ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே கீழமுந்தல் கிராமத்தை சேர்ந்த பெண்கள், நேற்று முன்தினம் மனு அளிப்பதற்காக ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்தனர். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்று விட்டு, இடையில் அவசர பணி காரணமாக கலெக்டர் சிவகுருபிரபாகரன் தனது அலுவலகம் சென்று விட்டு, மீண்டும் குறைதீர்க்கும் கூட்ட அரங்கிற்கு காரில் வந்தார்.
அப்போது கீழமுந்தல் கிராம பெண்களுடன் அதே ஊரை சேர்ந்த தவெக துணை செயலாளர் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட தவெக நிர்வாகிகள் வந்திருந்தனர். இவர்களில் சிலர் ரீல்ஸ் எடுத்தபடியே, கலெக்டரின் காரை வழிமறிப்பதுபோல பெண்களை அழைத்து சென்றனர். இதனை பார்த்து காரை விட்டு இறங்கிய கலெக்டர், பெண்களிடம் மனுவை பெற்றார். அதில், தங்களது கிராமத்தில் சட்ட விரோதமாக மது மற்றும் கஞ்சா விற்பனை நடக்கிறது.
இதுகுறித்துவாலிநோக்கம் போலீசாரிடம் புகார் அளித்தால், போலீசாரின் தூண்டுதலின்பேரில் விற்பனையில் ஈடுபடுவோர் பெண்களை அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசி தாக்குதல் நடத்துகின்றனர். எனவே அவர்கள் மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர். நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறிச்சென்றார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

