×

கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகம் சார்பில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிறப்பு சந்தை திறப்பு; அங்காடி நிர்வாக குழு எச்சரிக்கை

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட் நிர்வாக சார்பில், விநாயகர் சதுர்த்தியையொட்டி சிறப்பு சந்தை திறக்கப்பட்டுள்ளது.விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என, அங்காடி நிர்வாக குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை மற்றும் பொங்கல் விழாக்களின்போது,  மார்க்கெட்டில் நிர்வாக குழு சார்பில் சிறப்பு சந்தைகள் திறக்கப்படும். பூஜைகளுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் இந்த சந்தைகளில் விற்கப்படும். இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.கடந்த இரண்டு வருடமாக  கொரோனாவால் ஏலம் விடாமல் இருந்ததால் சிறப்பு சந்தை திறக்கப்படவில்லை. இந்த நிலையில், இரண்டு வருடத்திற்கு பிறகு விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் வரும் 25ஆம் தேதி(நாளை) முதல் 31ஆம் தேதி வரை சிறப்பு சந்தை திறக்கப்பட உள்ளது. இதில், கரும்பு வாழைப்பழம், மஞ்சள் கொத்து மற்றும் இஞ்சி போன்ற பண்டிகை கால பொருட்களை விற்பதற்கும்,  போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்காகவும் வியாபாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க அங்காடி நிர்வாகக்குழு கோயம்பேடு மார்க்கெட்டை சுற்றி உள்ள காலி இடத்தை வியாபாரம் செய்ய தேர்வு செய்துள்ளது.இந்நிலையில், வளாகத்திற்கு பண்டிகை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வரும் வாகனங்களுக்கான கட்டணம் மற்றும் அப்பொருட்களை வியாபாரம் செய்பவரிடம் கட்டணம் வசூலிக்கும் பணிக்கான ஏலம் கோயம்பேடு முதன்மை நிர்வாக அலுவலர் வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதற்காக முன் தொகையாக ரூ.20000 செலுத்த வேண்டும் இந்த ஏலத்திற்கு அங்காடி நிர்வாகம் நிர்ணயித்த தொகை 5 லட்சத்து 25,000 ஆகும் அதற்கு மேல் யார் கேட்கிறார்களோ அவர்களுக்கு அந்த ஏலம் கொடுக்கப்படும். இதில், கோயம்பேடு மார்க்கெட் வியாபாரி முரளி என்பவர்  6 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளார். இதுகுறித்து அங்காடி நிர்வாக அலுவலர் சாந்தி கூறும் போது. ‘‘சாலைகளில் வாகனங்கள் நிறுத்தி பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. விநாயர் சதுர்த்தி பண்டிகை பொருட்களை வியாபாரம் செய்பவர்கள் ஏலதாரரிடம் தினந்தோறும் அனுமதி சீட்டுகளை பெற வேண்டும். ஒப்பந்த காலம் 25ம் தேதி முதல் 31ம் தேதி வரை மட்டுமே.விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கால பொருட்களை அனுமதி சீட்டு இல்லாமல் வியாபரம் செய்பவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். இதை மீறுபவர்களிடமிருந்து பொருட்கள் அங்காடி நிர்வாகக் குழுவால் பறிமுதல் செய்யப்படும். மேலும், ஏலதாரர் குறிப்பிட்ட கட்டணத்தை தவிர அதிகப்படியான தொகை வசூலித்தால் முன் அறிவிப்பின்றி உரிமம் ரத்து செய்யப்படும். ஏல நிபந்தனைகளை மீறினால், ஏலத்தை ரத்து செய்ய அங்காடி நிர்வாகக்குழுவிற்கு முழு அதிகாரம் உண்டு.  ஏல கட்டணத்தை திருப்பித்தர இயலாது. மேலும் கோயம்பேடு நிர்வாக குழுவின் விதிகளுக்கு உட்பட்டு வியாபாரம் நடைபெற வேண்டும். அதனை மீறி வியாபாரம் செய்பவர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.  இந்த வியாபாரம் குறிப்பிட்ட பண்டிகை காலத்திற்கு மட்டுமே செல்லுபடி ஆகும்.’’என கூறினார்….

The post கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகம் சார்பில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிறப்பு சந்தை திறப்பு; அங்காடி நிர்வாக குழு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Vinayagar ,Chaturthi ,Koyambedu Market Management ,Annanagar ,Goyambedu Market Administration ,Koyambedu Market Administration ,Dinakaran ,
× RELATED பெரம்பலூரில் வல்லபவிநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா