×

பாலிவுட்டில் அறிமுகமாகும் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’, ‘மதராஸி’ ஆகிய படங்கள் வெற்றிபெற்று, அவரது மார்க்கெட் நிலவரத்தை மேலும் உயர்த்தியுள்ளது. தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் ஜனவரி 14ம் தேதி திரைக்கு வருகிறது. இதில் லீலா, அதர்வா முரளி, ரவி மோகன் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இது சிவகார்த்திகேயன் நடிக்கும் 25வது படம், ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் 100வது படமாகும்.

அடுத்து, ‘டான்’ என்ற படத்தை தொடர்ந்து மீண்டும் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன், பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியை மும்பையிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பின் மூலம் இருவரும் ஒரு புதிய படத்தில் இணைந்து பணியாற்ற வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், இருவரும் இந்த சந்திப்புக்கான காரணம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை என்றாலும், ரசிகர்கள் மத்தியில் பல யூகங்களை கிளப்பியுள்ளது. அவ்வாறு சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பது உறுதியானால், அந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் சிவகார்த்திகேயன் அறிமுகமாகும் வாய்ப்பு இருக்கிறது.

முன்னதாக சஞ்சய் லீலா பன்சாலி ‘தேவதாஸ்’, ‘பிளாக்’, ‘மேரி கோம்’, ‘பாஜிராவ் மஸ்தானி’, ‘பத்மாவத்’, ‘கங்குபாய் கத்தியாவாடி’ போன்ற தேசிய விருது வென்ற இந்தி படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ‘லவ் அன்ட் வார்’ என்ற இந்தி படத்தை அவர் இயக்கி வருகிறார். இதில் ரன்பீர் கபூர், அலியா பட், விக்கி கவுஷல் நடிக்கின்றனர்.

Tags : Sivakarthikeyan ,Bollywood ,Sudha Kongara ,Leela ,Adarva Murali ,Ravi Mohan ,G. V. Prakash Kumar ,G. V. ,Prakash Kumar ,
× RELATED மாண்புமிகு பறை விமர்சனம்…