×

ஆட்டோ மீது கார் மோதி விபத்து அக்‌ஷய் குமார் உயிர் தப்பினார்

மும்பை: மும்பை ஜூஹு பகுதியில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரின் பாதுகாப்பு வாகனம் விபத்துக்குள்ளானதில் ஆட்டோ ஓட்டுநர் உட்பட 2 பேர் காயமடைந்தனர். பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான அக்‌ஷய் குமார் மற்றும் அவரது மனைவி ட்விங்கிள் கன்னா ஆகியோர் தங்களது 25வது திருமண நாளைக் கொண்டாடிவிட்டு வெளிநாட்டிலிருந்து மும்பை திரும்பினர். விமான நிலையத்திலிருந்து ஜூஹு பகுதியில் உள்ள தங்களது வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு காரில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் ஜூஹு பகுதியில் உள்ள சில்வர் பீச் கஃபே அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த மற்றொரு கார் ஒன்று ஆட்டோ மீது மோதியது.

அந்த வேகத்தில் ஆட்டோ, அக்‌ஷய் குமாரின் பாதுகாப்பு வாகனத்தின் மீது மோதியதில், பாதுகாப்பு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. மேலும் அது அக்‌ஷய் குமார் சென்ற காரின் மீதும் மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியதுடன், ஆட்டோ ஓட்டுநர் மற்றும் பயணி ஒருவர் படுகாயமடைந்தனர். உடனே காரை விட்டு கீழே இறங்கிய அக்‌ஷய் குமார், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்க உதவினார். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் அக்‌ஷய் குமார் மற்றும் அவரது மனைவிக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Akshay Kumar ,Mumbai ,Bollywood ,Mumbai's Juhu ,Twinkle Khanna ,Juhu area ,Silver ,
× RELATED அர்ஜுன் தாசின் கான் சிட்டி