×

துலாம் ராசியினரின் இருக்கு – இல்லை முரண்பாடுகள்

இவர்கள் எல்லோரோடும் நட்புணர்வோடு பழகுவார்கள். ஆனால், நண்பர்களின் கூட்டத்தோடு அதிக நேரம் இருப்பதை இவர்கள் விரும்புவதில்லை. சிறிது நேரம் கூட்டத்தோடு பேசிவிட்டு, பின்பு ஒரு ஆண் அல்லது பெண் நண்பருடன் தனியே கிளம்பி விடுவார்கள்.

தனிமை விரும்பி

துலாம் ராசி ஆண்களும் பெண்களும் தனித்துச் செயல்படுவதில் ஆர்வம் உள்ளவர்கள். அதிகமாக யாரிடமும் பேச மாட்டார்கள். விற்பனை வேலைகளுக்கு இவர்கள் சரிப்பட்டு வர மாட்டார்கள். பெண்களை கவரக்கூடிய முக வசீகரமும் பேச்சுத் திறனும் சிறப்புப் செயற்பாடும் உடைய பெண்களை அதிகம் கவரக்கூடியவர்கள். ஆனால், அதே சமயம் பெண்களோடு அதிக நேரம் செலவிடுவதை இவர்கள் விரும்புவது கிடையாது. தன் காரியம் முடிந்ததும் பிரிந்து சென்றுவிடுவார்.

ஏற்றமும் இறக்கமும்

துலாம் ராசியினர் (mood swings) மூட் ஸ்விங்க்ஸ் அதிகம் உண்டு. சில நேரம் சிரித்துப் பேசுவார்கள். சில நேரம் முகத்தை உம் என்று வைத்துக்கொள்வார்கள். அதற்கென்று பிரத்தியேக காரணங்கள் எதுவும் இருக்காது. ஒரு குணம் (மூட்) வந்தால் பேசுவார்கள். ஒரு குணம் (மூட்) வந்தால் அமைதியாக இருப்பார்கள்.

அளவோடு பழகி
உறவோடு கலந்து

துலாம் ராசியினர் எப்போதும் அளந்து சில வார்த்தைகள் பேசுவார்களே தவிர, வளவளவென்று பேசுகின்ற பழக்கம் கிடையாது. தனக்கு சம்பந்தமில்லாத விஷயங்களையும் இவர்கள் பேசுவதில்லை. தன் நண்பர்களுக்கு ஒரு சிக்கல் உறவினர்களுக்கு ஒரு சண்டை என்றால் அந்த இடத்தில் இவர்கள் இரு தரப்பு நியாயத்தையும் உணர்ந்து பேசி எடுத்துக் கூறி சமாதானம் செய்து பிரச்னையைத் தீர்த்து வைப்பார்கள்.

எதிர் செயற்பாடு

துலாம் ராசி ஆண்களின் மௌனம், ஒதுங்கிச் செல்லும் தன்மை ஆகியவை மற்றவர்களுக்கு எரிச்சல் ஊட்டும். சில சமயம் அரசியல்வாதி, சினிமாக்காரர்கள் தனிப்பட்ட விஷயங்கள் தனக்குத் தேவையில்லை என்று கருதி அவ்விஷயங்களை பற்றி நீளமாக விவாதிக்கும் நண்பர்களுடன் சண்டை போடுவார்கள். அரசியல் பற்றி பேசும்போது இவருக்குப் பிடிக்கவில்லை என்றால் ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன அவனவன் வேலை பார்த்தால்தான் அவனுக்கு வாழ்க்கை. போய் அவரவர் வேலையைப் பாருங்கள் என்று கூறுவார்கள்.

உள்ளே வெளியே

துலாம் ராசியில் சனி உச்சம் அடைகிறார். இதனால் சனியின் தாக்கம் உள்ள சிலர் எப்போதும் பரபரப்பாக மன அமைதியின்றி இருப்பதைப் பார்க்கலாம். மன அழுத்தம் கூடி குழப்பவாதிகளாகவும் சந்தேகப் பிராணிகளாகவும் சிலர் இருப்பார்கள். ஆனால் வெளியே இவர் இப்படி என்று தெரியாது. துலாம் ராசியினர் உள்ளுக்குள் கோபமாக இருந்தால் வெளியே காண்பிப்பதில்லை அந்த நேரத்திலும் மற்றவர்களிடம் அன்பாகவும் அமைதியாகவும் இனிமையாகவும்
பேசுவார்கள்.

