×

6 கண்களும் ஒரே பார்வை: விமர்சனம்

ஊரிலேயே மிகப்பெரிய செல்வந்தரான வாசு விக்ரமின் மகள் கும்கி ஆனந்தி, தன் வீட்டு கார் டிரைவரைக் காதலித்து, தந்தையின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டு தனிக்குடித்தனம் செல்கிறார். வாசு விக்ரமின் சொத்துகள் தனக்குக் கிடைக்காத விரக்தியில் குடிபோதைக்கு அடிமையாகும் கும்கி ஆனந்தியின் கணவர், கார் மோதி மரணம் அடைகிறார். இந்நிலையில் தனது மகள் கெனியுடன் தனியாக வசிக்கும் கும்கி ஆனந்தி, இன்னொவருவனை நம்பி தாலி கட்டிக்கொள்கிறார். அவனோ ஒரே இரவில் அவரை ஏமாற்றிவிட்டு ஓடிவிடுகிறான். இதனால் கும்கி ஆனந்தி, தன் வாழ்க்கைப் போராட்டத்தை மகள் கெனியுடன் சேர்ந்து மேற்கொள்கிறார். அப்போது 3 இளைஞர்கள் கெனியைக் காதலிக்க விரட்டுகின்றனர். தன் அம்மாவை ஏமாற்றிய ஆண்களை நேரில் பார்த்ததால், ஒட்டுமொத்த ஆண்கள் மீது அதீத வெறுப்பு கொண்ட கெனி, அவர்களின் காதலை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்.

இந்நிலையில், திடீரென்று உடல்நிலை பாதித்து உயிருக்குப் போராடும் கும்கி ஆனந்தியைக் காப்பாற்ற 3 லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. தோழி ஒருத்தி கொடுத்த ஐடியாவின்படி, அந்த 3 இளைஞர்களையும் தனித்தனியே சந்தித்து, அவர்களைக் காதலிப்பதாக நாடகமாடும் கெனி, ஒவ்வொருவரிடம் இருந்தும் 1 லட்ச ரூபாய் வாங்கி மருத்துவமனையில் கட்டி, அம்மா கும்கி ஆனந்திக்கு வெற்றிகரமாக ஆபரேஷன் நடக்க உதவுகிறார். உயிர் பிழைத்த கும்கி ஆனந்தி, மகள் கெனி செய்த செயலை அறிந்து கோபப்படுகிறார். உடனே 3 இளைஞர்களையும் வரவழைத்து, தன் மகள் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்கிறார். ஆனால், 3 இளைஞர்களும் கெனியை விட்டுக்கொடுக்க மனமின்றி, அவரை உடனே திருமணம் செய்துகொள்ள போட்டி போடுகின்றனர். இந்நிலையில் கெனி விபரீத முடிவு எடுக்கிறார். இறுதியில் என்ன நடக்கிறது என்பது மீதி கதை.

கெனிக்கு அம்மாவாக இளமையான கும்கி ஆனந்தியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும், இருவரும் இயல்பாக நடித்துள்ளனர். ராஜ்நிதன் உள்பட 3 இளைஞர்களும் மற்றும் அமிர்தலிங்கம், ஆதவன் ஆகியோரும் தங்கள் கேரக்டருக்கேற்ப கச்சிதமாக நடித்துள்ளனர். சீனிவாசனின் ஒளிப்பதிவு, கிராமத்து யதார்த்தத்தை அப்படியே பதிவு செய்திருக்கிறது. ஆரோன் இசையும், பிருத்திவி பின்னணி இசையும் பரவாயில்லை. ஜடையனூர் வி.ஜானகிராமன் எழுதி இயக்கியுள்ளார். ‘போலியான உலகில் சில நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள்’ என்று சொல்ல வந்த அவர், அதை இன்றைய நவீன திரைமொழியில் சொல்வதற்கு தவறிவிட்டார்.

The post 6 கண்களும் ஒரே பார்வை: விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kumki ,Vasu Vikram ,Kumki Anandi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED வனிதா மகனுக்கு ஜோடியாகும் பிரபு சாலமன் மகள்