×

இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன் அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்!

அகிலத்தின் தொடர் இயக்கத்திற்கு ஆதாரமாக விளங்குவது ஆற்றலே! அந்த ஆற்றலின் வடிவமாக ஆராதிக்கப்படுபவளே அம்பிகை! தேவியைப்புகழாத கவிஞர்களே நம் தேசத்தில் இல்லை என்று கூறி விடலாம்.இந்து மத சமயங்களின் நெறியை ‘ஆறாத வகுத்தார் ஆதிசங்கரர். அதனால் ‘ஷண்மத ஸ்தாபகர்’ என்று அவர் போற்றப்படுகிறார்.கணபதியை வழிபடும் காணாபத்யம்குமரனை வழிபடும் கௌமாரம்சிவபிரானை வணங்கும் சைவம்விஷ்ணுவை வணங்கும் வைணவம்சக்தியைப் போற்றும் சாக்தம்சூரியனைப் போற்றும் சௌரம்இவ்வாறு ஆறு மூர்த்தியரை வழிபடும் பகுப்பை ஆதிசங்கரர் நமக்கு அளித்தார்.ஆறு நெறிகளிலும் ஆறு கடவுளர்கள் என்றாலும் அனைத்திற்கும் ஆதாரமாக விளங்குவதே சக்தி வழிபாடு.சக்தியைப் போற்றுவது ‘சாக்தம்’ என்று தனியாக அழைக்கப்பட்டாலும் அம்பாளை ‘மூவிரு சமயத்து முதல்வி’ என்றே பக்திப் பாவலர்கள் பரவுகின்றனர்.‘ஆதாரம் சக்தி என்றே அருமறைகள் கூறும்!யாதானும் தொழில் புரிவோம்! யாதும் அவள்
தொழிலாம்!- என்று பாடுகிறார் மகாகவி பாரதியார்.

விநாயகர் தன் மனைவியான வல்லபை மூலமாகவே பக்தர்களுக்கு அருள்புரிந்து வல்லப கணபதியாக வாழ்த்தப் பெறுகிறார். வடிவேலன் இச்சாசக்தியான வள்ளிநாயகியார் வழியாகவே வரங்களை வழங்குகிறார்.
‘பணியாக என வள்ளி பதம் பணியும்

தணியா! அதி மோக தயா பரனே!- என்கிறது கந்தர் அனுபூதி!
‘சக்தி இருந்தால் செய்! இல்லையென்றால் சிவனே என்று கிட!’ என்று பேச்சு வழக்கில் சொல்லப்படுவதன் மூலம் சிவபிரான் அம்பிகை மூலமாகவே செயற்படுகிறார் என்று தெளிவாகிறது. பெருமாளாகிய விஷ்ணு தாயார் சந்நதியான  மகாலட்சுமி மூலமாகவே கருணை புரிகின்றார் என்பது கண் கூடு.
அகலகில்லேன் இறையும் என்று
அலர்மேல் மங்கை உறை மார் பா!
என்று போற்றுகின்றனர் ஆழ்வார் பெருமக்கள்.சௌர வழிபாட்டிலும் சூரியன் தன் இல்லத்தரசியான சாயாதேவி வழியாகவே அருள்கின்றான் என்கின்றன சாத்திரங்கள். எனவே ஆறு நெறிகளான விண் மத வழிபாட்டில் ‘சாக்தம்’ தனியாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும் மற்ற ஐந்து நெறிகளிலும்  அன்னை பராசக்தியே ஆட்சி புரிகின்றான் என்று அறிந்து கொள்வோம். அதனால் தான் மகாகவி பாரதியார் அமுத்தம் திருத்தமாக அறுதியிட்டு உரைக்கின்றார்.

‘நம்பினோர் கெடுவதில்லை!
 நான்கு மறை தீர்ப்பு!
அம்பிகையைச் சரண் புகுந்தால்
அதிக வரம் பெறலாம்!
அன்பு, கருணை, பாசம், பரிவு, இரக்கம், நேயம் என அனைத்தையும் ஒன்றாக்கினால் அதுவே தாய்மையின் வடிவம் என
அறிவோம்.
அன்னையா? தந்தையா? தெய்வமா?
ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா?- இதில்
உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ?
 
கல்வியா? செல்வமா? வீரமா?
அன்னையா? தந்தையா? தெய்வமா?
ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகும்?  இதில்
உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா?
 
