×

திருப்புகழ் பஞ்சபூதத் தலங்கள்

பகுதி 13

காஞ்சிபுரம்

‘செஞ்சொல் மாதிசை’ என்று அருணகிரியாரால் போற்றப்படும் தமிழகத்தின் நெற்றித் திலகமாக விளங்குவது காஞ்சி மாநகர் என்றால் அது மிகையாகாது. திருவானைக்கா (நீர்), திருவண்ணாமலை (நெருப்பு), காளஹஸ்தி (காற்று), சிதம்பரம் (ஆகாயம்) எனும் திருத்தலங்களோடு அன்னை பார்வதி, ஆற்று மணலால் லிங்கம் அமைத்து வழிபட்டு, சிவனாருடன் கூடிய பிருத்வி (மண்) தலமாகிய காஞ்சிபுரமும் சேர்ந்து, பஞ்சபூதத் தலங்களாகச் சிறப்புற்று விளங்குகின்றன.

‘கல்வியில் கரையிலாக் காஞ்சி’ என்றும், ‘காந்தக் கல்லும் ஊசியுமே என ஆய்ந்து தமிழ் ஓதிய சீர் பெறு காஞ்சிப்பதி’ என்றும் போற்றப்படும் காஞ்சி, ஏழு முக்தித் தலங்களுள் ஒன்று [காசி, அயோத்யா, ஹரித்வார், அவந்திகா, மதுரா, துவாரகா என்பன மற்றவை]. இத்தலத்தில் அம்பிகை முப்பத்திரண்டு அறங்கள் செய்த காமாட்சி பீடம் மிகுந்த சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கச்சி ஏகம்பர், காமாட்சி அம்மை இருவர் வீற்றிருக்கும் தனிக்கோயில்களுக்கு நடுவே அமைந்திருக்கும் குமரக்கோட்டம், சோமாஸ்கந்த ரூபத்தை நினைவூட்டுகிறது. ஆற்றுப் பூவரசு எனப்படும் காஞ்சி மரங்கள் நிறைந்திருந்த காரணத்தால், காஞ்சி நகரத்திற்கு அப்பெயர் வந்தது என்பர்.

காஞ்சியின் அன்றைய அழகை வாகீச கலாநிதி அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்: “சிறிய மரங்களை உடைய இளமரச் சோலை நகரைச் சுற்றி இருந்தது. குயில்கள் அங்கு பறந்து செல்லமுடியாது. நுழைந்து தான் செல்லமுடியும். காஞ்சி மரங்கள் பல உள்ள சோலை அது. அம்மரங்களில் குருக்கத்திக் கொடிகள் படர்ந்து பூக்களை உதிர்க்கும். அம்மலர்கள் நீரிலே விழுந்திருப்பதைப் பார்த்தால், இடியாப்பத்தைப் பாலில் போட்ட மாதிரி இருக்கும்” என்று நகைச்சுவையாகக் கூறுகிறார்.

காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் மேகலைக்குப் பெயர். நிலமாமகளின் இடையில் அணியும் காஞ்சி போல் நடுவாக அமைந்திருப்பதாலும் அப்பெயர் ஏற்பட்டது என்பர்.

அருணகிரிநாதர், தேவார மூவர், மாணிக்கவாசகர், ஐயடிகள் காடவர்கோன், கச்சியப்ப சிவாச்சாரியார், கச்சியப்ப முனிவர் மற்றும் பட்டினத்தார் ஆகியோரது பாடல் பெற்ற திருத்தலம் காஞ்சி. இங்கு அருணகிரிநாதர் பாடிய 44 பாக்கள் நமக்குக் கிடைத்துள்ளன.

ஏகாம்பரேசுவரர் கோயில், காமாக்ஷி அம்மன் கோயில், குமரகோட்டம், கச்சபாலயம் எனப்படும் கச்ச்பேசுவரர் கோயில் ஆகிய கோயில்களுக்கான பாக்கள் இவற்றுள் அடக்கம்.

