×

சகுன மற்றும் நிமித்த சாஸ்திரம்

பழங்காலம் தொட்டு முன்னோர்கள் சகுனம், நிமித்தம் ஆகியவற்றை புழங்கி உள்ளனர். அதில் அதீத நம்பிக்கையும் வைத்துள்ளனர். ஆனால், இப்பொழுது நகரங்களில் உள்ள நெருக்கடியான வாழ்வியல் சூழ்நிலையில் சாத்தியமா? என்றால் சந்தேகம் என்றுதான் சொல்ல வேண்டும்.பிரபஞ்சம் என்ற பஞ்சபூத சக்தியாகிய வான், நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகியவற்றுடன் பக்தியோடும் நம்பிக்கையோடும் தொடர்புகொண்ட மனிதர்கள் இதை முழுமையாக நம்புகின்றனர். மண்வாசனை வரும்பொழுது எப்படி மழை பெய்வதை உணர்கிறோம். மழை வருவதை எப்படி மயில்கள் தெரிந்து நடனமாடுகின்றன? ஈசல்கள் முன்னரே அறிந்து இடமாற்றத்தை நோக்கி குழுக்களாக தங்களை நகர்த்துகின்றன. ஏனெனில், இந்த உயிர்கள் எப்பொழுதும் இயற்கையின் பஞ்சபூதங்களின் நிலைகளை வைத்து தங்கள் நிலைகளை மாற்றிக் கொள்கின்றன என்பதே உண்மை.

சகுனம் என்பது என்ன?

ஒரு நிகழ்வின் அடுத்த கட்டத்தை முன்னரே உணர்ந்து கொள்வதற்காக இயற்கை நமக்கு கொடுக்கும் தகவல் என்பதே சகுனம்.ஒரு நிகழ்வின் அடுத்த கட்டம் வெற்றி, தோல்வி என்பது இயற்கைக்கு கிடையாது. இயற்கைக்கு வெற்றியும் தோல்வியும் ஒரே நிகழ்வுதான். அந்த நிகழ்வின் விஷயங்களை பற்றி இயற்கைக்கு ஆரவாரமில்லை அதிசயமும் இல்லை. ஆகவே, குறிப்புகளின் வழியே இயற்கையின் தொடர்புடைய அனைத்தும் இயற்கையின் வெளிப்பாடுகளை அறிந்துகொள்வதே சகுனம் என்பதாக உள்ளது.நிகழ்வுகள் தொடங்கும்போதும் நிகழ்வை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் போதும் இயற்கையின் எதிரொலியாக கிடைக்கப்பெறும் தகவல்கள் சகுனமாக எதிர்படுகிறது.
பிரசன்ன ஜோதிடத்தில் சகுன சாஸ்திரம் முக்கிய குணமாக பார்க்கப்படுகிறது. ஜோதிடத்தின் காரகத் திற்குள் சகுனம் அடையாளங்களாய் வந்து அடுத்த கட்டத்திற்கு அழைத்துப் போகிறது. சகுனத்தில் விற்பன்னராக இருப்பவர்கள் ஜோதிடத்தை எளிமையாக கையாளும் திறமை உள்ளவர்களாக உள்ளனர்.

கிரகங்களின் ஆற்றல் இந்த புவியில் விழும் ஆற்றல்களால் சகுனங்களாக அடையாளமாக்கப்படுகிறது.சகுனம் பலவாறு பிரித்துப் பார்க்கப்படுகிறது. அவை சுபசகுனம், அசுப சகுனம், சுப அசுப சகுனம், அசுப சுப சகுனம் என்று கொள்ளலாம்.
சுப சகுனம் : நிகழ்வின் ஆரம்பத்தி லிருந்து சுபமான அடையாளங்கள் தென்பட்டு தொடர்ந்து சுபமான அடையாளங்களாக வந்து நாம் நினைத்த மாதிரியே நிகழ்வுகள் வந்து நிறைவடைவது சுபசகுனம்.
அசுப சகுனம்: நிகழ்வின் ஆரம்பத்திலிருந்து அசுப அடையாளங்கள் தொடர்ந்து அசுப அடையாளங்களாக வந்து நாம் எதிர்பார்ப்பு இன்றி எதிர்மறையாக முடிவது அசுப சகுனம்.
அசுப சுப சகுனம்: இதில், நிகழ்வுகள் தொடங்கியவுடன் அசுபமான அடையாளங்களாக வந்து பின்பு சுபமான நிகழ்வுகள் வெளிவரும். பின்பு நிகழ்வுகள் நேர்மறையாக முடிவடைவது அசுப சுப சகுனம் என்பதாகும்.
சுப அசுப சகுனம்: நிகழ்வுகள் ஆரம்பத்தின் அடையாளங்கள் யாவும் சுபமாகத் தென்படும். பின்புவரும் அடையாளங்கள் யாவும் அசுப அடையாளங்களாகத் தென்பட்டு முடிவில் எதிர்மறையாக நிகழ்வு முடிவது சுப அசுப சகுனம்.

