×

அல்லு அர்ஜூனிடம் 4 மணி நேரம் விசாரணை

திருமலை: கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகை இறந்தது தொடர்பாக சிக்கடப்பள்ளி போலீசார், அல்லு அர்ஜூனுக்கு நேற்று காலை 11 மணிக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என நோட்டீஸ் அனுப்பினர். அதன்படி நேற்று காலை அல்லுஅர்ஜூன் தனது வழக்கறிஞர்கள் குழுவினருடன் நேரில் ஆஜராவார் என தெரிவிக்கப்பட்டது. இதையொட்டி ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து சிக்கடப்பள்ளி காவல் நிலையம் வரை காவல் துணை ஆணையர் சுரேந்தர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இதையடுத்து காலை 10.30 மணிக்கு அல்லுஅர்ஜூன் தனது வீட்டிலிருந்து காரில் காவல்நிலையத்திற்கு புறப்பட்டார். அப்போது அவரது காரை, வேறு எந்த வாகனமும் பின் தொடராத வகையிலும், ரசிகர்கள் மற்றும் செய்தியாளர்கள் யாரும் வராத வகையிலும் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டனர். அதேபோல் அல்லுஅர்ஜூனின் கார் எந்த சிக்னல்களிலும் நிற்காத வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

காவல் நிலையத்தில் ஆஜரான அல்லுஅர்ஜூனிடம் போலீசார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்கு பிறகு விரைவில், தியேட்டரில் எவ்வாறு கூட்ட நெரிசல் ஏற்பட்டது, அங்கு என்ன நடந்தது என்பது குறித்து தெரிந்து கொள்வதற்காக அல்லுஅர்ஜூனை தியேட்டருக்கு அழைத்து செல்ல போலீசார் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் நீதிமன்றம் அல்லு அர்ஜுனுக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உள்ளது. அதில் போலீசாரின் விசாரணைக்கு எந்தவித குறுக்கீடும் செய்யக்கூடாது, வேறு யாரிடமும் வழக்கு குறித்து பேசக்கூடாது என தெரிவித்திருந்தது. ஆனால் அல்லு அர்ஜூன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி, ஜாமீனை ஏன் ரத்து செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட கேள்விகளை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Allu Arjun ,Tirumala ,Chikkadapalli police ,
× RELATED தியேட்டரில் பெண் பலியான வழக்கில்...