×

ஆண்களின் நிம்மதிக்கு துலாம் ராசி பெண்கள்!

துலாம் இலக்கினம் அல்லது துலாம் ராசியைச் சேர்ந்த பெண்கள், அழகாக இருப்பர். இளமையாகத் தோன்றுவர். இனிமையாகப் பழகுவர். எவரிடமும் நட்புணர்வோடும், புரிதலோடும் இருப்பார்கள். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை நொடி நேரத்தில் புரிந்து, தெளிந்து பதில் சொல்வார்கள். அவசரப்பட்டு மடமட என்று பேசுகிறவர்கள் கிடையாது. இவர்கள் பார்க்கவும் பேசவும் அழகானவர்கள். இனிமையானவர்கள். மனைவி அமைந்தால் துலாம் ராசி பெண்கள் அமைய வேண்டும். காரணம், அவர்கள் அமைதி விரும்பிகள். பொறுமையும் நிதானமும் உடையவர்கள். இவர்களைச் சுற்றி அமைதியும் சமாதானமும் சந்தோஷமும் எப்போதும் இருக்கும். விட்டுக் கொடுத்துச் செல்லக் கூடியவர்கள்.

மற்றவர்களின் சந்தோஷத்துக்காகவும், நிம்மதிக்காகவும் இவர்கள் தங்களுடைய வசதி வாய்ப்புகளை விட்டுக் கொடுப்பார்கள். துலாம் ராசி மனைவிகள் கிடைத்த ஆண்கள் கொடுத்து வைத்தவர்கள். துலாம் ராசி பெண்கள் கோபமாகவும் வெறுப்பாகவும் பேசுகின்ற ஆண்களையும் பெண்களையும் விலக்கி வைத்துவிடுவர். இவர்களுக்குச் சண்டை சச்சரவுகளைக் கண்டாலே பிடிக்காது. அந்த இடத்தை விட்டு அகன்று விடுவார்கள். இவர்கள் சமாதான விரும்பிகள் என்பதால், இரண்டு தரப்பினரையும் அழைத்துப் பேசி, அவரவர் நியாயங்களைப் புரிந்து கொண்டு, சமாதானம் செய்து வைப்பார்கள். இரு தரப்பினருமே இவர் தங்களுக்கு நல்லதுதான் செய்திருக்கிறார் என்று நம்பி, இவர்களிடம் அன்பாகவும் இருப்பார்கள்.

தெளிவும் தியாகமும்

துலாம் ராசி பெண்கள் ஒருவருடன் 5 நிமிடம் பேசினாலே அவர்களுடைய குணாதி சயங்களைத் தெரிந்துகொள்வர். யோசித்துத் தீர்க்கமான முடிவு எடுப்பார்கள். முடிவு எடுத்த பிறகு குழம்புவது கிடையாது. அறம் சார்ந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் இவர்களுக்குக் குழப்பம் தடுமாற்றம் என்பது இருக்காது. தெளிவான சிந்தனையும், தீர்க்கமான பேச்சும் காணப் படும். ஆடம்பரத்துக்காகவும் பகட்டு வாழ்க்கைக்காகவும் நியாய தர்மங்களை விட்டுக் கொடுப்பவர்கள் கிடையாது. துலாம் ராசி ஆண்களும் பெண்களும் யாருக்கும் கெடுதல் நினைப்பவர்கள் கிடையாது. சுயநலவாதிகளும் கிடையாது. பொதுநலச் சிந்தனையும் நியாய தர்மத்துக்குக் கட்டுப்பட்டு நடக்கும் வாழ்க்கையும் கொண்டவர்கள்.

எல்லாவற்றிலும் சமம்

துலாம்ராசிப் பெண்கள் வீட்டுக்கும் வேலைக்கும் சமமாக நேரம் ஒதுக்குவர். கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் உரிய நேரத்தைக் கண்டுபிடித்து செலவிடுவர். புகுந்த வீடு மற்றும் பிறந்த வீட்டுக்குத் தேவையான சகலத்தையும் செய்து முடிப்பார்கள். நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வேண்டியவற்றை பாரபட்சம் இன்றி செய்வார்கள். நேரமில்லை வேலை அதிகம் என்ற புலம்பல் இவர்களிடம் இருந்து வராது. திட்டமிட்டு செயல்படுவதில் கெட்டிக்காரர்கள்.

புதுமையில் நாட்டம்

துலாம் ராசிப் பெண்ளுக்குப் பொழுதுபோக்கு என்று நிரந்தரமாக எதுவும் கிடையாது. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது துலாம்ராசிப் பெண்களுக்காகவே எழுதப்பட்ட வெற்றிச் சூத்திரமாகும். புதிது புதிதாக ஏதாவது ஒன்றைப் படிப்பார்கள், செய்வார்கள், செய்து காட்டுவார்கள், செயல் படுவார்கள். இவர்கள் புதுமை விரும்பிகள்.

அழகு மயிலாட

துலாம் ராசிப் பெண்கள், அழகுக் கலைகளில் நாட்டம் உடையவர்கள். நடிகை, மாடல், காஸ்ட்யூம் டிசைனர், மேக்கப் ஆர்டிஸ்ட், ஹேர் டிரஸ்ஸர் போன்ற வேலைகளை ஆர்வத்துடன் செய்வார்கள். சிலர் நடனமணிகளாகத் திகழ்வார்கள். சேலை வியாபாரம், டிசைனர் பிளவுஸ் தைப்பது போன்ற வேலைகளிலும், சேலைகளில் ஓவியம் வரைவது கலர் பெயிண்டிங் செய்வது, ரங்கோலி கோலம் வரைதல், பூ அலங்காரம் செய்தல் போன்றவற்றில் பல புதுமைகளைப் படைப்பார்கள். ஒருமுறை இவர்கள் செய்த டிசைன் மறுமுறை திரும்ப வராது. ஒவ்வொரு முறையும் புதுப்புது டிசைன்களைக் கண்டுபிடிப்பது இவர்களின் திறமையாகும்.

காதல் அரசி

சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்திருக்கும் துலாம் ராசி பெண்கள், மிகச் சிறந்த காதலர்களாகவும், ரொமான்ஸில் கைதேர்ந்தவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு நிறைய கற்பனைகளும் கனவுகளும் இருக்கும். ஒவ்வொரு நொடியும் தங்களின் வாழ்க்கைத் துணை தன்னைக் காதலித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கின்ற இவர்களுக்கு, தம் கணவர் வேலை செய்யும் அழகு, நேர்த்தி, நுட்பம் ஆகியவற்றைக் கண்டு ரசித்துப் பாராட்டுவார்கள். கணவரை ரசிக்கும் மனைவியர் துலாம் ராசியினர். ஆண்களின் தோற்றத்தைவிட அவர்களின் செயல் திறனையும், நுண்ணறிவையும் இவர்கள் அதிகம் காதலிப்பர்.

ஜோடி ராசிகள்

காற்று ராசியான துலாத்துக்கு, மிதுனம், கும்பம் ஆகிய காற்று ராசியினர் பொருத்தமான ஜோடிகளாக அமைவர். இவர்கள் ஒரு சொல்லுக்குள் ஓராயிரம் அர்த்தம் வைத்துப் பேசுவார்கள். அதை புரிந்துகொள்ளக் கூடிய ஆண்களை மட்டுமே இவர்கள் விரும்புவார்கள்.

உடனுக்குடன் உதவி

துலாம் ராசிப் பெண்கள், அனைவரிடமும் அன்போடும் பண்போடும் நடந்து கொள்வர். சிக்கலில் மாட்டிக்கொண்டவர்களுக்கு உடனே தன்னால் இயன்ற உதவியை செய்வர். இளகிய மனதுடையவர்கள் ஆனால் தங்களை யாராவது ஏமாற்றிவிட்டார்கள் என்று தெரிந்தால் தங்கள் ஆயுள் முழுக்க அவர்கள் மீது வன்மம் வைத்துக்கொண்டே இருப்பார்கள்.

உறவும் முறிவும்

துலாம் ராசிப் பெண்கள், நட்பையோ காதலையோ முறித்துக் கொள்ளும் நேரம் வரும்போது நிதானமாக பேசி `உனக்கும் எனக்கும் ஒத்து வராது. நாம் பிரிந்து விடுவோம், நீ உன் வழியிலும் நான் என் வழியிலும் செல்லலாம். வழியில் எங்கேயாவது பார்த்தால் ஒரு ஹலோ சொல்லிக்கொள்ளலாம்’ என்ற வகையில் பிரிந்து செல்வர். அழுது ஆர்ப்பாட்டம் செய்து சபித்து, திட்டி, திமிறி, கதறி, கொந்தளித்து பிரியாமல், ஏதோ சேலைக் கடையில் சேலை பார்த்துவிட்டு பிடிக்கவில்லை என்பது போல நிதானமாகச் சொல்லிவிட்டு போய்விடுவார்கள். இவர்கள் இந்த முடிவை எடுப்பார்கள் என்பதை எதிர் தரப்பினர் எதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள்.

நல்லதொரு குடும்பம்

துலாம்ராசிப் பெண்கள், சிறந்த குடும்பத் தலைவிகள். அருமையான தாய்மார்கள். தங்கள் பிள்ளைகளின் மற்றும் கணவரின் முன்னேற்றம் குறித்து ஒவ்வொரு நொடியும் சிந்தித்துக்கொண்டும், செயல்பட்டுக் கொண்டும் இருப்பார்கள். இவர்கள் நண்பர்களாக கிடைப்பதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நட்பு, சுற்றம், குடும்பம் என்று யாராக இருந்தாலும் தனக்குத் தெரிந்த பயனுள்ள தகவல்களை அவர்களுக்குப் பரிமாறி தனக்குத் தெரிந்த முகவரிகளை அவர்களுக்குக் கொடுத்து அவர்கள் கேட்காவிட்டாலும் இவர்களாக வலிந்து போய் உதவி செய்து மகிழ்வார்கள். மொத்தத்தில், துலாம்ராசி அல்லது துலாம் லக்னத்துப் பெண்கள், அழகும், அன்பும், பண்பும், நிதானமும் கொண்டவர்கள். உறவுச் சிக்கலில் சிக்கிக் தவிக்காதவர்கள். பலருக்கும் உதவக்கூடியவர்கள்.

The post ஆண்களின் நிம்மதிக்கு துலாம் ராசி பெண்கள்! appeared first on Dinakaran.

Tags :
× RELATED துலாம் ஆணுக்கு பொருந்தும் பெண்