×

இறைவனுக்கு உடைக்கும் தேங்காய் அழுகியிருந்தால் செய்ய வேண்டிய பரிகாரம்

நம் வீட்டில் இறைவனுக்கு விசேஷ பூஜைகளை செய்து வழிபடும் போதும், கோவிலுக்கு சென்று இறைவனுக்கு அர்ச்சனை செய்து வழிபடும் போதும், நாம் உபயோகப்படுத்தும் ஒரு முக்கியமான பொருள் தேங்காய். தேங்காய் உடைத்து பூஜை செய்வதை காலம் காலமாக நம் முன்னோர்களும், அவர்களின் வழியில் நாமும் கடைப்பிடித்துக் கொண்டு வருகின்றோம். இப்படி நாம் இறைவனுக்கு உடைக்கும் தேங்காய் அழுகியிருந்தால் அதற்கு என்ன அர்த்தம் என்பதை பற்றி காணலாம். தேங்காயில் இருக்கும் முதல் கண் பிரம்மனும், இரண்டாவது கண் லக்ஷ்மியும், மூன்றாவது கண் சிவனாகவும் கூறப்படுகிறது. தேங்காய் உடையும் விதத்தை வைத்து பலவகையான கருத்துக்களை கூறுவார்கள்.

அதாவது தேங்காய் அழுகி இருப்பது, கோணலாக உடைவது, தேங்காய்ப் பூ உள்ளே இருப்பது, சிதறு தேங்காய் உடைக்கும் போது சுக்குநூறாக உடைவது, கொப்பரை யாக இருப்பது, இப்படி எந்த விதத்தில் தேங்காய் உடைந்தாலும் அதற்கு நன்மையும் உண்டு தீமையும் உண்டு என்று தான் சகுன ஜோதிடம் கூறுகின்றது. ஆனால் நாம் உடைக்கும் தேங்காயானது வீட்டில் உடைத்து அழகினாலும், கோவிலில் உடைத்து அழகினாலும், அது நமக்கு மன கஷ்டத்தையும், ஒரு விதமான சங்கடத்தையும் தான் தருகின்றது. இப்படி நாம் உடைக்கும் தேங்காய் அழுகியிருந்தால் அது உண்மையில் சரியா. தவறா. என்று கேட்டால் ஆன்மீக கருத்துப்படி அது தவறு. சகுனப்படி அது சரியே.

தேங்காய் உடைக்கும் போது அழுகி இருந்தால் கண்திருஷ்டியும், நம்மைப் பிடித்த தீயசக்திகளும் அதனுடன் சேர்ந்து அழுகி விட்டது என்று அர்த்தம். இது ஒரு நல்ல அறிகுறி. நல்ல சகுனம் தான் என்று கூறுகின்றனர். தேங்காய் கொப்பரையாக இருந்தால் அவர்களின் வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். தேங்காயை சூறை விடும்போது சுக்கு நூறாக உடைந்தால் நம் சங்கடங்கள் சிதறிப்போகும். தேங்காய் உடைக்கும் போது பூ வந்தால் லாபம், பணவரவு, நம் குடும்பத்திற்கு நல்லது, என்று நாம் இதை எல்லாம் எப்படி ஏற்றுக் கொள்கிறோமோ, அதே போல் தேங்காய் அழுகி இருந்தாலும், நம்மைப் பிடித்த கெட்டது இதோடு விட்டு விட்டது. என்று நினைத்து மன அமைதி கொள்ள வேண்டும்.

இதனால் நமக்கு எந்த கெட்டதும் நடக்காது. தேங்காய் அழுகி இருந்தால் நாம் இறைவனிடத்தில் வேண்டிக் கொண்ட வேண்டுதல்களை மறந்திருந்தாலும், அதை நமக்கு இறைவன் நினைவு படுத்துகிறான் என்று கூட இதற்கு அர்த்தமாகும். உங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிக்காக நீங்கள் தேங்காய் உடைத்து அழுகியிருந்தால், உங்கள் மனது தேங்காய் அழுகியதை ஏற்றுக் கொள்ளாமல் சஞ்சலத்தில் இருக்கும். கெட்டது நடக்கும் என்ற பயம் உங்கள் மனதில் உறுத்திக் கொண்டு இருந்தால், அதற்கான பரிகாரம் ஆன்மீகத்தில் உண்டு. உங்களால் முடிந்தவரை ஐந்திலிருந்து ஏழு பேருக்காவது அன்னதானம் வழங்க வேண்டும். அன்னதானம் வயதில் முதியவருக்கோ, ஊனமுற்றோருக்கோ, ஆதரவு அற்றவர்களுக்கோ வழங்குவது என்பது இன்னும் சிறப்பு. அன்னதானம் வழங்கிய பின்பு மற்றொரு முறை இரண்டு தேங்காயை உடைத்து உங்கள் பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம்.

Tags : Lord ,
× RELATED ஏகலிங்கம்