×

சென்னையின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தவிர்க்கும் அடிப்படையில் அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆகியோர் ஆய்வு

சென்னை: வட கிழக்குப் பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால், சென்னையின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தவிர்க்கும் அடிப்படையில், சென்னை பகுதிகளில், இன்று பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆகியோர் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.அடாது மழை பெய்தாலும், விடாது ஆய்வுப் பணி தொடரும் என இன்று காலை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள், மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சென்று, சைதாப்பேட்டையில் ஜீனிஸ் சாலை, பஜார் சாலை, ஜோன்ஸ் சாலை, அண்ணா சாலை, ஈக்காட்டுதாங்கல் உள்வட்டச் சாலை, பூந்தமல்லி சாலை, கலைமகள் சாலை, அண்ணா பிரதானச் சாலை, காமராஜர் சாலை, பாரதிதாசன் சாலை மற்றும் துரைப்பாக்கம் போன்ற பகுதிகளுக்கெல்லாம் சென்று, மழைநீர் தேங்கியுள்ளதா என்பதையும், மழைநீர் வடிகால்வாயில், அடைப்பின்றி மழைநீர் வேகமாக ஓடுகிறதா என்பதையும் ஆய்வு செய்தார்கள்.சென்னை, சைதாப்பேட்டையில், டாக்டர் கலைஞர் பொன்விழா வளைவு அருகில் செய்தியாளர்களைச் சந்தித்து, போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும், தாம் மேற்கொண்ட ஆய்வு குறித்தும் விரிவாக விளக்கிக் கூறினார்கள்.தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, மக்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் இல்லாமல், மழைநீர் தேங்காமல், உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட வேண்டுமென்று, முதலமைச்சர், இன்று காலையில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்களிடமும் மற்றும் மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களிடமும் தெரித்ததால், அவர்கள் இருவரும்  உடனே புறப்பட்டு, சைதாப்பேட்டை, அண்ணா சாலை பகுதிக்கு வந்ததாகத் தெரிவித்த நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அவர்கள், இந்த ஆட்சியில் மேற்கொண்ட பணிகளால் இப்பகுதியில் தண்ணீர் தேங்கவில்லை என்றும், மழைநீர் வடிகால்கள் மூலமாக உடனுக்குடன் வடிந்து விடுகிறது என்றும் தெரிவித்தார்கள்.சைதாப்பேட்டை, ஜீனிஸ் சாலை பகுதியில், தேங்கும் மழை நீரை அகற்றும் பொருட்டு, பெரிய அண்ணா சாலையின் குறுக்கே டாக்டர் கலைஞர் பொன்விழா வளைவு அருகில்,  முன்வார்ப்பு கால்வாய்(Pre Cast Culvert) மற்றும் வடிகால் வழியாக அடையாறு ஆற்றுக்கு செல்லும் வகையில், ரூ.1.05 கோடி மதிப்பில் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. பருவ மழை காலம் முடிந்தபின், இப்பணி உடனே துவக்கப்படும் என்றும் தெரிவித்தார்கள்.உள்வட்டச் சாலையில், ஈக்காட்டுத்தாங்கலில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற சி.ஆர்.ஐ.டி.பி. திட்டத்தின்கீழ், 435 மீட்டர் நீளம் உள்ள மழைநீர் வடிகால், ரூ.2 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கால்வாயில் உள்ள மழைநீர் ஒரு பகுதி அடையாறுக்கும், மற்றொரு பகுதி சிட்கோ கால்வாய்க்கும் செல்ல ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது என்பதால், இப்பகுதியில், மழைநீர் தேங்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்கள்.