
1980 களில் கார்ட்டூன் காமிக்ஸ் ஆக வெளியான ஹீ – மேன் கார்டூன் தொடரை அடிப்படையாகக் கொண்டு வெளியாகி இருக்கும் திரைப்படம் “ஹீ – மேன்: மாஸ்டர்ஸ் ஆஃப் தி யுனிவர்ஸ் ” . நிக்கோலஸ் கலிட்சின், ஜாரெட் லெட்டோ, இட்ரிஸ் எல்பா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை இயக்குநர் டிராவிஸ் நைட் இயக்கியுள்ளார். இதற்கு முன்பு பம்பிள்பீ (Bumblebee), குபோ அண்ட் தி டூ ஸ்ட்ரிங்ஸ் (Kubo and the Two Strings) உள்ளிட்ட படங்கள் இவருடைய இயக்கத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
எடர்னியா உலகத்தின் குட்டி இளவரசரான ஆடம் (நிக்கோலஸ் கலிட்சின்) தங்களது உலகத்தை கைப்பற்ற நினைக்கும் எதிரிகளின் பிடியில் இருந்து தப்பித்து சாதாரண இளைஞனாக பூமியில் வாழ்ந்து வருகிறார். ஒரு மந்திர வாளின் சக்தியால்தான் அவர் மீண்டும் அவருடைய உலகிற்கு செல்ல முடியும். உடன் வாளின் சக்தியால் ஹீ-மேன் ஆக மாறுகிறார்.
மிக வலிமையான வீரரான அவர், தனது உலகத்தைப் பாதுகாக்கப் போராடுகிறார். உடன் ஹீ-மேனின் நெருங்கிய தோழியான டீலா (கமிலா மென்டிஸ்) ஆயுத நிபுணரும் ஆலோசகருமான மேன்-அட்-ஆர்ம்ஸ் (இத்ரிஸ் எல்பா) ஹீ-மேனுக்கு வழிகாட்டுகிறார்கள். அனைவரும் ஒன்றிணைந்து சக்தி வாய்ந்த எதிரியான ஸ்கெலிட்டரை (ஜாரெட் லெட்டோ) ஜெயித்தார்களா எடர்னியாவை காப்பாற்றினார்களா என்பது மீதி கதை.
படத்திற்கு மிகப்பெரிய பலம் சக்தி வாய்ந்த எதிரியான ஸ்கெலிட்டர் கதாபாத்திரத்தில் நடித்த ஜாரெட். மொத்த கதையின் மைய சக்தியாக இயங்குகிறார். உடன் ஹீரோவான நிக்கோலஸ், பலருக்கும் ஹீரோ கதாபாத்திரம் தான் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. ஆனால் அவர் தன்னுடைய திறமையை கொடுத்து நடித்திருந்தாலும் இந்த கதாபாத்திரம் அவருக்கு குருவி தலையில் வைத்த பனங்காய் போல இருக்கிறது. மற்றபடி கிராபிக்ஸ், மற்றும் மாயலோக தந்திர காட்சிகள் என அனைத்தும் கவனம் பெறுகின்றன.
மொத்தத்தில் ” ஹீ- மேன்: மாஸ்டர்ஸ் ஆஃப் தி யுனிவர்ஸ் ” 80களில் இந்த கார்ட்டூன் தொடருக்கு நீங்கள் அடிமையாக இருந்திருந்தால் இந்த படம் உங்களுக்கு பல பழைய நினைவுகளை மனதிற்குள் கொண்டு வரும். ஆனால் இன்னும் சற்று மெனக்கெட்டு இருந்தால் உலக அளவில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கலாம்.

