×

‘வீட்டுக்கு வந்து விசாரிச்சா கொன்னே போடுவோம்’ போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து பெண் ஏட்டுக்கு கொலை மிரட்டல்: காரைக்குடியில் ரவுடி பிரதர்ஸ் கைது

காரைக்குடி: காரைக்குடியில் போலீஸ் ஸ்டேஷனில் புகுந்து பெண் ஏட்டுவை மிரட்டிய 2 ரவுடிகளை போலீசார் கைது  செய்தனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் ஏட்டுவாக பணியாற்றி வருபவர் ஜெயா செல்வி. இவர் நேற்று முன்தினம் காவல் நிலையத்தில் தனியாக இருந்துள்ளார். அப்போது சகோதரர்கள் மற்றும் ரவுடிகளான சூர்யபிரகாஷ் (எ) சூர்யா (27), தங்கசாமி (எ) நவீன் ஆகியோர் ஸ்டேஷனுக்கு வந்தனர்.

இருவரும், ‘‘நாங்கள் வீட்டில் இல்லாதபோது எங்கள் வீட்டிற்கு வந்து விசாரித்த போலீஸ் யார் என்று சொல்ல வேண்டும்?’’ என கேட்டு ஜெயா செல்வியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். மேலும், ‘‘எங்களை தேடி வீட்டிற்கு போலீஸ் வந்தால் கொல்லாமல் விடமாட்டோம்’’ என்று மிரட்டி சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஏட்டு ஜெயா, ரோந்து பணிக்கு சென்ற இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, ரோந்து போலீசார் சூர்ய பிரகாஷ், தங்கச்சாமி ஆகியோரை பிடித்து, காரைக்குடி வடக்கு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனைத்தொடர்ந்து பெண் ஏட்டுவை மிரட்டியதாக போலீசார் வழக்குப்பதிந்து சூர்யபிரகாஷ், தங்கச்சாமியை கைது செய்தனர். பெண் ஏட்டுவை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Rowdy ,Karaikudi ,Jaya Selvi ,South police ,Sivaganga district ,
× RELATED மகளுக்கு ஆடம்பரமாக திருமணம்...