×

கேட்டதை தருவான் மேட்டுப்பாளைய ஐயப்பன்

புதுச்சேரி மேட்டுப்பாளையம் ஜங்ஷனில் இருந்து கனரக ஊர்தி முனையம் செல்லும் சாலையில் விசாலமான இடவசதியுடன் அமைந்திருக்கும் ஐயப்பன் கோயில் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு ஒரு பெரிய தைல மரத்தின் கீழ் சாதாரண கீற்றுக்கொட்டகையில் உருவானது. அப்போது அரியாங்குப்பம், தவளக்குப்பம், முத்தியால்பேட்டை, கோட்டக்குப்பம் என புதுச்சேரியின் பல பகுதிகளை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் இந்த இடத்தில் வந்து பஜனை பாடி, எளிமையான பூஜைகள் செய்து ஐயப்பனை வழிபட்டு வந்துள்ளனர். ஒரு சமயம் கீற்றுக்கொட்டகையில் சுமார் 15 பக்தர்கள் இரவில் இருந்தபோது, ஒரு பெரிய புயல் புதுச்சேரியை தாக்கியுள்ளது.

அந்த புயல் காற்றின் வேகத்தில் கீற்றுக்கொட்டகை அருகில் இருந்த தைல மரம் வேராடு சாய்ந்தது. ஆனால் கீற்றுக்கொட்டகையின் மீது மரத்தின் எந்த பாகமும் படவில்லை. இதனால் உள்ளே  இருந்த 15 பக்தர்கள் எந்த பாதிப்பும் இன்றி ஐயப்பன் அருளால் உயிர் பிழைத்தனர். இதனிடையே பக்தர் ஒருவரின் கனவில் ஐயப்பன் வந்து தனக்கு கோயில் கட்டும்படி உத்தரவிட்டதாகவும், அதன்படி தற்போதுள்ள கோயில் நிர்மாணிக்கப்பட்டது எனவும் கூறப்படுகிறது.

அதன்படி அழகான கோயில் கட்டப்பட்டது. இதற்கு கீழே இருந்து 18 படிகள் அமைக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு இது சபரிமலை சந்நிதானத்தின் படிகள் போலவே காட்சியளிக்கும். சந்நிதானத்தின் தோற்றமும் சபரிமலையில் உள்ளது போலவே காட்சியளிக்கும். சந்நிதான கருவறையில் கருணையே வடிவாக காட்சி தருகிறார் ஐயப்பன். கருவறையின் அருகில் கன்னிமூலகணபதி அருள்புரிகிறார். பின்புறம் தல விருட்சமாக வில்வமரம் வீற்றிருக்கிறது.

தரைத்தளத்தில் பதினெட்டு படிகளின் பக்கவாட்டில் வலதுபுறம் கருப்புசாமியும், இடதுபுறம் கருப்பண்ணசாமியும் வீற்றிருக்கிறார்கள். மேலும் பம்பா கணபதி, மாளிகை புரத்து அம்மன், தர்மசாஸ்தா, குழந்தை ஐயப்பன், விநாயகர், அமிர்த கலச தன்வந்திரி, நவக்கிரகம், துர்க்கையம்மன் ஆகிய தெய்வங்கள் அருட்பாலிக்கின்றன. இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாக 27 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான ஜானகி சோபநாப ஆஞ்சநேயர் சந்நதி நிறுவப்பட்டு வருகிறது.

இக்கோயிலில் கார்த்திகை 1ம் தேதி கணபதி ஹோமத்துடன் பக்தர்களுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. கார்த்திகை தீபத்தின்போது சுவாமி ஊர்வலம் நடத்தப்படுகிறது. மார்கழி முதல் ஞாயிறன்று ஊசுட்டேரியில் சுவாமிக்கு நீராட்டு விழா நடக்கிறது. அன்று மதியம் கோயிலில் அன்னதானம் நடக்கிறது. இதனிடையே டிசம்பர் 25ம் தேதியன்று இரும்பை மகாளீஸ்வரர் கோயிலில், மேட்டுப்பாளையம் ஐயப்பன் கோயில் சார்பில் பெரிய விழா ஒன்று நடத்தப்பட்டது. அன்றைய தினம் அமைதி ஹோமம், சாஸ்தா ஹோமம், 108 விளக்கு பூஜை, பஜனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.

மேலும் குழந்தை ஐயப்பன் சுவாமி புதுச்சேரி இந்திரா காந்தி சிலையில் இருந்து கோரிமேடு, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு வழியாக இரும்பை சென்று மகாளீஸ்வரர் கோயிலில் இரவு தங்குகிறார். மறுநாளில் வெகுவிமரிசையாக விழா நடத்தப்பட்டு 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சபரிமலையில் ஜோதி தரிசனம் நடைபெறும் தினத்தில் மேட்டுப்பாளையம் ஐயப்பன் கோயிலிலும் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து படிபூஜை மற்றும் அன்னதானம் நடக்கிறது. இதேபோல ஆடி மாதத்தில் பால்குடம் ஊர்வலம் நடத்தப்படுகிறது. மேட்டுப்பாளையம் ஐயப்பனை மனமுருக வேண்டினால் குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. வேண்டுதல் நிறைவேறப்பெற்றவர்கள் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை செய்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

இக்கோயில் கார்த்திகை மாதம் மட்டுமின்றி மற்ற அனைத்து நாட்களிலும் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும். இத்தகவலை நாகராஜன் குருசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் இருந்து வழுதாவூர் சாலை வழியாக செல்லும் அனைத்து பஸ்களில் ஏறி மேட்டுப்பாளையம் ஜங்ஷனில் இறங்கினால் அருகிலேயே இக்கோயில் அமைந்துள்ளது.

தொகுப்பு:  உ.வீரமணி

படங்கள்: முருகவேல்

Tags : Mettupalaya Iyyappan ,hearing ,
× RELATED தூத்துக்குடியில் நாளை திமுக தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டம்