி துவிதா, பைக்கில் வந்த பாண்டிதுரை ஆகியோர் படுகாயமடைந்தனர்.

