×

பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தால் கல்யாண வரம் தந்து அருளும் காளிப்பட்டி கந்தசாமி கோயில்

சேலம்-திருச்செங்கோடு சாலையில் உள்ள நாமக்கல் மாவட்டத்தின் காளிப்பட்டியில் இருக்கிறது பிரசித்தி பெற்ற கந்தசாமி கோயில். பழனிக்கு சென்று தண்டாயுத பாணியை தரிசிக்கிறோம். ஆனால் அந்த தண்டாயுத பாணியே இந்த ஊருக்கு வருவார் என்பது முருகனடியார்களின் பெருமிதம்.
ஒரு முறை காளிப்பட்டியில் இருந்து பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரை சென்றனர். ஓரிடத்தில் அனைவரும் அயர்ந்து உறங்கினர். அப்போது பக்தர் ஒருவரின் கனவில் தோன்றினார் முருகன். உங்கள் ஊருக்கே நான் வருகிறேன். எனக்கு அங்கேயே கோயில் கட்டி வழிபடுங்கள் என்று கூறினாராம். இதையடுத்து பழனிக்கு சென்று திரும்பிய அந்த பக்தர், ஊரில் ஓரிடத்தில் மயில் தோகை விரித்தபடி நிற்பதை கண்டு பரவசத்தில் ஆழ்ந்துள்ளார்.

அப்படி மயில் நின்ற காளிப்பட்டியில் ஊர்மக்களால் கட்டப்பட்டது தான், கந்தசாமி கோயில்’’ என்பது கோயில் தல வரலாறு. காளிப்பட்டியில் நடக்கும் பங்குனி உத்திர தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அன்று தேரில் அழகே உருவாகும் கந்தனைக்காண, கண்கோடி வேண்டும் என்கின்றனர் திரளும் பக்தர்கள். சஷ்டி, கிருத்திகை என்று முருகனுக்குரிய அனைத்து வைபவங்களும் கோயிலில் களை கட்டும். இந்த நாட்களிலும் அமாவாசையிலும் பாலாபிஷேகம் செய்து கந்தனை வழிபடுவது கூடுதல் சிறப்பு. தைப்பூச நாளில் பக்தர்கள் திரண்டு பாலாபிஷேகம் செய்வதுடன் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்கின்றனர்.

தைப்பூச நாளில் பாலுடன் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து கந்தனை தரிசித்தால் கல்யாண வரம் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகல ஐஸ்வர்யங்களும் பெருகும் என்பது பக்தர்களிடம் தொடரும் நம்பிக்கை. இக்கோயிலில் நடக்கும் சூரசம்ஹார விழாவும் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழாவில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் கந்தசாமி எழுந்தருளி, எதிரில் வரும் சூரபத்மனை, சக்திவேல் கொண்டு அழிக்கும் நிகழ்வு தத்ரூபமாக அரங்கேறுகிறது. அப்போது சுற்றுப்புற கிராம மக்கள், தாங்கள் பயிரிட்ட அரிசி, காய்கறிகள், பூக்களை சுவாமி மீது தூவி வழிபடுவர். இரவில் கந்தசாமி தெய்வானையுடன் மயில் வாகனத்தில் திருக்கல்யாண கோலத்தில் உலா வருவதும் கண்களுக்கு விருந்தாகிறது.

இதேபோல், தமிழ்மண்ணின் பாரம்பரியத்தை மாற்றாத தலமாகவும் திகழ்கிறது காளிப்பட்டி. தமிழகத்தில் ஆங்கிலேயர்  ஆட்சி காலத்தில்  கூட்டம் சேரும் கிராம கோயில்களில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு உடனடியாக தீர்ப்பு வழங்கப்படுவது வழக்கமாக இருந்தது. அந்த வகையில் இன்று வரை காளிப்பட்டி கோயிலில் தைப்பூச திருவிழாவில் சிறப்பு நீதிமன்றம் நடத்தப்பட்டு வருகிறது. விழா நடக்கும் 4 நாட்களிலும் இந்த நீதிமன்றம் கூடுகிறது.

இதில் கள்ளச்சாராயம், வழிப்பறி, திருட்டு, அடிதடி வழக்குகள், குடித்து விட்டு வாகனம் ஓட்டுவோர், சிறு தவறுகளில் ஈடுபடுவோரை பிடித்து உடனடியாக நீதிமன்றத்தில் நிறுத்தி தீர்ப்பு வழங்கப்படுகிறது. கிரிமினல் வழக்குகள் வந்தால் அதனை திருச்செங்கோடு நீதிமன்றத்திற்கு மாற்றி விடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திருவிழாவில் நடக்கும் மாட்டுச்சந்தையில் அரியவகை நாட்டின மாடுகள் விற்பனைக்கு வருவதும் வாடிக்கையாக உள்ளது.

Tags : Kalipatti Kandaswamy Temple ,
× RELATED சட்டமன்ற தொகுதி வாரியாக பதிவான...