கவர்ச்சிக்கண்ணியில் சிக்குவோர்

பெரும் பணக்காரர்களையும் செல்வாக்கு மிக்க அவர்களையும்கூட துலாம் ராசி ஆண்கள் தங்களின் குறும்புப் புன்னகையாலும் கரும்புப் பேச்சாலும் கவர்ந்துவிடுவார்கள். அழகான சுருள் முடியும் அடர்ந்த புருவமும் நீண்ட கண் இமைகளும் அடர்த்தியான மீசையும் கொண்ட இவர்களில் சிலர் நல்ல தாடியும் வளர்த்திருப்பதைப் பார்க்கலாம். இவர்களின் கன்னங்கள் வடிவாக திரட்சியாக இருக்கும். சுக்கிரனுக்குரிய உறுப்பு கன்னமும் ஆகும்.

பேசி மயக்கும் திறன்

துலாம் ராசிக்காரர்கள், பேசினால் கண்ணனின் குழல் இசைக்கு மயங்கிய பசுக்களைப் போல அந்த இடத்தில் அவரது நண்பர்களும் மற்றவர்களும் அவர் பேச்சைக் கேட்டு ரசிப்பார்கள். ஒருவர் இரண்டு மூன்று மணி நேரம் பேசிய பேச்சைக் கூட இவர் தன்னுடைய பத்து நிமிடப் பேச்சில் மாற்றிக் காட்டிவிடுவார். இன்னும் கொஞ்சம் நேரம் பேசமாட்டாரா என்று ஏங்கும்படி இவருடைய பேச்சு சுவாரஸ்யமாக இருக்கும். சிரித்த முகத்துடன் பேசுவார், மென்மையாகப் பேசுவார், கோபத்தில் கத்துவதோ வசைச் சொற்களைப் பேசுவதோ கிடையாது. இவருடைய அடக்கமான கோபமும் ஆண்மை கலந்த நளினமும் பலரையும் இவர் பக்கம் ஈர்த்து இவருக்கு ரசிகர்கள் ஆக்கிவிடும்.

சோம்பல், சுயநலம், சொகுசு

துலாம் ராசியினரில் சிலர் சோம்பேறித்தனம் கொண்டவராக இருப்பர். சில நாட்களில் எழுந்து குளித்துத் துணி மாற்றக்கூட சோம்பேறித்தனப்படுவர். சாப்பிடுவதற்கு அம்மாவையோ மனைவியோ அழைத்து ஊட்டி விடச் சொல்வார்கள். துலாம் ராசியினரிடம் தனக்காகவோ பிறருக்காகவோ இரவு பகலாக உண்ணாமல் உறங்காமல் வேலை பார்க்கும் பழக்கம் இருக்காது. சில சமயம் தன்னுடைய நன்மைக்காகத் தேவைப்பட்டால் இவர்கள் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் இரவு பகல் பாராமல் உழைப்பார்கள்.

உணவும் உடல்கோளாறும்

இவர்கள் எடை அதிகம் இருப்பதைப் பார்க்கலாம். சர்க்கரைநோய் இருக்கும். சிறுநீரகப் பிரச்னை இருக்கும். சில வேளைகளில் இவர்களுக்கு (hangover) கடுமையான தலைவலி வாந்தி குமட்டல் வரும். பிரஷர் இருக்கும். செரிமானம் ஆகாமல் குடல் நோய் வருவது சகஜம். அல்சர் போன்ற குடல் புண் வாய்ப்புண் இருக்கக்கூடும். ஆனால், இவர்களுக்கு இருக்கும் எந்த நோயும் வெளியே தெரியாது.

யாருக்கு புத்திமதி?

பொதுவாக துலாம்ராசி ஆண்களும் பெண்களும் உள்ளே வெளியே என்று இரண்டு உணர்வுகளையும் செயற்பாடுகளையும் கொண்டிருப்பார்கள். மது அருந்துவதால் வரும் தீமையை உணர்ச்சிகரமாக எடுத்துச் சொல்லி மற்ற குடிகாரர்களைத் திருந்துங்கள் என்று உபதேசிக்கும் இவர்கள், அவர்கள் கிளம்பியதும் மது குடிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஆனால், இவர்களுக்கு எவரும் புத்திமதி சொல்ல இயலாது. ஊருக்கே புத்திமதி சொல்லும் இவர்களுக்குத் தெரியாத விஷயம் எதுவும் இல்லை என்றாலும் இவர்களால் இவர்களின் உணர்வுகளைக் கட்டுப்படுத்த இயலாது.

The post துலாம் ராசியினரின் இருக்கு – இல்லை முரண்பாடுகள் appeared first on Dinakaran.

Tags :
× RELATED துலாம் ஆணுக்கு பொருந்தும் பெண்