கச்சி திருமேற்றளியில் (பிள்ளையார் பாளையம்) தவம் செய்து கொண்டிருந்த விஷ்ணு மூர்த்திக்கு, சம்பந்தப் பெருமான் சிவசாரூபம் அளித்த வரலாற்றையும் ஒரு பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

1. ஏகாம்பரேசுவரர் கோயில்

நகரில் உள்ள அனைத்துக் கோயில்களுக்கும் நடுநாயகமாக விளங்குவது, சிவனார் ஏலவார்குழலியுடன் வீற்றிருக்கும் கச்சி ஏகம்பம் எனப்படும் ஏகாம்பரேசுவரர் கோயில் ஆகும். “தேசமெல்லாம் புகழ்ந்திடும் கச்சித் திரு ஏகம்பன்” என்பார் மாணிக்கவாசகர்.

திருவொற்றியூரில் இரு கண் பார்வையையும் இழந்த சுந்தரர், இடக்கண் பார்வையைக் காஞ்சியில் திரும்பப் பெற்றார். இத்தலத்துப் பதிகத்தில், “ஏலவார் குழலாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற காலகாலனை, கம்பன் எம்மானைக் காணக் கண் அடியேன் பெற்றவாறே” என்று பாடுகிறார்.

“வஞ்சி வெருவி ஓடித் தழுவ வெளிப்பட்ட கள்ளக் கம்பன்” என்றும் நிந்தா ஸ்துதி செய்கிறார்.

காஞ்சியில் இறைவன் ஏகாம்பரேசுவரர் என்று பெயர் பெற்றதன் காரணத்தை அறிவோம். கயிலையில் அம்பிகை விளையாட்டாக இறைவனின் கண்களை மூட, சூரிய-சந்திரராகிய இரு கண்களும் இருண்டு பிரபஞ்சமே இருளில் மூழ்கியது. இதற்குப் பரிகாரமாக இறைவன் தேவியை தென் திசைக்குச் சென்று தவமியற்றும்படி கட்டளையிட்டார். இறைவி பத்ரிகாசிரமத்தில் காத்யாயன முனிவரின் மகளாய்ப் பிறந்து காத்யாயனி என்ற பெயருடன் வளரலானாள்.

அவளது அவதார காரணத்தை உணர்ந்து கொண்ட முனிவர் சில பொருட்களை அளித்து தென் திசைக்கு அனுப்பி வைத்தார். காஞ்சி வந்தடைந்ததும் முனிவர் கூறியபடி அப்பொருட்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. கங்கை மணலானது லிங்கங்களாகவும், விசிறி கிளியாகவும், ஜபமாலை வில்வ மாலையாகவும், சாமரங்கள் தோழிப் பெண்களாகவும் மாறின. தவம் செய்தற்குரிய தலம் இதுவே என்றுணர்ந்த அம்பிகை, கம்பை நதிக்கரையில் மணல் லிங்கம் அமைத்துப் பூஜை செய்ய ஆரம்பித்தாள்.

“கம்பராய்ப் பணி மன்னு புயம் பெறுகைக்குக் கற்புத் தவறாதே
கம்பை ஆற்றினில் அன்னை தவம்புரி கச்சி”
என்று பாடுகிறார் அருணகிரியார்.

[ஏகாம்பரர் எனும் பெயர் கொண்டு விளங்குபவரது பாம்புகள் நிறைந்த தோள்களைத் தழுவி இடப்பாகம் பெறும் பொருட்டு, கற்பு நிலை தவறாமல், கம்பை நதிக்கரையில் தவம் செய்திருந்த அன்னை வாழும் காஞ்சிப்பதி]

அம்பிகையைச் சோதிப்பது போல் இறைவன் தன் திருமுடியிலுள்ள கங்கையை இறக்கி விட்டார். நந்தி சைலம் எனும் மலை உச்சியிலிருந்து வெளிப்பட்ட பிரவாகத்தை, அன்னையின் தோழி, விசுவ பக்ஷணம் எனும் கபாலத்துள் அடக்கிவிட்டாள். பிரளயபந்தினி – பிரளயம் காத்த மாதா என்று இவளுக்கென கோயிலில் தனிச்சந்நிதி உள்ளது. இறைவன் மீண்டும் ஒரு முறை வெள்ளத்தைப் பெரும் பிரளயமாக வெளிவரச் செய்தார்.

