×

அளவோடு உண்போம் வளமோடு வாழ்வோம்!

எங்கள் தீபங்களில் ஒளி வந்தது 1710

மரபின் மைந்தன் முத்தையா


உங்கள் காருக்கு பெட்ரோல் போட முற்படுகிறீர்கள் என்றால் எரிபொருள் நிரப்பும் டேங்க்கில் மட்டும் தானே நிரப்புகிறீர்கள். ஒருவேளை உங்கள்  வாகனம் பெட்ரோல் டேங்கர் ஆக இருந்தால் வாகனம் முழுவதுமே நீங்கள் பெட்ரோல் நிரப்பிக் கொள்ளலாம்.ஆனால் நீங்கள் குடும்பத்தோடு பயணம் செய்ய விரும்பும் போது எரிபொருள் கொள்கலனில் மட்டும் தானே  எரிபொருள் நிரப்புவீர்கள்.மனித வாழ்க்கையில் நாம் அன்றாடம் நிரப்பிக் கொள்கிற எரிபொருள் தான் உணவு. பலபேர் தங்களை பெட்ரோல் டேங்கர் என்று நினைத்து மூச்சு முட்ட எரிபொருள் நிரப்பிக் கொள்கிறார்கள். உணவு உங்களுக்கு எரிபொருள் தான் என்பதை உணர்ந்தால் பயணிக்க வேண்டிய அளவு நிரப்பிக் கொண்டால் போதும் என்பதை நன்கு உணர்வீர்கள்.
பெரும்பாலான மனிதர்களுக்கு எவ்வளவு வயதானாலும் உணவு  உண்ணும் கலை கை வருவதில்லை. அதனால் தான் உணவே மருந்து என்பதை  உணராமல் போய்  மருந்தே உணவு  என்னும் நிலை ஏற்பட்டுவிடுகிறது.

குடும்பக்கட்டுப்பாட்டு துறையில் ஒரு காலத்தில் இரண்டு குழந்தைகளுக்கு நடுவே இடைவெளி விடுங்கள் என அறிவுறுத்தினார்கள். ஆனால் அன்றாட  உணவுப்பழக்கத்தில் இரண்டு வேளை உணவுக்கு நடுவே இடைவெளி விட வேண்டும் என்பது பலருக்கும் தெரிவதில்லைஆக்கபூர்வமாகவும் ஆரோக்கியமாகவும் வாழ உணவு உந்து சக்தி ஆகிறது. உறுதுணை புரிகிறது. ஆனால் உணவு பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் உண்கிறபோது அதுவே ஆரோக்கியத்திற்கு சவாலாக வருகிறது.ஆறு வகை சுவைகளுடன் நான்கு வகை உணவுகளை விருந்தினர்களுக்கு படைத்தனர் என பெரிய புராணம் சொல்கிறது.

‘‘கொண்டு வந்து மனைபுகுந்து குலாவு பாதம் விலக்கியே
மண்டு காதலின் ஆசனத்து இடை வைத்து அர்ச்சனை செய்தபின்
உண்டி நாலு விதத்தில் ஆறு சுவைத் திறத்தினில் ஒப்பில்லாத
அண்டர் நாயகர் தொண்டர் இச்சையில் அமுது செய்ய அளித்துள்ளார்”

ஆயுர்வேதம் அன்றாட உணவில் ஆறு வகை சுவைகள் அவசியம் இடம்பெற வேண்டும் என்கிறது. இனிப்பு,  உவர்ப்பு, கசப்பு,  துவர்ப்பு, புளிப்பு, கார்ப்பு  ஆகியவையே அந்த அறுவகை சுவைகள்.இது ஏதோ அன்றாட சாப்பாடு ஆடம்பரமான விருந்தாக அமைய வேண்டும் என்ற அர்த்தத்தில் சொல்லப்படவில்லை. சமச்சீரான சக்தி நிலைக்கு இவையெல்லாம் அடித்தளம்  அமைப்பவை.அளவுக்கு அதிகமாக உணவு உண்ணல் சுவாரசியம் கருதியும் பரபரப்பு தகுதியும் சிலரால் மேற்கொள்ளப்படுவதில்லை. அளவுக்கு அதிகமாக உணவு உண்டு அதை வாட்ஸ் அப்பில் படமெடுத்து பகிர்ந்துகொண்டு சவால் விடும் சாப்பாட்டு ராமன்கள் எத்தனை பேரோ யாமறியோம்.

14 ஆண்டுகள் வனத்தில் இருந்த வேளையில், காய் கனி கிழங்குகளை உண்டு வாழ்ந்த பெருமை ராமனுக்கு உண்டு. ஆனால்  எதனாலோ சாப்பாட்டு ராமன் என்ற பெயர் வழக்குக்கு வந்துவிட்டது. இதற்கு பலரும் பலவிதமான விளக்கங்களை சொல்வதுண்டு.சாப்பாட்டு ராமன் என்ற சொல் ராமனை குறிப்பதல்ல என்றும் இப்படி ராமன் என்றால் ஒரு சொல் ஒரு ஊரில் ஒரு இல் இன்று தன் லட்சியத்தில்   உறுதியாக இருக்கிறானோ அதுபோல சாப்பாட்டு ஆர்வம் இருந்தால் சிலர் எப்போதும் அதே நினைவாக இருப்பதை சாப்பாட்டு ராமன் என்ற சொல்  குறிக்கிறது என்று சொல்வார்கள்.ஒருவன் உணவை சரியாக உட்கொள்ள பழகிவிட்டால், உணவு செரித்தபின் உண்ணும் பழக்கத்தை மேற்கொண்டுவிட்டால் அவனுக்கு மருந்து தேவைப்படாது என்கிறார் திருவள்ளுவர்.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.

நீண்ட விளக்கங்களும் தத்துவங்களும் கூட இதற்கு தேவையில்லை. நீங்கள் ஒரு நாளுக்கு மூன்று வேளை  உண்பவர் என்றால், ஒருவேளை  உணவுக்கு 20 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிற பட்சத்தில் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் உணவுக்கென்று ஒதுக்குகிறோம்.அந்த ஒரு மணி நேரம் நாம் விழிப்புணர்வுடன் இருந்தால் மீதமுள்ள 23 மணி நேரங்கள் ஆரோக்கியமானவையாக மாறிவிடும். முந்தைய காலங்களிலும் சரி, இன்றைய காலங்களிலும் சரி, பசித்திருப்பவர்களுக்கு உணவு தருவது என்பது கடைப்பிடிக்க வேண்டிய நன்முறை. அதே நேரம் பசியில்லாதவர்கள் முன் தின்பண்டங்களை வைத்து வற்புறுத்துவது வன்முறை.பசித்திருப்பவர்களுக்கு உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்பது உண்மைதான். பசி இல்லாத விருந்தினர்களுக்கு, அவர்கள் விருந்தினர்களாக வந்த ஒரே காரணத்திற்காக உண்டி கொடுப்போர் உயிர் கொடுப்போர் அல்ல. உயிர் கெடுப்போர் ஆவர்.

முன்பெல்லாம் மாவட்டத்துக்கு மாவட்டம் தான் உணவுப் பழக்கம் மாறுபடும். இப்போது அப்படியில்லை. மனிதருக்கு மனிதர் உணவுப்பழக்கம் மாறுபடுகிறது. எனவே நம் விருந்தினர்களாக இருந்தாலும் கூட அவர்களின் உணவுப் பழக்கத்தை அறிந்து கொண்டு அதன்பின்னர் உபசரிப்பதே  உகந்தது.ஆள் - அம்பு - வசதி - வாய்ப்பு எல்லாம் இருக்கும் நிறுவனங்கள் சிலவற்றில் கூட விருந்தினர் யாராவது வந்தால் கொஞ்ச நேரத்தில் ஒரு குவளை காபியை கொண்டு வந்து வைத்துவிட்டுப் போகிற வழக்கம் இருக்கிறது.வந்தவருக்கு காபி அருந்தும் பழக்கம் உண்டா, காபிக்கு சர்க்கரை சேர்ப்பாரா மாட்டாரா என்பது போன்ற எந்தக் கவலையும் கொள்வதில்லை. வந்தவர் வணிக வாய்ப்புக்காக வந்திருந்தால் எதற்கு வம்பு என்று கொடுத்ததை விழுங்கி வைப்பார்.

ஆலகாலம் உண்ட சிவனுக்காவது பாகம் பிரியாள் உடனிருந்து கழுத்தில் கை வைத்தாள். மீறி மறுத்தால் “ஒரு நாளைக்கு சாப்பிடுங்க ஒண்ணும்  பண்ணாது” என அருள்வாக்கு சொல்பவர்களும் அநேகம் பேர் உண்டு, ஒரே வீட்டுக்குள் கூட ஒவ்வொருவருக்கும் உணவுப் பழக்கமும் ரசனையும் மாறுபடும். குடும்ப விளக்கு நூலில் பாவேந்தர் பாரதிதாசன் அப்படியொரு காட்சியைக் காட்டுகிறார். குடும்பத் தலைவி சமைக்கும் பொழுதே கணவனின் விருப்பம் குழந்தைகளின் விருப்பம் ஆகியவற்றை மனதில் கொள்கிறாள். அதே நேரம் வீட்டில் இருக்கும் முதியவர்களுக்கு எந்த உணவு ஒத்துக் கொள்ளுமோ அதை அவர்களுக்கு சமைக்கிறாளாம்.

“கொண்டவர்க்கு எது பிடிக்கும்
குழந்தைகள் எதை விரும்பும்
தண்டூன்றி நடக்கும் மாமன்
மாமிக்குத் தக்கதென்ன”

 - என யோசித்து முடிவெடுக்கிறாளாம்.

ஒரு குடும்பத்துக்குள்ளேயே இவ்வளவு வித்தியாசங்கள் உள்ளபோது வெளியிலிருந்து வருபவர்களுக்கு கேட்கவா வேண்டும்?எனவே நமக்கான உணவு என்றாலும் சரி விருந்தினர்களுக்கு உணவு படைக்கும் போதும் சரி, தனிப்பட்ட கவனம் எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.

“உங்கள் உணவுத்தட்டில் 50% பச்சைக் காய்கறிகளுக்கும், பழங்களுக்கும் இடம் கொடுத்தால் உங்கள் மருத்துவ செலவில் 30%  குறையும் என்கிறார்  சத்குரு. நீரிழிவு நோயாளிகளுக்குக் கூட அன்றாட உணவில் பப்பாளி, மாதுளை போன்ற பழங்கள் இடம் பெறலாம் என்று அலோபதி மருத்துவர்களே  சொல்கிறார்கள்.சமச்சீரும் சத்தும் மிகுந்த உணவுப் பழக்கம் இருக்குமெனில் இருவேளை உணவே போதும் என்று நம் முன்னோர் சொன்னதை இன்று பலரும்  ஆமோதிக்கிறார்கள்.  “இருவேளை உண்பவன் யோகி” என்பது நம் தேசத்தின் பொன்மொழி.

எவ்வளவுதான் நான் கட்டுப்பாடாக இருந்தாலும் செல்லும் இடங்களில் எதை எதையோ கொண்டு வந்து வைத்து என் கட்டுப்பாட்டுக்கு  கேடு  விளைவிக்கிறார்கள் என சிலர் புலம்பலாம்.
நாம் உண்ண விரும்பாத உணவு நம் முன்வைக்கப்படும்போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கம்பர் ஒரு காட்சியாகவே வைக்கிறார். மனம் செல்லும் ராமன் முனிவர்களின் பர்ணசாலையில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கும்போது முருகன் தேனும் மீனும் கொண்டு வருகிறார்.  தான் கொண்டு வந்திருப்பதை ராமனிடம் சொல்லவும் செய்கிறார்.குகன், ராமனை நோக்கி, “தங்களுக்கு உணவாக அமையும்படி தேனையும், மீனையும் பக்குவப்படுத்திக் கொண்டு வந்துள்ளேன். தங்களுடைய எண்ணம்  யாதோ?” என்று கேட்டான்.

‘இருத்தி ஈண்டு’ என்னலோடும். இருந்திலன் எல்லை நீத்த
அருத்தியன் தேனும் மீனும் அமுதினுக்கு அமைவது ஆகத்
திருத்தினென் கொணர்ந்தேன் என்கொல் திருவுளம்
ராமன், மூத்தவர்களாகிய முனிவர்களை நோக்கிப் புன்னகைத்து விட்டு,

“குகனே ! நீ அன்போடும் பக்தியோடும் கொண்டு வந்த தேனும், மீனும் மிகவும் அருமையானவை. அமுதத்தைக் காட்டிலும் சிறந்தவை.  இவையெல்லாம் எம்மைப் போன்றவர் ஏற்கத் தக்கவையே. ஆதலால் நாம் அவற்றை இனிதாக உண்டவர்போல் ஆனோம்” என்று குகனிடம் கூறினான்.

அரியதாம் உவப்ப உள்ளத்து அன்பினால் அமைந்த காதல்
தெரிதரக் கொணர்ந்த என்றால் அமிழ்தினும் சீர்த்த அன்றே
பரிவினின் தழீஇய என்னின் பவித்திரம் எம்மனோர்க்கும்
உரியன இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ என்றான்

தந்த உணவை வேண்டாம் என்று விநயமாக மறுத்து தவிர்த்து விடுவது ஒரு கலை தான்.சொல்வேந்தர் சுகிசிவம் தம் தந்தையாரைப் பற்றி என்னிடம் ஒரு செய்தியை பகிர்ந்து கொண்டார். அவருடைய தந்தை எழுத்தாளர் சுகி சுப்பிரமணியமும், ஒரு துறவியும் விழா ஒன்றில் கலந்துகொண்டிருந்தார்கள்.அந்த துறவிக்கு ஒரு விசித்திரமான பழக்கம். உண்ணும்போது பேச மாட்டார். இலையில் வைத்த எதையும் வீணாக்க மாட்டார். போன இடத்தில்  உணவு வேளையில் இலையில் உப்புமாவை அள்ளி அள்ளி வைத்துவிட்டார்கள். சுகி சுப்பிரமணியம் அவர்கள் வேண்டாம் என்று தடுத்தும்  கேட்கவில்லை. துறவி சைகையால் காட்டிய மறுப்பும் பலிக்கவில்லை.திரு .சுகிசுப்பிரமணியம் தனக்கு வேண்டியதை மட்டும் உண்டுவிட்டு மீதத்தை வைத்துவிட்டு எழுந்துவிட்டார். துறவியோ மூச்சு முட்ட உப்புமாவை சிரமப்பட்டு உள்ளே தள்ளிவிட்டு எழ முடியாமல் எழுந்து கை கழுவிய பிறகு கேட்டாராம் “என்னங்க  உப்புமாவை வீணடித்து விட்டீர்களே”.அதற்கு  சுகிசுப்ரமணியம் அவர்கள் சொன்ன பதில்”உப்புமாவை விட உயிர் பெருசு சாமி”உணவின் சக்தி எரிக்கும் போது உயிரும் ஒளிரட்டும். உணவை மதிப்போம். ஆரோக்கியத்தில் ஜொலிப்போம்.

(தொடரும்)

Tags :
× RELATED துலாம் ராசியினரின் இருக்கு – இல்லை முரண்பாடுகள்