×

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை தமிழகத்தில் 3 நாள் ராகுல்காந்தி நடைபயணம்: காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்க திட்டம்

சென்னை: கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை செல்லும் ராகுல்காந்தி தமிழகத்தில் 3 நாள் நடைபயணம் மேற்ெகாள்கிறார். அவரது நடை பயணத்தில் ஏராளமான காங்கிரசார் பங்கேற்க திட்டமிட்டுள்ளனர்.   அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை கட்சி தலைமை எடுத்து வருகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கான முயற்சிகளை கட்சியின் மூத்த தலைவர்கள் எடுக்க வலியுறுத்தியுள்ளனர். அதன்படி, ராகுல்காந்தி அதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பாதயாத்திரை நடத்த ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்த மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி கன்னியாகுமரியில் இருந்து ‘பாரதத்தை இணைப்போம்’ என்ற பெயரில் 148 நாள் 3500 கி.மீ., தூர பாதயாத்திரையை ராகுல்காந்தி தொடங்குகிறார். இந்த பாதயாத்திரை காஷ்மீர் வரை செல்ல திட்டமிட்டுள்ளார்.  இந்த யாத்திரைக்கான ஏற்பாடுகள் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்று வருகிறது.   மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த யாத்திரையின் போது, ராகுல் காந்தியுடன் 300 முக்கிய பிரமுகர்கள் தொடர்ந்து நடைபயணம் மேற்கொள்வார்கள். இது தவிர அந்தந்த மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் பாத யாத்திரையில் பங்கெடுப்பார்கள். அவர்கள் மாவட்ட எல்லை வரை உடன் செல்வார்கள். அங்கிருந்து அடுத்த மாவட்ட தொண்டர்கள் வரவேற்று யாத்திரையில் பங்கெடுப்பார்கள்.  இப்படியே இந்த பாத யாத்திரை காஷ்மீர் வரை நடைபெறுகிறது. நாள் ஒன்றுக்கு 25 முதல் 35 கிலோமீட்டர் தூரம் ராகுல் நடந்து செல்லும் வகையில் பயணத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ராகுல்காந்தியின் பாதயாத்திரை தமிழகத்தில் 3 நாட்கள் நடைபெற உள்ளது. அக்டோபர் 2ம்தேதி காந்தி ஜெயந்தி தினத்தில் தமிழகம் வரும் அவர் கன்னியாகுமரியில் காந்தி அஸ்தி கட்டிடத்தில் மரியாதை செலுத்தி விட்டு பாதயாத்திரை புறப்படுகிறார்.  அங்கிருந்து நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், களியக்காவிளை வழியாக கேரள மாநிலம் செல்கிறார். கன்னியாகுமரியில் இருந்து தமிழக எல்லையான களியக்காவிளை வரை 70 கி.மீ. தூரம் உள்ளது. எனவே 2 நாட்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதயாத்திரை செல்கிறார். 3வது நாள் களியக்காவிளையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி செல்கிறார். கேரள மாநில சுற்றுப்பயணத்தின்போது அவரது தொகுதியான வயநாட்டிலும் யாத்திரை செல்லும் வகையில் பயணப்பாதையை அமைக்க திட்டமிட்டுள்ளனர்.  ராகுல்காந்தியின் பாதயாத்திரையை எழுச்சியுடன் நடத்த மாநில அளவில் விரைவில் கமிட்டி அமைக்கப்படும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். பாதயாத்திரையின் போது, பாஜ ஆட்சியின் மக்கள் விரோத போக்கை கண்டித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் 3 நாட்கள் ராகுல்காந்தி நடை பயணம் மேற்கொள்வது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ஏராளமான காங்கிரசார் நடைபயணத்தில் கலந்து கொள்ள கன்னியாகுமரி நோக்கி புறப்பட தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது. அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கவும் திட்டமிட்டுள்ளனர். …

The post கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை தமிழகத்தில் 3 நாள் ராகுல்காந்தி நடைபயணம்: காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்க திட்டம் appeared first on Dinakaran.

Tags : Rakulgandhi ,Kannyakumari ,Kashmir ,Pathyatra Tamil Nadu ,Congress party ,Chennai ,Raakulkanthi ,Tamil Nadu ,Pathyatra ,Raakulgandhi ,Kanyakumari ,
× RELATED உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலி...