×

ஸ்ரீரங்கத்தில் பகல் பத்து 6ம் நாள் விழா : முத்துசாய்வு கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து 6ம் நாளான நேற்று நம்பெருமாள் முத்துசாய்வு கொண்டை அலங்காரத்தில் சேவை சாதித்தார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 8ம் தேதி பகல்பத்து உற்சவ விழாவுடன் துவங்கியது. பகல்பத்து உற்சவத்தின் 6ம் நாளான நேற்று நம்பெருமாள் முத்துசாய்வு கொண்டை அலங்காரத்தில் முத்து அபயஹஸ்தம், உபயநாச்சியார் வைர பதக்கம், தங்ககாசு மாலை, அடுக்கு பதக்கம், முத்துமாலை உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்திருந்தார். காலை 6.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து ஆழ்வார்கள், ஆச்சார்யார்களுடன் புறப்பட்டு பகல்பத்து ஆஸ்தான மண்டபமான அர்ச்சுன மண்டபத்தில் காலை 7 மணிக்கு எழுந்தருளினார்.

அதன்பின் அரையர் சேவை, பொதுஜன சேவையுடன் காலை 7.45 மணிமுதல் மதியம் 1 மணிவரை பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதனைத் தொடர்ந்து மாலை 4 மணிமுதல் உபயக்காரர்கள் மரியாதையுடன் பக்தர்களுக்கு மாலை 6 மணிவரை காட்சி அளித்தார். பின்னர் நம்பெருமாள் இரவு 7 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். மூலவர் பெரிய பெருமாள் காலை 7மணிமுதல் மாலை 5.30 மணிவரையிலும், மாலை 6.45 மணி முதல் இரவு 9 மணிவரை முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோயிலில் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

Tags : celebration ,Srirangam ,Nirrulumal ,pearl ,
× RELATED போலீஸ்காரர் மீது தாக்குதல்: திருச்சியில் பரபரப்பு