×

தொழிலதிபரிடம் ரூ.20.50 கோடி பேரம் : கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு வலை

பெங்களூரு:  அமலாக்கத்துறை தொடுத்த வழக்கில் இருந்து விடுவிப்பதாக கூறி ெதாழிலதிபரிடம் ரூ.18 கோடி மதிப்புள்ள 57 கிலோ தங்கக் கட்டிகள் மற்றும் ரூ.2.50 கோடி ரொக்கம் வாங்கிய கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியை கைது செய்ய 3 தனிப்படையினர் அண்டை மாநிலங்களுக்கு விரைந்துள்ளனர்.பெங்களூரு டி.ஜே.ஹள்ளி சரகத்தில் அமைந்துள்ளது அபிடன்ட் என்ற தனியார் நிதி நிறுவனம். இதன் உரிமையாளர் சையது அகமது பரீத். சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் பெங்களூருவை சேர்ந்த தொழில் அதிபர்கள் மற்றும் பொதுமக்களிடம் தங்கள் நிறுவனத்தில் அதிகளவு பணம் முதலீடு செய்தால், 40 முதல் 50 சதவீதம் வரை வட்டி தருவதாக கூறியிருந்தார். அதை நம்பிய பொதுமக்கள் அதிகளவு பணம் முதலீடு செய்தனர். முதலில் கூறியபடி அதிகளவு வட்டி பெற்றுக் கொடுத்த நிறுவனம், பின்னர் நாட்கள் செல்ல செல்ல வாக்குறுதிப்படி சரியாக வட்டி தொகையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவில்லை.

இதனால் முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை திரும்ப தரும்படி கோரிக்கை வைத்தனர். ஆனால் நிறுவனம் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்கவில்லை. மாறாக அலட்சியமாக இருந்துவிட்டனர். பொதுமக்கள் எவ்வளவோ போராடியும் பணத்தை பெற முடியவில்லை. இதையடுத்து ஒரு சிலர் கடந்த ஆண்டு, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று டி.ஜே.ஹள்ளி போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள், இந்த தனியார் நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. அதில் சட்டவிரோதமாக பலருக்கு பணத்தை பரிமாற்றம் செய்திருப்பது தெரியவந்தது.
எந்நேரத்தில் வேண்டுமானாலும் நிதி நிறுவனத்தின் உரிமையாளர் சையது அகமது பரீத்தை போலீசார் கைது செய்யலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் சையது அகமது பரீத், தன்னை அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கும்படி பாஜ.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு கேட்டுக்கொண்டார். மேலும் நேரிலும் சந்தித்து பேசியிருக்கிறார்.

அப்போது ஜனார்த்தனரெட்டி அமலாக்கத்துறை வழக்கில் இருந்து பரீத்தை விடுவிக்க வேண்டுமென்றால் ரூ.20.50 கோடி பணம் கொடுக்க வேண்டுமென்று பேரம் பேசியுள்ளார். அதுவும் பணத்தை, தங்கமாக மாற்றி கொடுக்க வேண்டுமென்று கூறியதாக தெரிகிறது. அதற்கு பரீத் சம்மதம் தெரிவித்ததும், ஜனார்த்தனரெட்டி தனது உதவியாளர் அலிகான் என்பவரை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதன் பின்னர் அலிகான் மட்டும், பரீத்துடன் தொடர்பில் இருந்தார்.

இதற்கிடையில் இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. கடந்த ஆண்டு அவர்கள்  பரீத்தை கைது செய்து விசாரித்தனர். அப்போது ரூ.20.50 கோடி பேரம் பேசியிருப்பது ஆதாரங்களுடன் போலீசாருக்கு கிடைத்தது. அதை வைத்து இந்த பணம் யார் யாருக்கு கைமாறியது, தங்கமாக மாற்றப்பட்டது எப்படி, அதை யார் வாங்கி கொடுத்தார்கள் என்ற விவரங்களை போலீசார் சேகரித்தனர். அதன்படி கடந்த வாரம் இந்த வழக்கு தொடர்பாக பல்லாரியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து கிடைத்த அனைத்து தகவலையும் நேற்று போலீஸ் கமிஷனர் சுனில் குமார் நேற்று வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:

