×

உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்

திருச்சி: உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் சித்திரை தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் கடந்த 6ம் தேதி சித்திரை தேர் திருவிழா காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. அதனைதொடர்ந்து தினமும் அம்மனுக்கு பகல் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. இரவு 7 மணிக்கு அம்மன் கேடயம், பூத வாகனம், கயிலாய வாகனம், காமதேனுவாகனம், சிம்மவாகனம், யானை வாகனம் ஆகியவற்றில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் 7ம் திருநாளான நேற்றுமுன்தினம் வெக்காளியம்மன் மூலவர் மற்றும் உற்சவருக்கு பகல் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு உற்சவர் வெக்காளியம்மன் அன்ன வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் 9ம் திருநாளான நேற்று தேரோட்டம் நடந்தது. இதனையொட்டி காலை 9 மணிக்கு உற்சவர் வெக்காளியம்மன் தேரில் எழுந்தருளினார்.

10.30 மணி அளவில் திருத்தேர் வடம் பிடிக்கும் வைபவம் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் ஓம்சக்தி, பராசக்தி என்று கோஷம் எழுப்பியபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியே தேர் வீதிஉலா வந்தது. 11ம் நாள் திருநாளான நாளை (16ம் தேதி) பகல் 12 மணிக்கு மகாஅபிஷேகம் நடக்கிறது. நாளை இரவு 7 மணிக்கு கேடயத்தில் அம்மன் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரவு 8 மணிக்கு காப்பு களைதல் நடத்தி விடையாற்றி விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் ஞானசேகரன் மற்றும் வெக்காளியம்மன் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags : Chirakkalam ,Velliyur Vekkaliamman Temple ,
× RELATED ரங்கா.. ரங்கா கோஷம் விண்ணதிர. ...