×

என் ஜாதகம் சரியில்லை, என்ன செய்வது?

நாம் பூர்வ ஜென்ம பாவ புண்ணியங்களின் அடிப்படையில் இந்தப் பிறவி எடுத்திருக்கிறோம். இந்தப் பிறவியில் ஏற்படும் நன்மை தீமைகளை நம்முடைய பூர்வ ஜென்ம பாப புண்ணியங்கள் தீர்மானம் செய்கிறது என்கின்ற தத்துவம்தான் ஜாதகம் மற்றும் ஜோதிடத்தின் அடிப்படை. இதனை கர்மா தியரி (karma Theory) என்று சொல்லுவார்கள். ஒருவருக்கு அதிர்ஷ்ட பலன்கள் கிடைப்பதும், ஒருவரின் வாழ்க்கை முழுக்க சஞ்சலத்தோடு கழிவதும் ஜாதகக் கட்டங்களில் தெரியும் என்றாலும்கூட, மிக முக்கியமான ஒரு உண்மையை நாம் தெரிந்து கொண்டால் அதிலிருந்து எப்படி மீண்டு வரலாம் என்பதையும் கண்டுகொள்ள முடியும். நோய் ஜாதகம் சொல்லும். மருந்து நாம் தான் எடுத்துக் கொள்ளவேண்டும்.

மருந்து, நோயை குணமாக்கினாலும், அது தீரும் வரை சில சங்கடங்கள் இருக்கத்தானே செய்யும். அவ்வளவுதான் கிரகங்களால் செய்யமுடியும். ஒரே ஒரு விஷயத்தில் நீங்கள் உறுதியாக இருங்கள். ஏதோ ஒரு விதத்தில் நீங்கள் பணக்காரனாகவோ ஏழையாகவோ சில பிளஸ் மைனஸோடு பிறந்திருக்கிறீர்கள். அது உங்கள் கையில் இல்லை. உங்கள் பூர்வ பாவ புண்ணியம் அதை தீர்மானித்து, இந்த உலகுக்கு அனுப்பி வைத்திருக்கிறது.அடுத்து, நீங்கள் இப்படித்தான் வாழப் போகிறீர்கள் என்பதையும் ஒரு ஜாதக கட்டத்தில் உள்ள கிரகங்களும், அவர்களுக்கு நடைபெறுகின்ற தசா புத்திகளும் காட்டுகின்றன. அது அப்படித்தான் நடக்கும் என்பதும் உண்மைதான். ஆயினும் அதைப் பார்த்து தெரிந்து கொள்வதால் என்ன லாபம்? ஜாதகம் பார்க்காமலே இருப்பதால் ஒன்றும் குடி மூழ்கிப் போய்விடாது. பலரும் பார்க்காமல் இருக்கின்றார்கள். அதனால் பெரிய இழப்பு ஒன்றும் அவர்களுக்கு இல்லை. ஜாதகம் பார்ப்பதால் என்ன பிரயோஜனம் என்று சொன்னால், நம்முடைய அமைப்பு எப்படி இருக்கிறது? நாம் எப்படி வாழ வேண்டும்? எப்படி வாழ்ந்தால் அந்த அமைப்பின் பிரகாரமும் வாழலாம், அதே நேரத்தில் நிம்மதியாகவும் வாழலாம் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு மட்டுமே ஜாதகக் கட்டங்களைப் பயன்படுத்த வேண்டும்.

என்னிடத்திலே ஒரு நண்பர் கேட்டார். அது அப்படித்தான் என்று சொன்னால் எதற்காக நீங்கள் அந்த பலனைச் சொல்ல வேண்டும்? நான் சொன்னேன். ‘‘ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். ஜாதகத்தில், கிரகங்கள் எந்த நிகழ்ச்சியையும் நடத்துவது கிடையாது என்பது மிக முக்கியமான உண்மை. ஆனால் கிரகங்கள் அந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கான அத்தனை சூழல்களையும் உங்களுக்கு ஏற்படுத்தித் தரும். அந்த சூழல்களில் நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதுதான் உங்களுடைய வெற்றிக்கோ தோல்விக்கோ காரணம். ஒரு சின்ன உதாரணம் சொல்லுகின்றேன். உங்களுக்கும் இன்னொருவருக்கும் ஏதோ ஒரு பிரச்னை வந்து விடுகிறது. அவர் வந்து உங்களிடம் வலிந்து வலிந்து சண்டை போடுகின்றார். இது ஜாதகத்தின் பிரகாரம் நடைபெறுகின்றது.

