
தெலுங்கில் ‘ஸ்ரீ ராமதாசு’ என்ற படத்தில் சீதையாக நடித்திருந்த அர்ச்சனா சாஸ்திரி, கடந்த சில வருடங்களாக நடிப்பில் இருந்து விலகி அமைதியாக இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் கூறுகையில், ‘தெலுங்கில் ‘கமலாதோ நா பயணம்’ என்ற படத்தில் விலைமாதுவாக நடித்தது எனக்கு திருப்புமுனையாக அமைந்தது. படத்தை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். ஆனால், அது ரசிகர்களை சரியாக சென்றடையவில்லை என்பதுதான் எனது வருத்தம். படம் நல்ல விமர்சனங்களை பெற்றது.
ஆனால் தயாரிப்பாளர்களுக்கும், தொழில்நுட்ப தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக அது பரவலான வரவேற்பை பெறவில்லை. ஆன்லைனிலும் வெளியாகவில்லை. தெலுங்கு படவுலகில் எல்லோரும் என்னை ‘நம்ம வீட்டு பெண்’ என்று அன்புடன் அழைத்தாலும், உண்மையான ஆதரவு எனக்கு கிடைக்கவில்லை என்பதை நினைத்து வேதனையாக இருக்கிறது. ‘கமலாதோ நா பயணம்’ படத்தின் புரமோஷனில், திரையுலக முன்னணி பிரபலங்கள் யாரும் என்னை ஆதரிக்கவில்லை’ என்றார்.

