×

துல்லியமாக கண்டறியும் தோஷங்கள்

ஒருவருடைய பிறப்பின் ஜாதகத்தை வைத்து ராகு – கேது தோஷங்களையும் அல்லது செவ்வாய் தோஷங்களையும் பார்க்கும்போது, அது நிறைய ஜாதகங்களுக்கு பொருத்தமாக வருவதில்லை. ஆனால், அட்சய லக்ன பத்ததியில் ஏ.எல்.பி லக்னத்திற்கு ராகு – கேது தோஷம், செவ்வாய் தோஷம் பார்த்தால், அது 100% தீர்மானமாகப் பொருந்தி வரும்.

குறிப்பு: தங்களுடைய ஜாதகத்தை எடுத்து, அட்சய லக்னத்தை வைத்து ஆய்வு செய்து பார்த்தீர்களானால், மேலே குறிப்பிட்டவாறு செவ்வாய் தோஷம் அல்லது ராகு – கேது தோஷம் இல்லாததை அல்லது இருப்பதை நீங்களே பார்த்து தெரிந்து தெளிவு பெறலாம். அட்சய லக்ன பத்ததியில் திருமணப் பொருத்தத்திற்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதற்காகவே ஒரு பிரத்தியேகமான மென்பொருள் பல ஆய்வுகளுக்கு பின் உருவாக்கப்பட்டுள்ளது.

நட்சத்திரப் பொருத்தம் பார்த்து செய்யப் படும் திருமணங்கள், பல தோல்வியில் முடிவதன் காரண காரியங்களை ஆராய்ந்து பார்த்தபோது, அட்சய லக்னங்கள் பொருந்தாமல் போவதை அறிய முடிகிறது. லக்னம் என்பது உடல். ஆண் பெண் இருவரது அட்சய லக்னங்களும் ஒன்றுக்கொன்று பொருத்தமாக அமைந்தால், அவர்களுடைய உடல் பொருத்தங்களும் நன்றாக உள்ளது என்பதை அறியலாம்.ஆகவே ஆண், பெண் அட்சய லக்னங்கள் 2,6,8,12 ஆக வரும்பொழுது, அதீத அழுத்தங்களை கொடுக்கும். எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி திருமண காலங்களை தள்ளி வைக்கும். மீறி திருமணம் நடந்தாலும் இருவருக்கும் உடல் பொருத்தம் இருக்காது. உடல் பொருத்தம் இல்லை என்றால் அவர்களது இல்லறம் நல்லறமாக அமையாது.

கிரகங்களை பழிக்காதீர்கள்

நமது வாழ்க்கையில் ஏற்படக் கூடிய ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும், நாமே காரணமாகின்றோம். நாம் செய்யும் செயல்களின் பிரதிபலிப்பே, நாம் அனுபவிக்கும் பலன்களாக மாறுகிறது. நாம் மற்றவர்களுக்கு உதவிகள் செய்யாவிட்டாலும், மற்றவர்களை எந்நிலையிலும் துன்புறுத்தாமல், மனம் நோகடிக்காமல் இருந்திருந்தால், நம்மால் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியோ, சிறு உதவிகளோ கிடைத்திருக்குமானால், அச்செயல்களின் பிரதிபலிப்பாக நமக்கு நல்லதே நடந்திருக்கும். நமது ஜாதகத்தில், கிரகங்கள் நல்ல நிலையில் அமையப்பெற்று, நமக்கு நல்லதையே நடத்தித் தருவார்கள்.மாறாக, நம்முடைய சுயநலத்திற்காகவும், சுயலாபத்திற்காகவும், மற்றவர்களை துன்புறுத்தி, பேராசைப்பட்டு, சில நிகழ்வுகளை நம்முடைய சுய சந்தோஷத்திற்காக மட்டுமே செய்யும்போது, அதனுடைய விளைவுகள் கணக்கு வைத்து கிரகங்கள் மூலமாக, பாதக இடங்களில் அமர்ந்து, நமக்குத் தேவையான நல்ல விஷயங்களில் தடைகளையும், மனக்கஷ்டங்களையும் ஏற்படுத்துவார்கள்.

“தீதும் நன்றும் பிறர் தர வாரா’’ என்ற கூற்று உண்மையாகிறது. அதனால், கிரகங்களை பழிக்காதீர்கள் நமது செயல்களே, கிரகங்கள் மூலமாக, உதாரணமாக, போக்குவரத்து நெரிசலில் சிக்னல் விழுவதைப் போல, நாம் செய்த நல்லவைகள், பச்சை நிற சிக்னலையும், நாம் செய்த தவறுகள் சிவப்பு நிற சிக்னல் எச்சரிக்கையாகவும் மாறி, நமக்கு நல்லவை மற்றும் தீயவைகளைக் கொடுக்கிறது என்பதை புரிந்து கிரகங்கள் மேலோ, தெய்வங்கள் மேலோ குறை சொல்லாமல், அவரவர் செயல்களில் சரியாக இருந்தாலே, நமது ஜாதகமும் சரியாக இயங்கும்.

The post துல்லியமாக கண்டறியும் தோஷங்கள் appeared first on Dinakaran.

Tags : ALP Lagna ,Aksaya Lagna Pathathi ,
× RELATED காஞ்சி வரதா! கருணை வரம் தா!!