லிங்கத்திற்கு ஆபத்து வந்துவிடக்கூடாது என்றெண்ணி, அன்னை லிங்கத்தின் மீது தன் வளைகளும் முலைகளும் அழுந்தப் பதியுமளவு ஆரத் தழுவிக்கொண்டாள். அதே நேரத்தில் இறைவன், நான்கு வேதங்களையே கிளைகளாகக் கொண்ட ஒரு மா மரத்தின் கீழ், தழுவக் குழைந்த தலைவனாகத் தோன்றி, அன்னைக்குக் காட்சி அளித்தார். ‘ஏக ஆம்ரேசுவரர்’ என்று பெயர் பெற்றார். [ஏக – ஒன்று, ஒப்பற்ற; ஆம்ர – மா]

“இறைவர் மாற்றற்ற செம்பொன் வடிவம் வேற்றுப் பிரிந்து
இடபமேல் கச்சி வந்த உமையாள் தன்
இருளை நீக்கத் தவஞ்செய்தருள நோக்கிக் குழைந்த இறைவர்”
– என்று காஞ்சியில் பாடுகிறார் அருணகிரிநாதர்.

“திணி இருள் அறுக்கும் சோதித் திருவுருக் குழைந்து காட்டி
அணிவளைத் தழும்பினோடு முலைச் சுவடணிந்தார் ஐயர்”
– காஞ்சிப் புராணம்.

பங்குனி உத்திர நன்னாளில் இறைவன் ஏலவார்குழலியம்மையை மணம் புரிந்து கொண்டார். கோயிலில் ஒன்பதாம் நாள் விழாவில் மாவடி சேவை எனும் ஐதிக விழாவில் வெள்ளி வாகனத்தில் மாவடிக் காட்சி அமைக்கப்பட்டுக் கொண்டாடப்படுகிறது.

கோயிலுக்குள் நுழையும் முன் வாகனங்கள் நிறுத்துமிடத்திற்கருகில் உள்ள குளமே அன்றைய கம்பையாறு என்பர். அருகில் ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. மண்டபத்தில் விகட சக்கர விநாயகரும் ஆறுமுகனும் உள்ளனர். ஒரு காலத்தில் இம்மண்டபமும் விநாயகரும் மணல்மேட்டில் மறைந்து கிடந்ததாகவும், அக்காலகட்டத்தில் இரட்டைப்புலவர்கள் தாங்கள் பாடிய ‘ஏகாம்பரநாதர் உலா’ எனும் நூலில் இவ்விநாயகர் பற்றிக் குறிப்பிடப்பட்டிருப்பதை அறிந்த அரசன், மண் மேட்டை அகழ்ந்து மண்டபத்தையும் விகட சக்கர விநாயகரையும் வெளிக்கொணர்ந்து மகிழ்ந்தான் என்றும் கூறுகிறார் மகாவித்துவான் சி. அருணை வடிவேலு முதலியார் அவர்கள்.

“விகட சக்கர விநாயகர்” எனும் பெயர்க்காரணம் பற்றிய ஒரு சுவையான புராணக்குறிப்பு உள்ளது.

வீரபத்திரர் தட்சன் வேள்வியை அழித்த போது, அவர் மேல் திருமால் தன் சக்கரத்தை ஏவினார். வீரபத்திரர் அணிந்திருந்த வெண்டலை மாலையில் [வெண்மையான தலை ஓட்டு மாலை] ஒரு வெண்டலை, அச் சக்கரத்தை வாயால் கௌவிக்கொண்டுவிட்டது. விஷ்வக்சேனர், பார்த்தவர்களுக்குச் சிரிப்பு வரும்படி விகடக்கூத்தாட எல்லோரும் வாய்விட்டுச் சிரித்தனர்; வெண்டலையும் சிரித்தது. அதன் வாயிலிருந்து விழுந்த சக்கரத்தை விரைந்து வந்து யாரும் அறியாவண்ணம் எடுத்துச் சென்று நின்று விட்டார் விநாயகர். இதை அறிந்த விஷ்வக்சேனர், தான் முன்பு ஆடிய விகடக்கூத்தை விநாயகர் முன்பு ஆடிய போது, அதை ரசித்த விநாயகர், சக்கரத்தைத் திரும்பக் கொடுத்தருளினார். எனவே, விகட சக்கர விநாயகர் என்று பெயர் பெற்றார்.

