அரியலூர்: புதுக்கோட்டை நகர்ப்புற ஊரமைப்பு உதவி இயக்குனரின் வீடு உள்பட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய 16 மணி நேர சோதனையில் ஒரு கிலோ தங்கம், 8 கிலோ வெள்ளி, ரூ.8 லட்சம் ரொக்கம் சிக்கியது. குறுகிய காலத்தில் அவர் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்தது எப்படி என லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அரியலூர் முனியப்பர் கோயில் தெருவை சேர்ந்தவர் தன்ராஜ் (58). புதுக்கோட்டையில் நகர்ப்புற ஊரமைப்பு உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வாணி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் ஒருவர் டாக்டராகவும், மற்றொருவர் இன்ஜினியராகவும் உள்ளனர். தன்ராஜ் அடுத்த மாதம் ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தன்ராஜ் மீது புகார்கள் சென்றது. இதைத்தொடர்ந்து தன்ராஜ் வீட்டுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையில் 3 கார்களில், 10 போலீசார் நேற்று வந்தனர். உள்பக்கமாக கதவை பூட்டிவிட்டு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.இதேபோல் தன்ராஜூக்கு சொந்தமான ஸ்கேன் சென்டர், திருமண மண்டபம், ஓடக்கார தெருவில் உள்ள மற்றொரு வீடு, பெரம்பலூர் மாவட்டம் பிலிமிசை கூத்தூரில் உள்ள அவரது மற்ற 2 வீடுகள் என 6 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் கூத்தூரில் உள்ள தன்ராஜூக்கு சொந்தமான நிலங்கள், பம்ப் செட்டுகளையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அனைத்து இடங்களிலும் நடந்த இந்த சோதனை நேற்றிரவு 10 மணியளவில் நிறைவடைந்தது. 16 மணி நேர சோதனையில் முனியப்பர் கோயில் தெரு வீட்டில் இருந்து ஒரு கிலோ தங்கம், 8 கிலோ வெள்ளி மற்றும் ரூ.8 லட்சம் ரொக்கம் சிக்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.இந்த சோதனை குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சந்திரசேகரன் கூறுகையில், ‘வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த தகவலின்பேரில் இந்த சோதனை நடந்தது. மேலும் குறுகிய காலத்தில் அவர் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்தது எப்படி, அரசியல்வாதிகள், உயரதிகாரிகள் தொடர்பு உள்ளதா என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். அழைக்கும்போது விசாரணைக்கு வர வேண்டும் என்று கூறியுள்ளோம்’ என்றார்….
The post அரியலூர், பெரம்பலூரில் 16 மணி நேர சோதனை நிறைவு அதிகாரி வீட்டில் 1 கிலோ தங்கம் ரூ.8 லட்சம் ரொக்கம் பறிமுதல்: விஜிலென்ஸ் கிடுக்கிப்பிடி விசாரணை appeared first on Dinakaran.
