×

கடலில் மூழ்கி நடிகர் மரணம்: படப்பிடிப்புக்கு சென்றபோது சோக சம்பவம்

ஒடிசா: ஒடிசா மாநிலம் தல்சாரி பகுதியில், ‘போலே பாபா பார் கரேகா’ என்ற வங்கமொழி டி.வி தொடருக்கான படப்பிடிப்பு நடந்து வந்தது. நேற்று முன்தினம் படப்பிடிப்பு முடிந்தது. இதையடுத்து வங்கமொழி நடிகர் ராகுல் அருணோதய் பானர்ஜி (43), அருகில் இருந்த கடலில் தனியாக குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராவிதமாக நீருக்கு அடியில் ஏதோ ஒன்றில் சிக்கிக்கொண்ட அவர், மீண்டும் மேலேறி வரமுடியாமல் தவித்தார். அதை பார்த்து பதறிய படப்பிடிப்பு குழுவினர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், உடனடியாக ராகுல் அருணோதய் பானர்ஜியை மீட்டு, தீகா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து, இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேற்குவங்க மற்றும் ஒடிசா மாநில போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து ராகுல் அருணோதய் பானர்ஜியின் மனைவியும், நடிகையுமான பிரியங்கா சர்க்கார் தனது இன்ஸ்டாகிராமில், ‘அதிக துயரம் மற்றும் ஆழ்ந்த விரக்தியில் இருக்கும் இந்த நேரத்தில், எனது குடும்பத்தின் தனிப்பட்ட உணர்வுகளுக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும். எனது மகன் சோஹோஜ், ராகுல் அருணோதய் பானர்ஜியின் தாய் மற்றும் குடும்பத்தினர் இந்த இழப்பை தாங்கிக்கொள்ள முயற்சித்து வருகிறோம்’ என்று உருக்கமாக தெரிவித்துள்ளார். ராகுல் அருணோதய் பானர்ஜியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Tags : Odisha ,Talsari ,Rahul Arunoday Banerjee ,Rahul ,
× RELATED புராஜெக்ட் ஹெய்ல் மேரி – திரைப்பட விமர்சனம்!