கச்சியப்ப முனிவர் தமது காஞ்சிப் புராணத்தில் “விகட சக்கர தந்தி மென் மலரடித் துணையே” என்று இவ்விநாயகரைப் போற்றியுள்ளார்.

அருணகிரிநாதர்,
“கனபெரும் தொப்பைக்கு எள் பொரி அப்பம்
கனி கிழங்கு இக்குச் சர்க்கரை முக்கண்1
கடலை கண்டப்பிப் பிட்டொடு மொக்கும் திருவாயன்
கவள துங்கக்கை கற்பக முக்கண்2
திகழு நங்கொற்றத்து ஒற்றை மருப்பன்
கரிமுகன், சித்ரப் பொற்புகர் வெற்பன்”

– என்று காஞ்சித் திருப்புகழில் விநாயகரைப் பலவாறாகப் போற்றுகிறார். [முக்கண் – 1. மூன்று கண்களை உடைய தேங்காய், 2. மூன்று கண்களை உடைய விநாயகர்]

கோயிலில் தெற்கு நோக்கியுள்ள ராஜ கோபுரம் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் காலத்தில் (1509) எழுப்பப்பட்டது என்பதை விதானத்திலுள்ள தமிழ் – தெலுங்கு கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. கோயில் நுழைவாயிலின் இருமருங்கும் ஆறுமுகனும் ஆனைமுகனும் காட்சியளிக்கின்றனர்.

கொடிமரத்தருகே காணப்படுவது திருக்கச்சி மயானேஸ்வரர் சந்நிதி. இச்சந்நிதி பற்றி அப்பர் பெருமான் பாடியுள்ளதால், அவரது காலமான கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதலே இக்கோயில் இருந்திருக்கிறதென்று தெரிய வருகிறது.

கச்சிமயானம் பற்றிய புராணக் குறிப்பு பின்வருமாறு:

பந்தகாசுரன் எனும் அசுரன் திருமால் முதலான அனைத்துத் தேவர்களுள்ளும் கலந்து அவர்களின் வீரியங்களை உணவாக உண்டு வந்தான். அனைவரும் சிவனாரிடம் தஞ்சம் அடைந்தனர். அவர், எல்லோரையும் யாகத் திரவியங்களாக மாறி, காஞ்சியில் சென்று குடியிருக்கும்படிக் கூறினார். தனது வலப்பாகத்தில், குண்டம் ஒன்று உண்டாக்கி, அதில் வாமதேவ மூர்த்தியை நெய் வடிவாக நிறைந்திருக்கச் செய்தார். பந்தகாசுரனையும் யாக திரவியங்களாக இருந்த அனைத்து உயிரினங்களையும் யாகாக்னியில் இட்டார். பந்தகாசுரன் நீங்கலாக, மற்ற அனைத்து உயிரினங்களையும் உயிர்ப்பித்தெழ வைக்கும் பொறுப்பை லலிதாதேவி யிடம் ஒப்படைத்தார். தேவியும் அப்படியே செய்ய, பிரமன் முதலான அனைவரும் உறங்கி எழுவது போன்று உயிர்த்தெழுந்தனர். பந்தகாசுரன் மட்டும் அழிந்தான். யாகாக்னியாய் ஜ்வலித்துக்கொண்டிருந்த சிவபெருமான் லிங்க ரூபமாய் விளங்கினார். “ஸ்மசானேச்வரர் – கச்சி மயானேஸ்வரர்” என்று பெயர் பெற்றார்.