அண்ணா பிரதான சாலை,  காமராஜர் சாலை,  பாரதிதாசன் சாலைகளில்,  தேங்கும் மழைநீரை  அடையாற்றுக்கு வெளியேற்றும் பொருட்டு,  உள்வட்டச் சாலையில் 2.0மீ x 2.0மீ  அளவு கொண்ட  மழைநீர் வடிகால் 810 மீட்டர்  நீளத்திற்கு, ரூ.5.50 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்த மாண்புமிகு அமைச்சர் அவர்கள், இனி இப்பகுதியில் மழைநீர் துரிதமாக வெளியேறிவிடும், ஆதலால், பொது மக்களுக்கு மழைநீரால் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்தார்கள்.சைதாப்பேட்டை, அண்ணா சாலையில், பஜார் சாலை முதல் ஜோன்ஸ் சாலை கடந்து, மாம்பலம் கால்வாய் வரை, 200 மீட்டர் நீளத்திற்கு துண்டிக்கப்பட்ட இணைப்பாக இருந்த மழைநீர் வடிகால், ரூ.1 கோடி மதிப்பீட்டில் பணி துவங்கப்பட்டு, நடைபெற்று வருவதை ஆய்வு செய்தார்கள்.பெரிய அண்ணா சாலையில், கிண்டி, ஹப்லீஸ் ஹோட்டல் அருகில், சென்றஆண்டு மிகுந்த மழைநீர் தேங்கி, போக்குவரத்திற்கு மிகவும் இடையூறாக இருந்தது. இதனைத் தவிர்க்கும் பொருட்டு, 2 இடங்களில் சுமார் ரூ.1 கோடி மதிப்பில் முன்வார்ப்பு கால்வாய்(Pre Cast culvert) பணிகள் நடைபெற்று வருவதையும் ஆய்வு செய்தார்கள். உள்வட்டச் சாலையில், அடையாற்றுக்குச் செல்லும் வடிகால் 100 மீட்டர் நீளம், பூந்தமல்லி சாலை சந்திப்பு முதல் கலைமகள் சாலை சந்திப்பு வரை நடைபெற்று வரும் பணியையும் ஆய்வு செய்தார்கள்.சைதாப்பேட்டையில், அண்ணா சாலையை ஒட்டியுள்ள பஜார் சாலையில், நீர் தேங்குவதை தவிர்க்க அண்ணா சாலையில் பஜார் சாலை முதல் ஜோன்ஸ் சாலை கடந்து மாம்பலம் கால்வாய் வரை 200 மீட்டர் நீளத்திற்கு துண்டிக்கப்பட்ட இணைப்பாக இருந்த மழை நீர் வடிகால்   கால்வாயை இணைக்கும் பணி நடைபெற்று வருவதை ஆய்வு செய்து, இப்பணி விரைவில் முடிக்கப்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆணையிட்டார்கள்.உள்வட்டச் சாலையில் அடையாற்றுக்கு செல்லும் மழைநீர் வடிகாலை புனரமைக்கும் பொருட்டு 100 மீட்டர் நீளத்திற்கு மழைநீர்வடிகால்வாய் ரூ.1.10 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாய் பூந்தமல்லி சாலை சந்திப்பு முதல் கலைமகள் சாலை சந்திப்பு வரை உள்ள மழைநீரை அடையாற்றுக்கு வெளியேற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது எனவும், மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.சைதாப்பேட்டை, அண்ணா சாலை பகுதிகளில் ஆய்வு பணிகளை முடித்தப் பின்னர், துரைப்பாக்கத்திற்கு சென்று, சதுப்பு நிலப்பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளதை ஆய்வு செய்தார்கள்.   சதுப்பு நிலப்பகுதிகளில் குப்பைகளையும், கழிவு பொருட்களையும் கொட்டுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.இந்த ஆய்வின்போது, சென்னை மாநகராட்சி  துணை மேயர் மு.மகேஷ்குமார், நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் இரா.சந்திரசேகர், கண்காணிப்புப் பொறியாளர் ப.செந்தில், கோட்டப் பொறியாளர், வ.ரவி, உதவிக்கோட்டப் பொறியாளர் ஆனந்தராஜ், உதவிக் கோட்டப் பொறியாளர் சந்திரசேகர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்….

The post சென்னையின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தவிர்க்கும் அடிப்படையில் அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆகியோர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Minister ,A. V. Velu ,M. Subramanian ,Chennai ,North East ,A.V.Velu ,M.Subramanian ,
× RELATED அமெரிக்கா, ஆப்பிரிக்காவுக்கு...