×

தாய் கிழவி விமர்சனம்…

உசிலம்பட்டி காடுபட்டியிலுள்ள பெரிய வீட்டில் கணவரை இழந்து வசிக்கும் 75 வயது மூதாட்டி பவுனுத்தாயி, அங்குள்ளவர்களுக்கு சிம்ம சொப்பனம். கறாராக வட்டி வசூலிக்கும் அவரைக் கண்டாலே ஓடி ஒளிவார்கள். அவர் எப்போது சாவார் என்று அனைவரும் காத்திருக்க, திடீரென்று அவருக்கு உடல்நிலை பாதித்து கோமா ஸ்டேஜுக்கு செல்கிறார்.

முன்னதாக சைகை மொழியில் அவர் ஏதோ சொல்ல முயற்சித்ததை, தங்க நகைகள் மற்றும் சொத்து பத்திரங்களை மறைத்து வைத்துள்ளதாக கருதிய அவரது மகன்கள் அருள்தாஸ், சிங்கம்புலி, பாலசரவணன், மருமகன் முத்துக்குமார் ஆகியோர், ராதிகா உயிர் பிழைக்க சில லட்சங்கள் செலவு செய்து, அறுவை சிகிச்சை மூலம் அவரை மீட்கின்றனர். மீண்டும் பழைய கோதாவில் இறங்கிய ராதிகா எடுக்கும் அதிரடி முடிவு என்ன என்பது மீதி கதை.

பெண்களுக்கான மரியாதை, சுதந்திரம், சேமிப்பு, தியாகம் ஆகியவற்றை இனிப்பு கலந்த மருந்தாக, காமெடி கலந்து கமர்ஷியலாக கொடுத்துள்ள இயக்குனர் சிவகுமார் முருகேசன், கோலிவுட்டுக்கு நம்பிக்கை தரும் புதுவரவு. 48 வருட திரைப்பயணத்தில், ராதிகாவுக்கு இன்னொரு திருப்புமுனையாக பவுனுத்தாயி கேரக்டர் அமைந்துள்ளது. அவரது தோற்றம், உடல்மொழி, வசன உச்சரிப்பு எல்லாம் எம்.ஆர்.ராதாவின் மறுவடிவமாகவே இருக்கிறது.

அசத்லான அவரது நடிப்புக்கு விருது கிடைக்கும். சொத்துகளுக்காக அம்மாவையே மரணப்படுக்கையில் தள்ளும் மகன்களாக அருள்தாஸ், சிங்கம்புலி, பாலசரவணன் ஆகியோர் நேர்த்தியாக நடித்துள்ளனர். கருப்பு கோயிலை காவல் காக்கும் நபர் ஆத்தாடி குமரன், காமெடியின் உச்சம். தவிர முனீஷ்காந்த், ரெய்ச்சல் ரெபேக்கா, முத்துக்குமார், இளவரசு, ஜார்ஜ் மரியன், மருமகள்கள், ஊரை சேர்ந்தவர்கள் அனைவரும் அந்தந்த கேரக்டராகவே வாழ்ந்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் விவேக் விஜய், எடிட்டர் சான் லோகேஷ், கலை இயக்குனர் ராமு தங்கராஜ், ஒப்பனைக்கலைஞர் ஆகியோரின் பணிகள் குறிப்பிடத்தக்கது. நிவாஸ் கே.பிரசன்னா இசையில் கதைக்கேற்ற பாடல்கள் அமைந்துள்ளன. பின்னணி இசை கூடுதல் பலம் சேர்த்துள்ளது. பெண்களின் வலிமையை, நேர்மையை, உழைப்பை வலியுறுத்துகின்ற முற்போக்கு கருத்துகள் கொண்ட இப்படத்தை தயாரித்த சிவகார்த்திகேயனுக்கு பாராட்டுகள். படத்தில் ஆங்காங்கே கமல்ஹாசனின் பாடல்களை பயன்படுத்திய விதம் சிறப்பாக இருக்கிறது.

Tags : Paunuthai ,Usilampatti, Kadupatti ,Aruldas ,Singampuli ,Balasaravanan ,
× RELATED கிளாமருக்கு காஜல் கொடுத்த விளக்கம்