
தெலுங்கு படவுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கிரித்தி ஷெட்டி, கார்த்தியுடன் நடித்த ‘வா வாத்தியார்’ என்ற நேரடி படத்தின் மூலம் தமிழ் படவுலகில் அறிமுகமானார். மேலும், பிரதீப் ரங்கநாதனுடன் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற படத்திலும் நடித்தார். இதையடுத்து ரவி மோகனுடன் நடித்துள்ள ‘ஜீனி’ என்ற படம் விரைவில் திரைக்கு வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கிரித்தி ஷெட்டியிடம், ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகளுக்கான 8 மணி நேர பணி குறித்த விவகாரம் தொடர்பாக கேட்கப்பட்டது.
இதற்கு உடனே பதிலளித்த அவர், ‘முன்னணி நடிகைகள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான விருப்பங்களும், கருத்துகளும் இருக்கும். அவர்களின் உடல்நிலை மற்றும் தனிப்பட்ட சூழ்நிலைகளும் மாறுபடும். எனவே, மற்றவர்களின் கருத்துகள் குறித்து நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை’ என்றார். தொடர்ந்து பேசிய அவர், ‘என்னை பொறுத்தவரையில், 8 மணி நேரத்தை தாண்டியும் பணியாற்ற நான் தயாராக இருக்கிறேன். இளமையும், உற்சாகமும் இருக்கும் காலத்தில் கூடுதல் நேரம் உழைப்பதில் தவறு இல்லை.
அதேவேளையில் நடிகைகளின் உடல்நலத்தையும், தனிப்பட்ட தேவைகளையும் படக்குழுவினர் கருத்தில் கொள்வது மிகவும் அவசியம்’ என்றார். கிரித்தி ஷெட்டியின் இக்கருத்து, நடிகைகளின் பணி நேரம் தொடர்பான விவாதங்களுக்கு மத்தியில் அதிகமானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