ஆனால், நீங்கள் எப்படி எதிர்வினை ஆற்றப் போகின்றீர்கள் என்பதுதான் முக்கியம். இப்பொழுது உங்கள் செவ்வாயோ, சூரியனோ, வாக்கு ஸ்தானத்திலும், ஆறாமிடத்திலும் இருக்கக்கூடிய மற்ற கிரகங்களோ, உங்களைத் தூண்டிவிடுகின்றன.‘‘நீ ஏன் பதில் பேசாமல் இருக்கிறாய்? அவன் இத்தனை பேசுகின்றானே. அவனுக்குச் சூடாக பதில் கொடு. இல்லாவிட்டால் துணிந்து ஓங்கி அடி.’’ இப்படி ஒரு உணர்ச்சி உள்ளே இருந்து உங்களைத் தூண்டிக்கொண்டே இருக்கும். இதுதான் அந்த கிரகங்கள் செய்வது. ஜாதகரீதியாக உணர்ச்சிவசப்படக் கூடிய ஒரு அமைப்பு (செவ்வாய், சனி, ராகு, சூரியன்) தான் நமக்கு இருக்கிறது என்று தெரிந்துகொண்டால், கிரகங்கள் செய்யும் வில்லங்கங்களைப் புரிந்துகொண்டு நீங்கள் எதிர் பேச்சு பேசாமல் பொறுமையோடு இருந்துவிடலாம். அல்லது இப்படி நடக்கும் என்று தெரிந்து யாராவது ஒரு நல்ல நண்பரை வைத்துக்கொண்டு சமாதானம் பேசி விவகாரத்தை நல்ல படியாக முடித்துவிடலாம். உங்களுக்கு ஒரு சிரமமான எதிர்மறை சூழலை கிரகங்கள் தந்துவிட்டன.

உங்கள் ஆறாம் இடம் என்ன வேலையைச் செய்ய வேண்டுமோ அந்த வேலையைச் செய்துவிட்டது. நீங்கள் எதிர்வினை ஆற்றினால், அந்த ஆறாம் இடம், எட்டாம் இட வினையாக மாறி, உங்களை காவல் நிலைய பஞ்சாயத்துக்கு அழைத்துச் சென்று இருக்கும். அதைவிட உணர்ச்சி வசப்பட்டு இருந்தால், 12ஆம் இடம் செயல்பட்டு உங்களை சிறையில் தள்ளி இருக்கும். அதுதானே பலருடைய வாழ்க்கையில் நடந்துவிடுகிறது. ஏதோ ஒரு சின்ன கேள்வியை கேட்டான் அதற்கு பதிலாக இவன் அதீத உணர்ச்சியில் கத்தியை எடுத்து குத்திவிட்டான் என்பதை நாம் பார்க்கிறோம் அல்லவா. கிரகங்கள் சண்டைக்கான சூழ்நிலையை அமைத்துத் தருகின்றன. அந்தச் சண்டையை எதிர்கொள்ளும் வாய்ப்பு நமக்கு புத்தி பூர்வமாக வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் (how we react) என்பதுதான் நமக்கு வெற்றியோ தோல்வியோ கொடுக்கிறது. இப்பொழுது ஒரு கேள்வி கேட்கலாம். சில நேரங்களில் நாம் எதிர்வினை ஆற்றாமல் இருந்தாலும்கூட மிக மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கிறது. எத்தனை புத்திசாலித்தனமாகச் செயல்பட்டாலும் சில நிகழ்ச்சிகளை தவிர்க்க முடியவில்லையே என்று கேட்கலாம். உண்மைதான்.

மருத்துவர் நோய் தீரவேண்டும் என்று 8 மணிநேரம் கடுமையாகப் போராடி அறுவை சிகிச்சை செய்கிறார். ஆனால் பலன் இல்லை. நாம் அப்பொழுதும் ‘‘இவ்வளவு முயற்சி செய்தார்’’ என்று. மருத்துவரைப் பாராட்டுவோம். விதியோடு நேர்மையாகப் போராடினோம். சில நேரங்களில் விதி வென்றுவிட்டது. விதி சக்தி வாய்ந்தது. அது வெல்லட்டும். பிரச்னை இல்லை. ஆனால், அப்படிப்பட்ட விதியோடு நாம் எதிர்த்து போராடினோம் அல்லவா, அதுவே நமக்கு மிகப் பெரிய வெற்றி அல்லவா!

The post என் ஜாதகம் சரியில்லை, என்ன செய்வது? appeared first on Dinakaran.

Tags :
× RELATED துலாம் ஆணுக்கு பொருந்தும் பெண்