சகுனத்தை முன்னோர்கள் எவ்வாறு கையாண்டனர்…

திருமணத்தில் ஏதும் அசுப சப்தங்களோ அசுப வார்த்தைகளோ வெளிப்படக்கூடாது என்பதால்தான் நம் முன்னோர்கள் மேள வாத்தியம் நாதஸ்வரம் போன்ற இசை வாத்தியங்களை இயக்கி சுப சப்தங்களுடன் கூடிய சுப நிகழ்வாக மாற்றியமைத்தனர்.கிராமங்களில் நடக்கும் பொதுத் திருவிழாக்களிலும் சங்கு நாதம், மணியோசை, கெட்டி மேளம் போன்றவற்றின் மூலமாக சுபசப்தங்களை எழுப்பி மாற்றினர்.

நிமித்தம் என்பது என்ன?

ஒரு குறிபிட்ட நிகழ்வு நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் நம்மை சுற்றி ஒலிகளாகவும், ஓவியங்களாகவும், வரும் நபர்கள் பேசும் பேச்சுகளின் வழியாகவும் கிடைக்கப்பெறும் புதிர்கள் யாவும் நிமித்தமாகச் சொல்கிறோம். மற்றவைகளில் நிமித்தங்களும் சகுனங்கள் போலவே நிகழ்கின்றன.ஒரு விஷயம் சொல்லும் பொழுது நாம் இருக்கும் இடத்தில் பல்லி சப்தம் எழுப்புவதை (கௌலி கத்துதல்) நடக்கும் என்பதை உணர்த்துகிறது. சிலப்பதிகாரத்தில் இளங்கோ வடிகள் கோவலனும் கண்ணகியும் மதுரை மாநகருக்குள் நுழைகின்றனர். அப்பொழுது அங்கு கோட்டையின் மதில்சுவர் மீதிருந்த மீன் கொடியானது காற்றில் அசைந்தாடுவதை இளங்கோ வடிகள் வர வேண்டாம்! வரவேண்டாம்! திரும்பிச் சென்றுவிடுங்கள் என கொடி சொல்வதாக அழகாக சொல்லியிருப்பார். இதுவும் நிமித்தத்தின் அடையாளமே.

சுப சகுனங்கள்…

மஞ்சள் நிறக் குடை, வெண்சாதம், புஷ்பம், தீபம், சங்கு, வண்டு, பொன், விசிறி, வளையல், கிளி, மான், கருடன், கரும்பு, தேன், பசு, இளநீர், முகம் பார்க்கும் கண்ணாடி, மாவிலை, வெண்ணெய், தயிர், மோர், துணியை வெளுப்பர், குழந்தையை வைத்துக் கொண்டிருப்பது, தாமரை மலர், விருந்துக்குச் செல்கின்ற கூட்டமான நபர்கள், தானியம், கன்னிப் பெண்கள் ஆகிய அடையாளங்கள் யாவும் சுப சகுனம்.
கருடன் வட்டமிட்டாலும்…
வீட்டில் கண்ணாடி உடைவது…
இரவில் கறுப்பு பூனையை காண்பது…
பெண்களுக்கு இடது கண் துடிப்பது…
காகம் கரைதல்…
கழுதையை காண்பது…
நரியை காண்பது…
புல்லாங்குழல், வீணை போன்ற இசை எல்லாமே சுப சகுனங்கள்.

The post சகுன மற்றும் நிமித்த சாஸ்திரம் appeared first on Dinakaran.

Tags : Saguna ,Nimitta Shastra ,
× RELATED துலாம் ஆணுக்கு பொருந்தும் பெண்