சென்னை: தமிழில் ‘ஓய்’, ‘நித்தம் ஒரு வானம்’ படங்களில் நடித்தவர் ஈஷா ரெப்பா. தெலுங்கில் தனது புதிய படமான ‘ஓம் சாந்தி சாந்தி சாந்திஹி’யின் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறார், மேலும் இந்த படத்தை தீவிரமாக விளம்பரப்படுத்தி வருகிறார். சமீபத்திய ஒரு நேர்காணலின் போது, ஈஷா தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில் சந்தித்த ஒரு சங்கடமான அனுபவத்தைப் பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார். தயாரிப்பாளர்களில் ஒருவர் தனது புகைப்படங்களை லேப்டாப்பில் பெரிதாக்கி, தனது முழங்கைகள் கருமையாகத் தோன்றியதைக் குறிப்பிட்டதை அவர் நினைவு கூர்ந்தார், முழங்கைகள் இன்னும் அழகாக இருந்திருக்க வேண்டும் என்று ஏளனமாக அவர் கூறியுள்ளார். ஈஷா கூறும்போது, ‘‘அந்தக் கருத்து ஆரம்பத்தில் என்னை காயப்படுத்தியது. கடுமையான மனச்சோர்வை ஏற்படுத்தியது. தொடர்ந்து இதுபோன்ற பாடி ஷேமிங்கை திரையுலகில் சந்தித்தேன். பின்னர் தான் அதனுடன் சமரசம் செய்து கொண்டேன். நான் பிறந்த விதத்தை மாற்ற முடியாது. தன்னம்பிக்கையுடன் என்னைத் தழுவிக்கொள்ளக் கற்றுக்கொண்டேன்’’ என்றார்.
