×

பாலகிருஷ்ணா தள்ளிவிட்ட விவகாரம்; நள்ளிரவில் அஞ்சலி போட்ட டிவிட்

ஐதராபாத்: மேடையில் நடிகர் பாலகிருஷ்ணா தள்ளிவிட்ட விவகாரத்தில் நள்ளிரவில் அஞ்சலி அது தொடர்பாக டிவிட்டரில் தனது கருத்தை வெளியிட்டார். கேங் ஆஃப் கோதாவரி படத்தில் அஞ்சலி நடித்துள்ளார். இப்படத்துக்கான புரமோஷன் நிகழ்ச்சியில் பாலகிருஷ்ணா கலந்துகொண்டார். அப்போது விழா மேடையில் இருந்த அஞ்சலியை ஒதுங்கி நிற்குமாறு பாலகிருஷ்ணா கூறுகிறார். அஞ்சலி சற்று தள்ளி நிற்கிறார். அப்போது திடீரென அஞ்சலியை பாலகிருஷ்ணா தள்ளிவிடுகிறார். நிலைகுலைந்த அஞ்சலியை மற்றொரு நடிகை நேஹா ஷெட்டி தாங்கிப்பிடிக்கிறார். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ இணையதளத்தில் வைரலானது. நெட்டிசன்கள் மட்டுமின்றி, மகளிர் அமைப்பினரும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் திடீரென அஞ்சலி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில், ‘பாலையாவும் (பாலகிருஷ்ணா) நானும் பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்து வருகிறோம், ஒருவரை ஒருவர் மரியாதையுடன் பழகி வருகிறோம். என் படத்தின் புரமோஷன் விழாவுக்கு அவர் வந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவருடன் நான் மேடையை பகிர்ந்து கொண்டதற்கு பெருமைப்படுகிறேன்’ என்று பதிவு செய்துள்ளார். இதன் மூலம் பாலகிருஷ்ணா மீது தனக்கு கோபம் இல்லை என்பதும் இந்த சர்ச்சையை இத்துடன் முடிக்க வேண்டும் என்பதையும் மறைமுகமாக அஞ்சலி விளக்கியுள்ளார் என சினிமா வட்டாரத்தினர் கூறுகின்றனர்.

 

The post பாலகிருஷ்ணா தள்ளிவிட்ட விவகாரம்; நள்ளிரவில் அஞ்சலி போட்ட டிவிட் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Balakrishna ,HYDERABAD ,Anjali ,Twitter ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மேடையில் அஞ்சலியை தள்ளிவிட்ட பாலகிருஷ்ணா: சினிமா விழாவில் பரபரப்பு