
கவுதம் தின்னனூரி இயக்கி விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போர்ஸ் உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகியுள்ள படம் ‘கிங்டம்’. தொடர் தோல்விகளுக்கு பிறகு விஜய் தேவரகொண்டா இப்படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார். இப்படத்தில் வெங்கிடேஷ் என்பவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அறிமுக நடிகரான இவர் பட நிகழ்ச்சியில் பேசும்போது, ‘‘என் வாழ்க்கையில் முதல் முறையாக இவ்வளவு பெரிய கூட்டத்தை பார்க்கிறேன். இப்படி நடக்கும் வேண்டும் என்று கனவு கண்டது உண்டு. ஆனால் அது இன்று தான் நிறைவேறி உள்ளது. நான் கேரளாவில் இருந்து வந்திருக்கிறேன். மலையாளத்தில் டிவி சீரியல் மற்றும் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறேன். இப்போ கிங்டமுக்கு வந்திருக்கிறேன். இந்த இடத்திற்கு வருவதற்கு எனக்கு ஒன்பது ஆண்டுகளாகிவிட்டது. இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த சித்தாரா என்டெர்டெயின்மென்ட்ஸுக்கு நன்றி. எனக்கு ஹீரோவாக நடிக்கும் ஆசை இருக்கிறது.
இயக்குநர்கள், தயாரிப்பாளர் என்னை ஹீரோவாக்க வேண்டும். நான் தலைவர் ரஜினி சாரின் தீவிர ரசிகன். என் குடும்பமே தலைவர் ரஜினி சாரின் ரசிகர்கள். என் போன் ரிங்டோனே, ‘‘போடா அந்த ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்’’ டயலாக்தான்’’ என்று வெங்கிடேஷ் பேசியது ரசிகர்களிடம் கவனம் பெற்றது. நடிகராக மட்டுமில்லாமல், திருவனந்தபுரத்தில் சொந்தமாக இட்லி கடை நடத்தி வருகிறார் வெங்கிடேஷ். அங்குள்ள முக்கிய சாலை ஒன்றில் கடந்த 2024ம் ஆண்டு தனது நண்பருடன் இணைந்து டிரக்கில் இட்லி கடை தொடங்கியுள்ளார். தினமும் இரவு 7:30 மணி முதல் 10 மணி வரை சுடசுட இட்லி செய்து விற்பனை செய்து வருகிறார் வெங்கிடேஷ்.