கருவறையில் ஏகாம்பரேசுவரர், பிருத்வி லிங்கமாகக் காட்சி அளிக்கிறார். புனுகுச் சட்டம் சார்த்தப்படுகிறது. வெள்ளிக் கவசத்துடன் விளங்குகிறார். அபிஷேகம் ஆவுடையாருக்கு மட்டுமே. பின்புறச் சுவரில் ஏலவார்குழலி, முருகன் இவர்களுடன் இறைவன் சோமாஸ்கந்தராகக் காட்சி அளிக்கிறார். “சிந்தய மா கந்த மூல கந்தம் சேத ஸ்ரீ சோமாஸ்கந்தம்” என்ற கீர்த்தனையில் ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர், இத்தலத்தின் பெருமைகளைப் பாடியுள்ளார். “மனமே! மா மரத்தின் அடியில் அனைத்திற்கும் மூலமாய் விளங்கும் ஆதியை நீ தியானிப்பாயாக; சோமாஸ்கந்த வடிவில் அங்கு வீற்றருளுகிறார்.” என்று போற்றி, தொடர்ந்து சரணத்தில், “மாணிக்ய மய காஞ்சி சதனம்” என்றும் “ப்ருதிவி லிங்கம்” என்றும் போற்றுகிறார். [மாணிக்கங்கள் குவிந்துள்ள காஞ்சி நகரில் வீற்றருளுகிறார்; பிருத்வி லிங்கமாகக் காட்சி அளிக்கிறார்;]

மூலவருக்குத் திருப்புகழ் அடிகளைச் சமர்ப்பிக்கிறோம்.

“அமகர ஆசாம்பர அதுகர ஏகாம்பர
அதுல அன நீலாம்பரம் அறியாத
அநகர நாளாங்கிதர் தமை உமையாள் சேர்ந்தருள்
அறமுறு சீ காஞ்சி”

[அ-உ-ம = ஓம் எனும் பிரணவாகாரமானவரும், திகம்பரரும், அது என்று அஃறிணை நிலையிலும் போற்றப்படக் கூடியவரும், ஒப்பற்ற ஒருவனாய் மாமரத்தின் கீழ் உறைபவரும், தனக்குச் சமமான ஒருவரும் இல்லாதவரும், அன்ன ரூபம் கொண்ட பிரமன், நீல நிறமுள்ள ஆகாயத்தில் முடி தேடி அறியாத, பாவநாசகராகிய சிவனை, உமாதேவி சேரப்பெற்றதும், அவர் அளித்த இருநாழி நெல்லால் தேவி வளர்த்த முப்பத்திரண்டு அறங்கள் நிகழப்பெற்றதுமான ஸ்ரீ காஞ்சி] என்பது பொருள்.

கச்சி ஏகம்பன் பற்றிய சுவையான குறிப்பு ஒன்றை அப்பர் பெருமானது பதிகத்தில் காணலாம்.

“இலங்கை வேந்தன் இராவணன் சென்று தன்
விலங்கலை எடுக்க, விரல் ஊன்றலும்
கலங்கிக் கச்சி ஏகம்பவோ என்றலும் 
நலங்கொள் செலவு அளித்தான் எங்கள் நாதனே!”
என்று பாடுகிறார்.

[“ராவணன் செருக்குடன் கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க முயற்சி செய்ய, சிவனார், தன் கால்விரலைச் சற்று அழுத்தமாய் ஊன்ற, அவன் மிகவும் நடுங்கி, “கச்சி ஏகம்பனே!” என்று அபயக்குரல் எழுப்பிய அளவில், “நீ நலமுடன் செல்க” என்று அவனுக்கு விடையளித்து அனுப்பினார் எங்கள் தலைவனாம் ஏகம்பன்”]

மத்தள மாதவேச்வரர் [நந்தியைப் போன்று சிவ நடனத்தின் போது, மத்தளம் கொட்ட விரும்பிய திருமால் பூஜித்த லிங்கம்], மார்க்கண்டேசுரர் [பிரளய காலத்தின் போது, காஞ்சியில் தோன்றிய வேதஸ்வரூபமான மாமரத்தின் மேல் ஏறி அமர்ந்து அந்த மாவையும், மாவடியில் தோன்றிய ஈசனையும் கண்டு களித்த மார்க்கண்டேயர் பூஜித்த லிங்கம்], அகத்தீசுவரர் [காஞ்சி நகரில் சான்றோர்கள் மிகுந்திருந்ததால் தான் வெளியாக்க எண்ணியிருந்த தமிழை வெளிப்படுத்த வேண்டி அகத்தியர் சிவனைப் பூஜித்த லிங்கம்], இவை தவிரவும், பிரமன் பூஜித்த வெள்ளக்கம்பர், திருமால் பூஜித்த கள்ளக் கம்பர், ருத்ரர் பூஜித்த நல்ல கம்பர், அம்மை பூஜித்த பெரிய கம்பர் எனும் மூலவர் ஆகிய லிங்கங்களையும் தரிசித்து மகிழலாம். வாலி வணங்கிய வாலீச்சரம் என்ற ஒரு லிங்கம் விளங்குகின்ற சந்நிதியும் உள்ளது.