 - என்று அற்புதமாகச் சொற்பதங்கள் தொடுக்கின்றார் கவியரசர் கண்ணதாசன். ‘தனம் தரும்’ என்று இலக்குமியையும், கல்வி தரும் என்று சரஸ்வதியையும் ‘ஒருநாளும் தளர்வறியா மனம் தரும்’ என்று துர்கா தேவியையும் அடுத்தடுத்து ஒரே  பாட்டில் அடுக்கி ஆராதனை செய்கிறார் அபிராமி பட்டர். அதிக வரம் அம்பிகை அருளுகிறாள் என்கின்றார் பாரதியார். ‘அது என்ன அதிக வரம்?’ என்று கேட்டால் அதற்கு பதிலாக விளங்குகின்றது பதிகத்தின் பாடல்.

 ‘சகல செல்வங்களும் தரும் இமயகிரி ராஜதனயை
மாதேவி! நின்னை சத்யமாய் நித்யம்
உள்ளத்தில் துதிக்கும் அன்பர்களுக்கு
 இரங்கி மிகவும் அகில மிதில்
நோய் இன்மை, கல்வி, தனம், தான்யம்,
அழகு, புகழ், பெருமை, இளமை
அறிவு, சந்தானம், வலி, துணிவு, வாழ்நாள், வெற்றி
ஆகு நல்லூழ், நுகர்ச்சி
தொகை தரும் பதினாறு பேறும் தந்தருளி நீ
சுகானந்த வாழ்வளிப்பாய்!
பக்தர்கள் பதினாறு பேறுகளும் பெற்று பெருவாழ்வு வாழ முத்தேவியர் வழிபாடே முக்கியத்துவம் பெறுகிறது.‘சக்தி தாசன்’ என்று பெருமையாக புனை பெயரிட்டு தன்னை அழைத்துக் கொள்வதிலே பேருவகையும் பெருமிதமும் அடைந்து மகாகவி பாரதியார்முத்தேவியரையும்போற்று ‘மூன்று காதல்’ என்ற தலைப்பிலே கவிதை ஒன்று பாடியுள்ளார்.
 
மலையிலே தான் பிறந்தாள்! சங்கரனை மாலை இட்டாள்
உலையிலே ஊதி உலக்கனல் வளர்ப்பாள்
 - என்று மலை மகளான துர்க்கையம்மனையும்
 
பொன்னரசி! நாரணனார் தேவி! புகழரசி!
அன்னையவள் வையமெலாம் ஆதரிப்பாள் ஸ்ரீ தேவி
என்று அலைமகளான இலக்குமியையும்
வாணிகலைத் தெய்வம் மணி வாக்கு உதவிடுவாள்
மாண் உயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே!
 
 என்று கலைமகளான சரஸ்வதியையும் போற்றிப்புகழ்கின்றார்.பாரதியார் வாழ்ந்த காலத்தில் அவருடைய அன்னைப் பெற்று அணுக்கமாகப் பழகிய சிலர் ‘நீங்கள் கதை எழுதுங்கள், காவியம் எழுதுங்கள், நாகம் ஒன்று புனையுங்கள், விதவிதமான கோரிக்கைகளை அவர்முன் வைத்தனர். அதற்கெல்லாம்  முற்றுப் புள்ளி வைக்கும் முகமாக அவர் சொன்ன பதில் கவிதை வடிவிலேயே வந்தது.
 ‘கதைகள் சொல்லிக் கவிதை எழுது’ என்பார்!
காவியம்பல் நீண்டன கட்டு என்பார்
விதவிதப்படு மக்களின் சித்திரம்
மேவி நாடகச் செய்யுளை மேவு என்பார்!
இதயமோ எனில் காலையும் மாலையும்
எந்த நேரமும் வாணியைக் கூவுங்கால்
எதையும் வேண்டிலது! அன்னை பராசக்தி
இன்பம் ஒன்றினைப் பாடுதல் அன்றியே !
பாட்டரசர் போலவே நாமும் பராசக்தியின் பக்தர்களாக மாறி முத்தேவியரையும் முறையாக வணங்கி இவ்வண்ணம்
வேண்டுவோம்.
‘மூவர் உம் அருள் வேண்டி
யாவரும் தொழுகிறோம்!
தேவராய் எமை ஆக்குக !
(தொடரும்)

திருப்புகழ்த்திலகம்
மதிவண்ணன்

Tags : Saran ,
× RELATED தீபாவளி பண்டிகை ஆடுகளுக்கு கடும் கிராக்கி இறைச்சி விலை உயரும் அபாயம்