×

ஷிரினுக்கு நெஞ்சமும் உண்டு.. நேர்மையும் உண்டு..

சினிமாவும், டிராவலிங்கும் எனக்கு இரு கண்கள் மாதிரி. அந்தக் காரணத்துக்காகவே படிப்பு முடிந்தவுடன் ஏர் ஹோஸ்டஸ் வேலையை தேர்வு செய்தேன். அதே மாதிரி சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் வேலையை உதறிவிட்டு நடிக்க வந்துள்ளேன்’’  என்கிறார்  ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ நாயகி ஷிரின் காஞ்ச்வாலா. புரோமோஷனுக்காக சென்னை வந்தவரிடம் பேசினோம். நீண்ட நாள் பழகிய நண்பரைப் போல் சகஜமாகப் பழக ஆரம்பித்தார். பிறந்தது, வளர்ந்தது எல்லாமே மும்பை. அப்பா பிசினஸ் பண்றார். அம்மா ஹோம் மேக்கர். ஒரு அண்ணன் துபாய்ல இன்டீரியர் டிசைனராக இருக்கிறார். ஒரு தம்பி படித்துக் கொண்டிருக்கிறார். நாங்க ரொம்ப எளிமையான அதே சமயம் அமைதியான குடும்பம். இந்த உலகத்துல சிறந்த பெற்றோருக்கான விருது கொடுப்பதாக இருந்தால் என்னுடைய பெற்றோருக்குத்தான் கொடுக்க வேண்டும்.

ஒரு நாளும் அவர்கள் பிள்ளைகளின் விருப்பத்தை தடை பண்ணியதில்லை. அதே மாதிரி நாங்களும் பெற்றோர் மனசு கஷ்டப்படுகிற மாதிரி நடந்து கொண்டதில்லை. நான் சார்ந்த மார்க்கத்திலிருந்து நடிக்க வரும்போது விமர்சனங்கள் நாலா பக்கமும் வரும். அதையும் மீறி நான் நடிக்க வந்துள்ளேன் என்றால் வீட்ல உள்ளவர்கள் கொடுக்கும் ஆதரவுதான் காரணம். சின்ன வயதிலிருந்து எனக்கு டிராவலிங் பிடிக்கும். அதனாலேயே ஏர்ஹோஸ்டஸ் ஆகணும்னு கனவு கண்டேன். அதன்படி ஏர்ஹோஸ்டஸ் வேலையும் கிடைத்தது. ஏர் ஹோஸ்டஸ்ஸாக உலகம் முழுவதும் சுற்றியது நல்ல அனுபவத்தைக் கொடுத்தது.

பல்வேறு மொழி, பலதரப்பட்ட மக்கள், கலாச்சாரத்தைப் பார்க்கும் போது ஒவ்வொரு நாளும் புதிதாகத் தெரிந்தது. ஒவ்வொரு நாளையும் புதுப் புது நாளாகப் பார்க்க முடிந்தது. நான் மும்பையில் வசித்தாலும் தென்னிந்திய மொழி படங்கள் மீது நல்ல அபிமானம் உண்டு. சிறப்பான நடிகர்கள், திறமை வாய்ந்த டெக்னீஷியன்கள் இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்ப்பதை மறுக்க முடியாது. பாலிவுட்லே பிரபுதேவா போன்ற ஆளுமைகள் இப்போதும் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். சினிமாவைப் பொறுத்தவரை என்னுடைய  கேரியர் கன்னடத்தில்தான் ஆரம்பித்தது. ‘விராஜ்’ என்ற அந்தப் படம் கடந்த டிசம்பரில் வெளியானது. அந்த ஒரே படம் கன்னடத்தில் எனக்கான அங்கீகாரத்தை ஏற்படுத்தியது. தமிழில் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ தான் நான் அறிமுகமாகும் முதல் படம்.

சிவகார்த்திகேயன் சார் பேனர்ல அறிமுகமாவதை அதிர்ஷ்டமாக எண்ணுகிறேன். எனக்கு தாய்மொழி இந்தியாக இருந்தாலும் வேற்று மொழியில் நடிக்கிறோம் என்கிற உணர்வே இல்லாமல் இருந்தது. காரணம், யூனிட்ல உள்ளவங்க என்னை அப்படி தாங்கினார்கள். நாயகன் ரியோ ராஜ் பழகுவதற்கு இனிமையானவர். நடிப்பு விஷயத்தில் செம டெரர் காட்டு வார். கடினமான காட்சிகளை ஒரே டேக்கில் நடித்து பிரமிப்பு ஏற்படுத்துவார். நாஞ்சில் மனோகரன், விஜே.விக்னேஷ்காந்த் ஆகியோருடன் நடித்தது நல்ல அனுபவம்.இயக்குநர் கார்த்திக் வேணுகோபால் ஆர்ட்டிஸ்ட்டுகள் ஒளித்து வைத்துள்ள திறமைகளை மிக அழகாக வெளியே கொண்டு வரக்கூடிய ஸ்பெஷாலிட்டி உள்ளவர்.

ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. சில நேரங்களில் படபடப்பு இஷ்டத்துக்கும் எகிறும். அதைக் குறைத்த பெருமை இயக்குநரையே சாரும். அவர் படப்பிடிப்புக்கு முன்பே முழு ஸ்கிப்ரிட்டையும் கொடுத்துவிட்டார். ஸ்கிப்ரிட் கையில் இருந்ததால் ரிகர்சல் பண்ணிவிட்டு தைரியமாக படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடிந்தது. அதிக டேக் வாங்காமல் நல்ல பெயர் வாங்க முடிந்தது. படத்துல ரிப்போர்ட்டராக வருகிறேன். படத்தில் எனக்கு சில இடங்களில் நீளமான வசனக் காட்சிகள் வரும். அந்தக் காட்சி களில் உதவி இயக்குநர்கள் உதவி செய்ததை மறக்க முடியாது. ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் சொல்லிக் கொடுத்தார்கள்.

‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் 80 சதவீதம் பொழுதுபோக்கு அம்சங்கள் கலந்திருந்தாலும் சமூகத்துக்கான முக்கியமான கருத்தும் சொல்லியுள்ளோம். இந்தப் படம் ரசிகர்களை வெகுவாகக் கவரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஏர் ஹோஸ்டஸ்ஸாக மூணு நாலு வருடம் வேலை செய்திருந்தாலும் முழு வாழ்க்கைக்கான நிறைவு அந்தத் துறையில் கிடைத்தது. இனி என்னுடைய கவனம் சினிமாவில் மட்டுமே. தற்போது நிறைய வாய்ப்புகள் வருகிறது. சரியான படத்துக்கு காத்திருக்கிறேன். மீண்டும் வேலைக்கு திரும்பணும் என்ற எண்ணம் சுத்தமா இல்லை.

தமிழில் ரஜினி, இந்தியில் ஷாரூக்கான் என்னுடைய ஆதர்சம். ஏன்னா, அவர்கள் பெரிய சினிமா பின்னணி இல்லாமல் இந்தத் துறைக்கு வந்தவர்கள். ஆனால் அவர்கள் புகழை உலகமே கொண்டாடுகிறது. எனக்கும் சினிமா பின்னணி இல்லை. அவர்களுடைய உயர்வு என்னைப் போன்றவர்களுக்கு ஊக்கமளிக்கிறது.  தொடர்ந்து தமிழில் நல்ல படங்கள் பண்ணணும். கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கணும். தவிர சினிமாவில் எத்தனை வகை கேரக்டர் இருக்கிறதோ அந்தக் கேரக்டர்களில் ஒருமுறையாவது நடிக்க வேண்டும்.

சமீபத்தில் கங்கணா ரனாவத் உள்ளாடை இல்லாமல் நடித்த படத்தைப்பற்றி கேட்கிறார்கள். கருத்து சொல்லும் அளவுக்கு இன்னும் நான் வளரவில்லை. கிளாமரைப் பொறுத்தவரை எனக்கு எது திருப்தியளிக்கிறதோ அல்லது எது வசதியாக இருக்கிறதோ அந்த மாதிரி வேடங்களை மட்டுமே ஏற்பேன். கிளாமர் என்ற பெயரில் ஆபாசமாக நடிக்கமாட்டேன். சினிமா தவிர புத்தகம் வாசிப்பது, போட்டோ கிராபி, பேமிலியுடன் ஓட்டலில் சாப்பிடுவது பிடிக்கும். என் வாழ்க்கையில் நிறைய சந்தோஷமான விஷயங்கள் நடந்துள்ளது. நாளைய பொழுதும் நன்மையில் முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது’’ என்ற ஷிரினின் கண்களில் டபுள் ஸ்ட்ராங் நம்பிக்கையைப் பார்க்க முடிந்தது.

Tags : Shirin ,
× RELATED தாய்லாந்து மொழியில் டப்பாகும் படத்தில் புகழ், ஷிரின்