ஏகம்பருக்கு நேரே தனிச்சந்நிதியில் நிலாத்திங்கள் துண்டப் பெருமாள் வீற்றிருக்கிறார். இது, வைணவர்களின் 49 ஆவது திவ்ய தேசம் எனப்படுகிறது. பாற்கடலில் தோன்றிய விஷஜ்வாலையினால் திருமாலின் தேகம் சூடடைந்த போது, சிவாக்ஞையால், “எனக்கு நேரே இருக்கப்பெறுவாயானால், என் ஜடையிலுள்ள பிறைச்சந்திரனின் குளிர்ந்த கிரணங்கள் பட்டு வெப்பம் நீங்கும்” என்று கேள்விப்பட்டு, திருமால் அங்கேயே நின்றதாகக் கூறப்படுகிறது. அம்பிகையின் தவத்தைச் சோதிப்பதற்காக சிவபெருமானின் ஜடையிலிருந்து வெளிப்பட்ட ஜலப்பிரளயத்தைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு, விண்ணளாவி எழுந்த திருமாலின் கண்டத்தில், நிலவின் கிரணங்கள் பட்டு ஒளி வீசியதால் இப்பெயர் பெற்றார் என்றும் கூறப்படுகிறது. பல்லவ கோபுரத்தருகே திருமால் சிவனை வணங்கிய விஷ்ணுவேசுவரம் சந்நிதி உள்ளது. திருமாலை அருணகிரியார் போற்றும் திருப்புகழ்ப் பாடலை இங்கு பார்ப்போம்.

“குறியவன், செப்பப்பட்ட எவர்க்கும்
பெரியவன், கற்பிக்கப்படு சுக்ரன்
குலை குலைந்துட்க சத்ய மிழற்றும் சிறுபாலன்
குதலையின் சொற்குத் தர்க்கம் உரைக்கும்
கனகன் அங்கத்தில் குத்தி, நிணச் செங்
குடர் பிடுங்கி, திக்குற்ற முகச் சிங்க முராரி”

[வாமனாவதாரம் எடுத்தவரும், புகழப் படுகின்ற தேவர்களுள் மூத்தவரும், பிரகலாதனுக்குக் கல்வி கற்பிக்க வந்த சுக்ரர் பயத்தினால் நடுநடுங்கும்படி, “ஓம் நமோ நாராயணாய” எனும் மேன்மையான எட்டெழுத்தை ஜெபித்த சிறு குழந்தையாம் பிரகலாதனின் மழலைச் சொற்கு எதிர் வாதம் புரிந்து நாத்திகம் பேசிய இரணியனின் தேகத்தைக் குத்தி, அவனது மாமிசம் மூடிய சிவந்த குடலைப் பிடுங்கியவரும், எல்லாத் திக்குகளிலும் விளங்கும் முகங்கள் உடைய நரசிம்மரும், முரன் எனும் நரகாசுரனின் சேனாதிபதியைக் கொன்றவரும் (ஆகிய திருமால்)]

“பொறி விடும் துத்திக் கட்செவியில் கண்
துயில் கொளும் சக்ரக்கை கிரி சுத்தம்
புயலெனும் பொற்புப் பெற்ற நிறத்தன் ஜக தாதை
புனித சங்கத்துக் கைத்தல நிர்த்தன்
பழைய சந்தத்தைப் பெற்ற மடப்பெண்
புகலு கொண்டற்குச் சித்தி அளிக்கும் பெருமாளே”

[கண்ணையே செவியாகக் கொண்ட ஆதிசேஷனாம் பாம்பின் மீது யோக நித்ரை செய்பவர்; சக்ராயுதம் ஏந்திய மலை போன்ற உருவினர்; தூய மேகம் போன்ற அழகிய நிறமுடையவர், உலகத்தை ரட்சிக்கும் தந்தை, பரிசுத்த ஓங்கார நாதத்தை எழுப்பும் பாஞ்சஜன்யத்தை கையில் பிடித்திருப்பவர், காளிங்கன் மேல் நின்று நடம் ஆடியவர் ஆகிய திருமால்].

