திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் உள்ள பிறவி மருந்தீஸ்வரர் கோயில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். திருத்துறைப்பூண்டியில் உள்ள பிரசித்தி பெற்ற பிறவி மருந்தீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன்படி ஒவ்வொரு நாளும் காலை மற்றும் இரவு நேரங்களில் கருடன், வெள்ளி ரிஷபம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுதருளி சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இதற்கிடையே சித்திரை திருவின் சிறப்பு நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது.
இதில் எம்எல்ஏ ஆடலரசன், கோயில் செயல் அலுவலர் முருகையன், ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம், கருணாநிதி, சிவனடியார் திருக்கூட்டம் அமைப்பின் தலைவர் பக்கிரிசாமி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் கோயில் நிலையடியில் இருந்து புறப்பட்டு பக்தர்கள் வெள்ளத்தில் மெதுவாக அசைந்தாடி சென்றது. இதன்படி நான்கு வீதிகளை வலம் வந்த தேர் இரவில் நிலையடி வந்தடைந்தது. பின்னர் தேரிலிருந்து தியாகராஜ சுவாமி கோயில் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.தேரோட்டத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு கோயில் மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை திருத்துறைப்பூண்டி போலீசார் செய்திருந்தனர்.
