
இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் அஸ்வினி திவாரி இயக்கத்தில் சோனாக்ஷி சின்ஹா, ஜோதிகா, அசுதோஷ் கோவாரிகர் நடித்த படம், ‘சிஸ்டம்’. கடந்த மே 22ம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான இது, கோர்ட் ரூம் டிராமாவாக உருவாகி, கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்நிலையில் ஜோதிகாவின் கணவரும், முன்னணி நடிகரும், தயாரிப்பாளருமான சூர்யா வெளியிட்டுள்ள பதிவில், ‘ஆழமான நடிப்பு மற்றும் கதைக்களத்துடன் இதை உருவாக்கிய அஸ்வினி திவாரிக்கும், அவரது குழுவினருக்கும், தயாரிப்பாளர் ஹர்மான் பாவேஜாவுக்கும் எனது மனமார்ந்த பாராட்டு.
நேகா கேரக்டரில் சோனாக்ஷி சின்ஹா நடித்திருந்தது மிகவும் வலிமையாக இருந்தது. அவரது நடிப்பு எனக்கு மிகவும் பிடித்தது. சாரிகா கதாபாத்திரமாகவே ஜோதிகா முழுமையாக மாறியதை பார்த்து ரசிக்க முடிந்தது. வார்த்தைகளை விட அவரது மவுனம் அதிக வலிமை வாய்ந்தது என்பதை எப்போதும் நான் அறிவேன். அதை இப்போது உலகம் முழுவதும் பார்க்கிறது. ஜோதிகாவை நினைத்து பெருமைப்படுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