இங்கு, ‘பழைய சந்தத்தைப் பெற்ற மடப்பெண்’ என்று கூறுகிறார். சிவசக்திகள் நான்கினுள், சிவனாரின் புருஷ சக்தியாக விளங்குபவர் திருமால் எனும் பூர்வ நிலையைக் குறிக்கிறது. [அருட்சக்தி (பார்வதி), கோபசக்தி (துர்கை), போர் சக்தி (காளி), புருஷ சக்தி (விஷ்ணு)]

“அரியலால் தேவி இல்லை ஐயன் ஐயாறனார்க்கே” என்பது அப்பர் வாக்கு.
கருவூர்ப் பாடலொன்றில் இதுபோன்ற கருத்தைப் பாடுகிறார் அருணகிரியார்.
“வெற்றிப்பொடி அணி மேனியர், கோகுல சத்திக்கிடமருள் தாதகி வேணியர்”

[வெற்றியே தரும் திருநீற்றை அணிந்த திருமேனியர், ஆயர்பாடியில் வளர்ந்த திருமாலுக்கு தமது இடப்பாகத்தை அளித்த ஆத்திமாலை அணிந்த சடையர்]

“ஆரவாரமாயிருந்து” எனத் தொடங்கும் பொதுப்பாடலில்,
“நீரின் மீதிலே இருந்த நீலி சூலி வாழ்வு மைந்த”
என்று முருகனை விளிக்கிறார்.

[நீரில் பள்ளிகொண்டிருக்கும் நீல நிறத்தவளாம் வைஷ்ணவி ஆகிய பார்வதியின் மைந்தனே!]

“புகலு கொண்டற்குச் சித்தி அளிக்கும் பெருமாளே” என்று முருகனை அழைக்கிறார். காஞ்சி நகரில் உள்ள கச்சி திருமேற்றளியெனும் இடத்தில், சிவசாரூபம் வேண்டி திருமால் தவம் செய்து கொண்டிருந்த போது, முருகன், ஞானசம்பந்தராய்த் தோன்றி, திருமாலுக்கு சிவசாரூபம் அளித்த வரலாறு இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

“முருக புத்தேள் அருள்விழிப் பார்வை தன்னால்
மேற்றளியில் முகுந்தன் ஓர் இலிங்க மானான்”
– காஞ்சிப் புராணம், திருமேற்றளிப் படலம்.

ஏகாம்பரேசுவரர் கோயிலில் உள்ள ஒரு பரந்த மேடை மேல் பச்சைப் பசேல் என்று காட்சியளிக்கும் மாமரத்தடியில் சோமாஸ்கந்தர் வீற்றிருக்கிறார். மேடைக்கு ஏறிச் செல்லும் படி அருகில், முருகனும் விநாயகரும் வீற்றிருக்கின்றனர். அருகிலுள்ள மண்டபத்தில் மாவடிக் கந்தனுக்கென தனிச் சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. “கம்பை மாவடி மீதேய சுந்தர” என்று பாடுகிறார் அருண கிரியார். 2004 ஆம் ஆண்டு பழைய மாமரத்திலிருந்து திசுக்களை வைத்து மரபணு தாவர முறையில், புதிய கன்று ஒன்றை உருவாக்கி, திருக்கோயில் நந்தவனத்தில் நட்டனர். மண் தரப் பரிசோதனை செய்து, உரிய முறையில் பாதுகாத்து பழைய மரத்தை மீண்டும் உருவாக்கினர். வேளாண்துறையினராய் இப்பணி மேற்கொள்ளப்பட்டது.

சித்ரா மூர்த்தி

Tags : Kanjipuram ,Arunagiriya ,Tamil Nadu ,Kanji Managar ,
× RELATED சென்னையில் ஓர் உடுப்பி கிருஷ்ணர்!