மத்திய குற்றப்பிரிவு  போலீசார் விசாரணை நடத்தியதில், முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கும், பரீத்திற்கும் தொடர்பு இருந்தது உறுதியானது. இதையடுத்து போலீசார் துரிதமாக செயல்பட்டு ஒருவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் பல்லாரியைச் சேர்ந்த ராஜ்மஹால் நகைக்கடை உரிமையாளர் ரமேஷ் என்று தெரியவந்தது.
நிதி நிறுவன உரிமையாளர் பரீத், முன்னாள் அமைச்சர்  ஜனார்த்தனரெட்டியின் உதவியாளர் அலிகான் கேட்டுக் கொண்டதன் பேரில், ரூ.18 கோடி பணத்தை பெங்களூருவை சேர்ந்த அம்பிகா நகைக்கடை உரிமையாளர் ரமேஷ் கொட்டாரியின் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். அதன் பின்னர் ரமேஷ் கொட்டாரி இந்த பணத்தை பல்லாரியை சேர்ந்த ராஜ்மஹால் நகைக்கடை உரிமையாளர் ரமேஷிற்கு அனுப்பியுள்ளார். அதற்கு பதிலாக ரமேஷ், 57 கிலோ தங்கக் கட்டிகளை ரமேஷ் கொட்டாரிக்கு கொடுத்துள்ளார். அந்த தங்கக் கட்டிகளை ரமேஷ் கொட்டாரி, ரெட்டியின் உதவியாளர் அலிகானிடம் கொடுத்துள்ளார். அலிகான் அதை ஜனார்த்தன ரெட்டியிடம் வழங்கியதாக தெரிகிறது.

 இதற்கான அனைத்து ஆதாரங்களும் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கிடைத்துள்ளது. மேலும் கைதான பரீத்தின் பின்புலம் பற்றி விசாரித்தபோது, இவரின் வங்கிக் கணக்கில் இருந்து ஏராளமான நபர்களுக்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தை மிகவும் தீவிரமாக விசாரித்து வரும் போலீசார் ஜனார்த்தன ரெட்டியை கைது செய்யும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர் என்று போலீஸ் கமிஷனர் சுனில் குமார் தெரிவித்தார்.இதற்கிடையில் முக்கிய பிரமுகரான அலிகான், போலீசார் தன்னை எந்நேரத்தில் வேண்டுமானாலும் கைது செய்யலாம் என்று கருதி, முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். பெங்களூரு 61வது செஷன்ஸ் கோர்ட் அந்த மனுவை ஏற்று விசாரணை நடத்தியது. அப்போது அலிகானுக்கு முன்ஜாமீன் வழங்கிய நீதிபதி, அலிகானை ரூ.50 ஆயிரம் ரொக்க ஜாமீனிலும், மற்றும் அதே தொகைக்கு தனி நபர் ஜாமீனிலும்  விடுதலை செய்யும்படி உத்தரவிட்டார். இதையடுத்து அந்த தொகையை செலுத்திய அலிகான், முன்ஜாமீன் தொடர்பான ஆவணத்தை பெற்றுக் கொண்டார்.

இதனால் அலிகானை கைது செய்ய முடியாத நிலை போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. மற்றொரு புறம் அலிகான் கிடைக்காவிட்டாலும், முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனரெட்டியை கைது செய்தால், அனைத்து விவரங்களையும் பெற்றுவிடலாம் என்ற முயற்சியில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதற்காக 3 ஏ.சி.பிக்கள் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் ஜனார்த்தனரெட்டியை தேடி பல்லாரி, ஐதராபாத், பெங்களூரு ஆகிய இடங்களில் தேடி வருகின்றனர். குவாரி முறைகேடு வழக்கில் ஜனார்த்தனரெட்டி ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் ஜாமீன் பெற்று வெளியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Janardhana Reddy , Enforcement Department, former Karnataka minister, Janardana Reddy
× RELATED பாஜவில் இருந்து வெளியேறி தனிக்கட்சி...