×

6 மாவட்டங்களில் தேசிய பேரிடர் குழுக்கள் தயார் நிலை நெருங்கி விட்டது கஜா புயல்

சென்னை: வங்கக் கடலில் மையம்  கொண்டுள்ள ‘கஜா’ புயல் இன்று மாலை பாம்பன்-கடலூர் இடையே கரையைக் கடக்கும். இதனால் திருச்சி, தஞ்சாவூர், நாகை,  கடலூர் உட்பட 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை  விடப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. வங்கக் கடலில் தென் கிழக்கு பகுதியில் அந்தமானை ஒட்டி கடந்த 10ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று ‘கஜா’ புயலாக மாறியது. கடந்த 4 நாட்களாக அந்த புயல் தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் நகர்ந்து வந்தது. மணிக்கு 7 கிமீ வேகம் என்று தொடங்கி தற்போது மணிக்கு 5 கிமீ வேகத்தில் அந்த புயல் நகர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. நேற்று இரவு நிலவரப்படி புயல் சென்னைக்கு தென் கிழக்கே 460 கிமீ தொலைவிலும், நாகப்பட்டினத்துக்கு சுமார் 550 கிமீ தொலைவிலும் மையம் கொண்டு இருந்தது. அது மேலும் மணிக்கு 6 கிமீ வேகம் முதல் 10 கிமீ வேகத்தில் நகரும் தன்மை கொண்டதாக மாறியுள்ளது. இந்நிலையில், இன்று கஜா புயல் தமிழகத்தை ஒட்டிய கடலோரப் பகுதியான நாகப்பட்டினம் அருகில் வரும். இன்று மாலை பாம்பன்-கடலூர் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 100 கிமீ வேகத்தில் காற்று வீசும். கனமழை பெய்யும். இதையடுத்து, புயல் நாளை உள் தமிழகத்துக்கு நகர்ந்து மேற்கு நோக்கி செல்லும்.

இதனால் நாகப்பட்டினம், தஞ்சாவூர், கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யும். அத்துடன் கேரளா, ராயலசீமா பகுதிகளில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும். நாளை கேரளாவை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்யும். புயல் கரையைக் கடக்கும் போது தொடக்கத்தில் மணிக்கு 45 கிமீ வேகத்தில் தொடங்கும், பின்னர் படிப்படியாக அதிகரித்து மணிக்கு 80 கிமீ வேகம் முதல் 100 கிமீ வேகத்தில் காற்று வீசும். கடலில் அதிகமாக சீற்றம் காணப்படும். ஒரு மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள் எழும்பும். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரியை ஒட்டியுள்ள பிற மாவட்டங்களிலும் மழை பெய்யும். புயல் கரையை கடந்து செல்லும் பகுதிகளில் கனமழை காரணமாக இயல்பு நிலையை விட கூடுதலாக மழை பெய்யும் என்பதால் பெரும்பாலான இடங்களில்  வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலை உருவாகும். காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் போது குடிசை வீடுகள் காற்றில் வீசி எறிப்படும். மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். 15ம் தேதி புயல் கரையை கடந்த பிறகு மெல்ல தீவிரம் குறையத் தொடங்கும். 16ம் தேதி அது மேலும் குறைந்து தீவிர காற்றழுத்தமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, சென்னையிலும் இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது.

வழக்கம் போல் தேர்வு அண்ணா பல்கலை. அறிவிப்பு


அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைவு பெற்று தமிழகம் முழுவதும் இயங்கி வரும், இன்ஜினியரிங் கல்லூரிகளில் பல்வேறு பாடப்பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்கு இன்று செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கஜா புயலால் தமிழகத்தில் கரையை கடக்கிறது. இதனால் செமஸ்டர் தேர்வு எழுத வரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகளை தொடர்புகொண்டபோது, ‘‘பலத்த மழை பெய்யாவிட்டால் வழக்கம் ேபால் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும். பலத்த மழை பெய்யும்பட்சத்தில், செஸ்டர் தேர்வுகளை தள்ளிவைப்பது தொடர்பாக இன்று காலை முடிவெடுக்கப்பட்டு உடனடியாக விடுமுறை தொடர்பாக கல்லூரிகளுக்கு அறிவிக்கப்படும்’’ என்றனர்.

தென் மாவட்டங்கள் உஷார்

* கஜா புயலின் அடர்த்தி அளவீடுகளை பொறுத்தவரையில் மிக அடர்த்தியான மேகங்கள் மேற்கு மற்றும் தென் மேற்கு  திசையில் நகர்ந்து வருவதால், தமிழகத்தின் தென் பகுதியில் தான் அதன் தாக்கம்  அதிகமாக இருக்கும் என்று தனியார் வானிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
* அதனால்  நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை,  மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் மற்றும் கோவை, விருதுநகர் மழை  பிடிப்பு பகுதிகள் ஆகியவற்றிலும், டெல்டா பகுதிகளில் சில, தெற்கு உள்  தமிழகம் ஆகிய இடங்களில் மிக அதிமான மழை அதாவது ‘ரெட் அலர்ட்’ மழை(200 மிமீ  முதல் 205 மிமீ வரை) அல்லது அதற்கு அதிமாகவோ பெய்யும்.
* இதுதவிர கடலூர்,  புதுச்சேரி, உள்ளிட்ட வட தமிழகத்தின் உள் பகுதிகளிலும் மழை பெய்யும். இந்நிலையில், கஜா புயல் கடலூர்- வேதாரண்யம் இடையே கரை கடக்கும் போது  வலுவற்ற நிலையில் கரை கடக்க வாய்ப்புள்ளது என்றும் தனியார் வானிலை ஆய்வுகள்  தெரிவிக்கின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : calamity groups ,districts , National calamity groups, 6 districts ,getting ready
× RELATED தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில்...